கோவை,
உலக முழுமைக்குமான விடுதலைக்காகவும், சுரண்டலற்ற இந்தியாவை உருவாக்க செங்கொடியின் பாரம்பரியத்தின் படைதிரட்டி வெற்றி காண்போம் என மார்க்சிஸ்ட் கட்சியின் மத்தியக்குழு உறுப்பினர் ஏ.கே.பத்மநாபன் கூறினார்.உலகம் முழுவதும் உள்ள உழைப்பாளர்களின் திருநாளாக கொண்டாடப்படும் மே தின விழா செவ்வாயன்று கோவை மாவட்டத்தில் நூற்றுக்கணக்கான இடங்களில் எழுச்சியோடு கொண்டாடப்பட்டது. கோவை காந்திபுரத்தில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டக்குழு அலுவலகத்தில் நடைபெற்ற கொடியேற்றும் நிகழ்விற்கு கட்சியின் மாவட்ட செயலாளர் வி.இராமமூர்த்தி தலைமை தாங்கினார். இதில் மத்தியக்குழு உறுப்பினர் ஏ.கே.பத்மநாபன் பங்கேற்று மேதின கொடியேற்றி வைத்து சிறப்புரையாற்றினார். அப்போது அவர்பேசுகையில், உழைப்பாளி வர்க்கம் உலகம் முழுவதும் தனது உரிமைக்கான போராட்டத்தை இடைவிடாது நடத்திக் கொண்டிருக்கிறது.

அவர்கள் எந்த லட்சியத்திற்காக தங்களது வாழ்வை அர்ப்பணித்தார்களோ, அந்த போராட்டம் இன்னமும் தொடர்கிறது. 21 ஆம் நூற்றாண்டு துவங்கி 18 ஆண்டுகள் கழிந்தும் இந்த போராட்டம் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. அந்த போராட்டத்தோடு நம்மை ஒருமுகப்படுத்தி உலகம் முழுவதுமுள்ள மக்களின் தேசவிடுதலைக்காக, சுரண்டல் ஒழிப்பிற்காக, அசுமத்துவத்தை அழிப்பதற்காக நடத்தக்கூடிய இந்த போராட்டத்தை முன்னெடுத்து செல்வோம். நமது நாட்டை பொருத்த மட்டில் விவசாயிகள், விவசாய தொழிலாளர்கள், வேலை தேடுகிற இளை
ஞர்கள், சிறுகுறு தொழில் முனைவோர்கள், தொழிலாளர்கள், வியாபாரிகள் என அனைத்து தரப்பினரும் பாதிப்புக்குள்ளாகி உள்ள இந்த சமூக அமைப்பிற்கு எதிராக செங்கொடியின் தலைமையில் எல்ல வகையான உழைப்பாளி மக்களையும் திரட்டுவோம். சுரண்டலற்ற இந்தியாவை உருவாக்க செங்கொடியின் பாரம்பரியத்தை உயர்த்திப் பிடித்து படைதிரட்டி வெற்றி காண்பதற்கு இந்த மேதின நாளில் உறுதியேற்போம். இவ்வாறு ஏ.கே.பத்மநாபன் பேசினார். இந்த நிகழ்ச்சியில் கட்சியின் கிழக்கு நகரக்குழு செயலாளர் என்.ஜாகீர் உள்ளிட்ட ஏராளமனோர் பங்கேற்றனர்.

இதேபோல், மார்க்சிஸ்ட் கட்சியின் சார்பில் கோவையில் நூற்றுக்கும் மேற்பட்ட கிளைகளில் செங்கொடியேற்றியும் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கியும் மே தின விழா உற்சாகாக கொண்டாடப்பட்டது. மேலும், சிஐடியு சங்கத்தின் சார்பில் பஞ்சாலை, ஆட்டோ, சாலை போக்குவரத்து, கட்டிடம், முறைசாரா, டாஸ்மாக், ஹோட்டல், தையல், மின்வாரியம் சங்க அலுவலங்கள் மற்றும் பிஎஸ்என்எல், இன்சூரன்ஸ், தபால், வங்கி உள்ளிட்ட அரங்கங்களில் மேதின விழா எழுச்சியோடு கொண்டாடப்பட்டது.

முன்னதாக, இந்நிகழ்ச்சியில் மார்க்சிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு உறுப்பினர் சி.பத்மநாபன், நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் பி.ஆர்.நடராஜன், சட்டமன்ற முன்னாள் உறுப்பினர்கள் கே.சி.கருணாகரன், யு.கே.வெள்ளிங்கிரி உள்ளிட்ட பலர் பங்கேற்று கொடியேற்றி மேதின உரையாற்றினர்.

தீக்கதிர் அலுவலகம்
தீக்கதிர் கோவை பதிப்பு அலுவலகத்தில் நடைபெற்ற மேதின விழா நிகழ்ச்சிக்கு பதிப்பின் பொதுமேலாளர் எஸ்.ஏ.மாணிக்கம் தலைமை தாங்கினார். மார்க்சிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு உறுப்பினரும், பதிப்பின் பொறுப்பாசிரியருமான எம்.கண்ணன் மேதின செங்கொடியை ஏற்றிவைத்தார். இந்நிகழ்ச்சியில் தீக்கதிர் ஆசிரியர் கட்சி கிளையின் செயலாளர் அ.ர.ராஜா மற்றும் பதிப்பின் ஊழியர்கள் பங்கேற்றனர்.

Leave a Reply

You must be logged in to post a comment.