கோவை,
கோவையில் சட்டவிரோதமாக செயல்பட்டு வந்த குட்கா ஆலை முன்பு போராட்டத்தில் ஈடுபட்ட திமுகவினர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

கோவை மாவட்டம், கண்ணம்பாளையத்தில் சட்டவிரோதமாக பான், குட்கா போன்ற போதை பொருட்களை தயாரித்து வந்த தொழிற்சாலையில் கடந்த வெள்ளியன்று காவல்துறையினர் திடீர் சோதனை நடத்தி சீல் வைத்தனர். இந்த விவகாரம் தொடர்பாக வெளிப்படையான சோதனை செய்ய வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்திய திமுகவினர் 10 பேர் மீது எஸ்.பி.அலுவலகத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்நிலையில் கண்ணம்பாளையம் பேரூராட்சி முன்னாள் தலைவர் தளபதி முருகேசன், திமுக ஒன்றிய செயலாளர் செல்வராஜ், சண்முகம், இளைஞரணி செயலாளர் சுரேஷ் உள்ளிட்ட 7 பேரின் வீட்டிற்கு செவ்வாயன்று அதிகாலை சென்ற காவல்துறையினர் அவர்களை கைது செய்தனர். மேலும், திமுக தெற்கு மாவட்ட பொறுப்பாளர் நா.கார்த்திக் எம்எல்ஏ உள்ளிட்ட 3 பேரை கைது செய்ய காவல்துறை தீவிரம் காட்டி வருகின்றனர்.

இவர்கள் மீது பொது இடத்தில் கூடுதல், அனுமதியின்றி போராட்டம் நடத்துதல், அரசு அதிகாரியை பணி செய்ய விடாமல் தடுத்தல் உள்ளிட்ட 7 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் கைது செய்த அனைவரையும் கோவை புலியகுளம் பகுதியிலுள்ள சூலூர் நீதிமன்ற நீதிபதி வேடியப்பன் வீட்டில் ஆஜர்படுத்தினர். இதனையடுத்து கைது செய்யப்பட்ட 7 பேரையும் வருகிற மே 15ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். இதற்கிடையே அவர்கள் கைது செய்யப்பட்டதை அறிந்து திமுகவின் முன்னாள் அமைச்சர் பொங்கலூர் பழனிச்சாமி, மாநகர் வடக்கு மாவட்ட பொறுப்பாளர் முத்துசாமி, புறநகர் தெற்கு மாவட்ட செயலாளர் தமிழ்மணி, உள்ளிட்ட ஏராளமான திமுகவினர் நீதிபதி வீட்டிற்கு திரண்டு வந்தனர். பின்னர் கைது செய்யப்பட்டவர்களை அழைத்து சென்றபோது, அவர்கள் அரசுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பியதால் பரபரப்பு ஏற்பட்டது.

Leave A Reply

%d bloggers like this: