விதி எனும் சதி!
மண்ணைக் கீறினோம்
மலைகளைக் குடைந்தோம்
காற்றை அளந்தோம்
கடலைத் துழாவினோம்

சிற்பங்களை செதுக்கினோம்
சிந்தனைகளை விதைத்தோம்
வானை நிறைத்தோம்
வையம் உயர்த்தினோம்

உற்பத்தியைக் குவித்தோம்
உடைமைகளை பெருக்கினோம்
கோட்டைகளை எழுப்பினோம்
கோபுரங்களைக் கட்டினோம்

எண்ணற்ற எந்திரங்கள்
கணக்கற்ற கண்டுபிடிப்புகள்
புத்துலகு ஒளிர்கிறது
பூவுலகும் சிலிர்க்கிறது

அத்தனையும் ஆக்கிவிட்டு
அல்லும் பகலும் உழைத்துவிட்டு
களைத்துப்போன பொழுதினில்
களவாடியோர் களித்திருக்க….

சதி என்றும் அறியாமல்
விதி என்றே சகித்திருக்கும்
உழைப்பாளியே நிமிர்வாய்
உலகு குலுங்கிட எழுவாய்!

— சூர்யா, கோவை.

Leave A Reply

%d bloggers like this: