தீக்கதிர்

இந்துத்துவா கும்பலால் தாக்கப்பட்ட தலித் செயல்பாட்டாளர் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு!!

லூதியானா :

கடந்த ஏப்ரல் 13 தேதி இந்துத்துவா கும்பலால் தாக்கப்பட்ட தலித் சமூக செயல்பாட்டாளர் யஸ்வந்த் உயிருக்கு போராடி வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தார்.

DR.அம்பேத்கரின் பிறந்தநாளன்று பஞ்சாப் மாநிலம் பாஹ்வாரா நகரத்தின் கோல் சாவ்க் என்ற இடத்தில் அம்பேத்கர் ஜெயந்தியை அனுசரிக்கும் விதமாக அவர் உருவம் பதிக்கப்பட்ட பலகையை நிறுவினர். இதை எதிர்த்து அங்கு சென்ற இந்து  மதவெறி கும்பல் இரண்டு அம்பேத்கர் உருவம் பொதிந்த பலகையை நிறுவியவர்களின் மீது தாக்குதலை நடத்தியதோடு துப்பாக்கிச் சூட்டையும் நடத்தினர். இதில், யஸ்வந்த் மற்றும் குல்விந்தர் குமார் மீது குண்டுகள் பாய்ந்தன.

பின்பு லூதியானாவிலுள்ள தயானந்த் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த யஸ்வந்த் உயிரிழந்தார். இதுகுறித்து வழக்கு பதிவு செய்த அம்மாநில காவல்துறை இதுவரை நான்கு இந்து பிரிவைச் சார்ந்தவர்களை கைது செய்துள்ளனர்.

இதைத்தொடர்ந்து, பாஹ்வாரா நகரத்தின் பல பகுதிகளில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. தலித் செயல்பாட்டாளர்கள் பலர் மறைந்த யஸ்வந்த் அவர்களுக்கு நினைவகம் அமைக்கவும், கொல் சௌவ்க் என்ற அந்த நகரத்தின் பெயரை சம்விதனா சௌவ்க் என பெயர் மாற்றம் செய்யவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.