திருப்பூர்,
திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் திங்களன்று வாரந்திர மக்கள் குறைதீர் கூட்டம்ஆட்சியர் கே.எஸ்.பழனிச்சாமி தலைமையில் நடந்தது. திருப்பூர், பெருமாநல்லூரை அடுத்த வள்ளிபுரம் பசுமை நகர் பகுதியில் முறையாக குடிநீர் விநியோகம் இல்லாததை கண்டித்து அப்பகுதி பெண்கள் காலி குடங்களுடனும், தண்ணீர் வேண்டும் என்ற வார்த்தைகள் அடங்கிய பதாகைகளை ஏந்தியவாறும் தர்ணாவில் அமர்ந்தனர். இதையடுத்து ,பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் அவர்களை சமாதனப்படுத்தி மாவட்டஆட்சியரிடம் மனு அளிக்க அனுப்பி வைத்தனர். மனுவில் கூறியிருப்பதாவது: எங்கள் பகுதியில் 400க்கும் மேற்பட்ட வீடுகள் இருக்கின்றது. இப்பகுதியில் பல குழாய்கள் போடப்பட்டும், இதுவரை குடிநீர் விநியோகம் என்பது முறையாக கிடைக்கவில்லை. நீண்ட காலமாக குடிநீரை லாரி மூலம் விலைக்கு வாங்கி வருகிறோம்.

குடிநீருக்காக மாத சம்பளத்தில் ஒரு பகுதியை ஒதுக்க வேண்டியிருக்கிறது. இதுகுறித்து, பல முறை மனு அளித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. மேலும், இப்பகுதியில் சாக்கடை, தெரு விளக்கு, தார் ரோடு போன்ற எந்த அடிப்படை தேவையும் இதுவரை நிறைவேற்றப்படவில்லை. எனவே, இத்தகைய பிரச்சனைகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக்கேட்டுக்கொண்டனர். திருப்பூர் நல்லூர் நுகர்வோர் நல மன்றம் சார்பில் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது: திருப்பூர் மாநகர பகுதியில் உள்ள மெட்ரிக் பள்ளி, பிரைமரி, நர்சரி பள்ளிகளில் மாணவ, மாணவிகளிடம் தமிழ்நாடு அரசு நியமித்த கல்வி கட்டணத்தை விட அதிகமாக வசூலிக்கப்பட்டு வருகிறது. பெற்றோர்களிடம் அட்மிஷன் பீஸ்க்காக நன்கொடை ரூ.50 ஆயிரம் முதல் ரூ.1 லட்சம் வரை மறைமுகமாக பெற்றோர்களிடம் பெறப்பட்டு வருகிறது. எனவே, மாவட்ட ஆட்சியர் உத்தரவின் பேரில் அனைத்து மெட்ரிக் பள்ளிகளிலும், அந்தந்த வகுப்பு கட்டணத்தை தமிழில் விளம்பர பலகை மூலம் எழுதி வைக்க வேண்டும். மேலும், தனியார் பள்ளிகளில் ஏப்ரல் மாதம் முதல் மே மாதம் இறுதி வரை பள்ளிகள் கோடை விடுமுறை இல்லாமல் 10 முதல் 12 ஆம் வகுப்புகள் வரை கட்டாயப்படுத்தி பள்ளிக்கு வருமாறு பள்ளி நிர்வாகம் நடத்தி வருகிறது. எனவே, இத்தகைய பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

Leave a Reply

You must be logged in to post a comment.