நாமக்கல்,
நாமக்கல்லில் சிஐடியு சங்க தலைவரை பணியிடை நீக்கம் செய்த அரசு போக்குவரத்து கழக கிளை மேலாளரை கண்டித்து அனைத்து தொழிற்சங்கங்கள் சார்பில் கண்டன பொதுக்கூட்டம் நடைபெற்றது.

சிஐடியு நாமக்கல் மாவட்டத் தலைவராகவும், அரசு போக்குவரத்து கழகஊழியர் சங்க சேலம் கோட்டத் தலைவராகவும் செயலாற்றி வருபவர் பி.சிங்காரம். இவர் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக நாமக்கல் பணிமனையில் ஓட்டுனராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் இப்பணிமனையில் பணியாற்றி வரும் சிஐடியு சங்கத்தைச் சேர்ந்த சில ஊழியர்களுக்கு, போக்குவரத்து கழக கிளை மேலாளரான ராஜா விடுமுறை (ஆப்சென்ட்) எடுத்ததாக முறைகேடாக வருகை பதிவேட்டில் பதிவு செய்துள்ளார்.இந்த ஊழியர் விரோத நடவடிக்கை தொடர்பாக கடந்த ஏப்.25ம் தேதியன்று கிளை மேலாளர் ராஜாவிடம், சிஐடியு சங்க தலைவரான சிங்காரம் முறையிட்டுள்ளார். ஆனால், இப்பிரச்சனை தொடர்பாக அவர் முறையாக பதிலளிக்க மறுத்ததுடன், சிங்காரத்தை மிக தரக்குறைவாக பேசியுள்ளார். இதோடு மட்டுமின்றி அவரை பணியில் இருந்தும் விடுவித்து காலவரையற்ற பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டார். போக்குவரத்து கழக கிளை மேலாளரின் இந்த ஊழியர் விரோத மற்றும் அராஜக போக்கை கண்டித்து அனைத்து தொழிற்சங்கங்களின் சார்பில் ஞாயிறன்று நாமக்கல் பரமத்தி சாலையில் உள்ள அரசு போக்குவரத்து கழக நாமக்கல் கிளை முன்பு கண்டன பொதுக்கூட்டம் நடைபெற்றது. இப்பொதுக்கூட்டத்திற்கு சிஐடியு அரசு போக்குவரத்து ஊழியர் சங்கத்தின் நாமக்கல் கோட்ட கிளை செயலாளர் எஸ்.சுப்பிரமணியன் தலைமை வகித்தார். சிஐடியு சங்க நிர்வாகிகள் வி.செந்தில்குமார் வி.சீனிவாசன்பி.வரதராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இதில் சிஐடியு மாவட்ட உதவி தலைவர் புங்கொடி, போக்குவரத்து ஊழியர் சங்க சேலம் கோட்ட செயலளார் கிருஸ்ணன், எல்பிஎப் மாவட்ட செயலாளர் முருகேசன், அம்பேத்கர் தொழிலாளர் சங்கபொதுச்செயலாளர் கண்ணன், பாட்டாளி மக்கள் சங்கத்தின் அமைப்பு செயலாளர் பாலகிருஸ்ணன், ஏஐடியுசி மாவட்ட செயலாளர் தனசேகரன், ஓய்வுபெற்ற மின் ஊழியர் சங்கத்தின் மாவட்ட செயலாளர் பி.ராமசாமி ஆகியோர் கண்டன உரையாற்றினர். இந்த பொதுக்கூட்டத்தில் அனைத்து சங்கங்களைச் சேர்ந்த திரளானோர் கலந்து கொண்டனர்.

Leave A Reply

%d bloggers like this: