கோவை,
கோவையில் பல்வேறு இடங்களில் நடைபெற்ற கூட்டுறவுசங்க தேர்தலில் எதிர்கட்சியைச்சேர்ந்தோர் விண்ணப்பங்களைக்கூட பெற முடியாத அளவிற்கு அதி
முகவினர் அராஜகத்தில் ஈடுபட்டனர். மேலும், இதற்கு அதிகாரிகளும் உடந்தையாக இருந்ததால் எதிர்கட்சிகளைச் சேர்ந்தோர் போராட்டங்களில் ஈடுபட்டனர்.

கூட்டுறவு சங்கத்திற்கான தேர்தலில் தமிழகம் முழுவதும் அனைத்து பதவிகளையும் போட்டியிடாமலேயே கைப்பற்ற வேண்டும் என முனைப்பில் ஆளும் கட்சியான அதிமுகவைச் சேர்ந்தவர்கள் பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டு வருகின்றனர். இதுதொடர்பான உயர் நீதிமன்றத்தின் தலையீட்டின் காரணமாக கடந்த ஒருவார காலமாக தேர்தல் நிறுத்தி வைக்கப்பட்டது. இதனையடுத்து தேர்தல் நடத்தலாம், ஆனால் முடிவுகள் அறிவிக்கக்கூடாது என நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில் கோவையில் பல்வேறு இடங்களில் கூட்டுறவு சங்க தேர்தலுக்கான வேட்புமனுக்கள் திங்களன்று தாக்கல் செய்யப்பட இருந்த நிலையில் மார்க்சிஸ்ட் கட்சி, திமுக உள்ளிட்ட கட்சிகளைச் சேர்ந்தோர் தயாராக இருந்தனர். ஆனால் ஒவ்வொரு கூட்டுறவு சங்க அலுவலகம் முன்பும் எதிர்க்கட்சியினரை கூட்டுறவு சங்க அலுவலகத்திற்குள் விடாமல் தடுக்கும் ஏற்பாட்டை அதிமுகவினர் செய்திருந்தனர். இவர்களுக்கு ஆதரவாக காவல்துறையினரும், கூட்டுறவு சங்க அதிகாரிகளும் உடந்தையாக இருந்தனர்.

இதன்ஒருபகுதியாக கோவை டாடாபாத் பகுதியில் உள்ள சங்கனூர் கூட்டுறவு சங்க அலுவலகத்திற்கு மார்க்சிஸ்ட் கட்சி, திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சியினர் விண்ணப்பம் பெற வந்தனர். இவர்களை உள்ளே விடாமல் அதிமுகவினர் தடுத்து ரகளையில் ஈடுபட்டனர். இதனையும் மீறி அனைத்து கட்சியினரும் ஒன்றிணைந்து அலுவலகத்திற்குள் சென்றனர். இதனையறிந்த அதிகாரி உடனடியாக அங்கிருந்து ஓட்டம் பிடித்தார். இதனையடுத்து அனைத்துகட்சியினரும் அங்கேயே அமர்ந்து மாலை வரை போராட்டம் நடத்தினர். பின்னர் கூட்டறவு சங்க தேர்தலை புறக்கணிப்பதாக மார்க்சிஸ்ட் கட்சியின் வடக்கு நகரக்குழு செயலாளர் என்.ஆர்.முருகேசன் உள்ளிட்ட அனைத்து கட்சியினர் அறிவித்து வெளிநடப்பு செய்தனர்.

இதேபோல் கோவை வரதராஜபுரம் கூட்டுறவு சங்க தேர்தலிலும் அதிமுகவினர் எதிர்க்கட்சியினரை வேட்பு மனுக்கள் தாக்கல்செய்ய விடாமல் ரகளையில் ஈடுபட்டனர். இதனையடுத்து மார்க்சிஸ்ட் கட்சி உள்ளிட்ட எதிர்க்கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இச்சமயத்தில் மார்க்சிஸ்ட் கட்சியின் கிளை செயலாளர்நடராஜை, அதிமுகவினர் தாக்கினர். இதுதொடர்பாக காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இதன்பின்னர், சிபிஎம் சிங்கை நகர செயலாளர் வி.தெய்வேந்திரன் தலைமையில் ஏராளமானோர் கூட்டுறவு சங்கஅலுவலகத்தில் குவிந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்து அதிகாரிகள் அனைவரையும் வேட்பு மனுவை தாக்கல் செய்ய வைத்து ஒப்புகை சீட்டை வழங்கினார். மேலும், தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழக கூட்டுறவு பண்டக சாலைக்கு நடைபெற்ற தேர்தல் மற்றும் துடியலூர் சேரன் காலனி, கவுண்டம்பாளையம், வரதராஜபுரம், சுல்தான் பேட்டை உள்ளிட்ட அனைத்து இடங்களிலும் அதிமுகவினர் அராஜகத்தில் ஈடுபட்டனர். குறிப்பாக எதிர்க்கட்சியினருக்கு விண்ணப்பங்களை கூட வழங்குவதற்கு அனுமதிக்கவில்லை. இவர்களுக்கு உடந்தையாக அதிகாரிகளும் செயல்பட்டனர்.

இதைகண்டித்து பல்வேறு இடங்களில் சாலை மறியல் உள்ளிட்ட போராட்டங்கள் நடைபெற்றது. இதில் மார்க்சிஸ்ட் கட்சியின் பெரியநாயக்கன்பாளையம் ஒன்றிய செயலாளர் என்.பாலமூர்த்தி, சிஐடியு அரசு போக்குவரத்து ஊழியர் சங்கத்தின் தலைவர் ப.காளியப்பன், பொதுச்செயலாளர் எம்.அருணகிரிநாதன் மற்றும் திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சியினர் பங்கேற்று தங்களது எதிர்ப்பை தெரிவித்தனர்.

Leave a Reply

You must be logged in to post a comment.