ஈரோடு,
குடிநீருக்கு தொடர்ந்து தட்டுப்பாடு ஏற்படுவதால் ஓடத்துறை குளத்திற்கு கீழ்பவானி பாசனத்தில் இருந்து தண்ணீர் திறக்கக்கோரி திங்களன்று பொதுமக்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.

ஈரோடு மாவட்டம், பவானி வட்டம் ஓடத்துறை கிராமத்தில் அமைந்துள்ளது ஓடத்துறை குளம். ஈரோடு மாவட்டத்தில் உள்ள மிகப்பெரிய குளமாகும். கடந்த நான்கு ஆண்டுகளாக நிலவி வரு தொடர் வறட்சியின் காரணமாக இந்த குளம் வறண்டு கிடக்கிறது. இதனால் நிலத்தடி நீர் மட்டம் வெகுவாக குறைந்து 600 அடிக்கும் கீழ் சென்று விட்டது. இந்த குளத்தின் மூலம் 20க்கும் மேற்பட்ட கிராமங்களில் குடிநீர், கால்நடை, விவசாயம் அனைத்து தேவைகளையும் பூர்த்தி செய்யப்பட்டு வந்தது. தற்போது நீர் இல்லாததால் இக்கிராமங்கள் கடும் பஞ்சத்தை நோக்கி செல்லும் நிலை உருவாகியுள்ளது.

இந்த கோரிக்கையை ஏற்று உயர் நீதிமன்றம் பரிசீலித்து ஓடத்துறை மக்களுக்கு தேவையான நீரை திறந்துவிட பரிந்துரை செய்தது. அதன்படி நீர்வள ஆதாரத்துறை, மாவட்ட ஆட்சியர் ஆகியோர் இடத்தை ஆய்வு செய்தனர். அதேபோல், எல்பிபி வாய்க்காலில் பாசனத்திற்காக தண்ணீர் திறந்து விடப்பட்டு வாய்க்காலில் தண்ணீர் ஓடிக்கொண்டிருக்கிறது. ஆனால், சம்மந்தப்பட்ட துறைகள் ஒருங்கிணைந்து சரியான முடிவெடுக்காததால், தண்ணீர் திறப்பது தள்ளிப்போனது. தற்போது மீண்டும் எல்பிபி முதல் சுற்று பாசனத்திற்கு நீர் திறக்கப்பட்டுள்ளதால் மக்களின் தேவையைக் கருத்தில் கொண்டு, இந்த முறையாவது ஓடத்துறை குளத்திற்கு நீரை திறந்து விட மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். திறந்துவிடப்படும் நீரான குடிநீருக்காகவும், ஆழ்குழாய் கிணறுகளுக்கு நீர் ஊற்றுப் பெறவும் மட்டுமே பயன்படுத்திக் கொள்ளப்படும் எனக்கோரி ஓடத்துறை பொதுமக்கள் திங்களன்று மாவட்ட வருவாய் அலுவலர் ச.கவிதாவிடம் மனு அளித்தனர்.

Leave a Reply

You must be logged in to post a comment.