நாகர்கோவில்,
உடைத்த பாறாங்கற்களை அகற்றும் பணியில் ஈடுபட்டிருந்த பொக்லைன் இயந்திரத்தின் மீது பாறாங்கல் விழுந்து இயந்திரத்துடன் நசுங்கிய ஓட்டுநர் உயிரிழந்தார்.

கன்னியாகுமரி மாவட்டம் அருமனை அருகே துண்டத்துவிளையில் கல்குவாரி உள்ளது. இங்கு மலையோரம் உள்ளபெரிய பாறாங்கற்களை உடைத்து அகற்றும் பணி நடைபெற்றுவந்தது. புதுக்கடையை சேர்ந்த விஜூமோன்(32) என்பவர் சனிக்கிழமை காலை பொக்லைன் இயந்திரம் மூலம் பெரிய பாறாங்கற்களை அகற்றிக் கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக பக்கத்தில் இருந்த 10 டன்னிற்கு மேல் எடை கொண்ட ராட்சத பாறாங்கல் உருண்டு வந்தது. அது பொக்லைன் மேல் விழுந்தது. இதில் ஓட்டுநர் விஜூமோன் சிக்கிக் கொண்டார். கால்நசுங்கிய நிலையிலும் சுயநினைவுடன் காணப்பட்டார். ஆனால், அவரை வெளியே மீட்க முடியவில்லை. அதிர்ச்சியடைந்த கல்குவாரி தொழிலாளர்கள் கூச்சலிட்டனர். அப்பகுதியில் பொது மக்கள் திரண்டனர்.

பாறாங்கல்லுக்கு அடியிலிருந்து விஜூமோனை காப்பாற்ற மேற்கொண்ட முயற்சி பலனளிக்கவில்லை. இதைத் தொடர்ந்து தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. குழித்துறை தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு வந்தனர். ஆனால் பாறை இடிபாட்டில் இருந்து மீட்க முடியாமல் சிரமம் ஏற்பட்டது. குலசேகரம் தீயணைப்பு நிலையத்தில் இருந்தும் வீரர்கள் வந்து மீட்க முயன்றனர். பாறாங்கல்லை அதில் இருந்து அகற்றி இடைவெளி பகுதியில் இருக்கும் விஜூமோனை மீட்க மேற்கொண்ட முயற்சிகள் பலனளிக்கவில்லை. அவருக்கு குளுக்கோஸ் தண்ணீர் கொடுத்துக்கொண்டே இருந்தனர்.இதைத்தொடர்ந்து மாவட்ட தீயணைப்பு அதிகாரி சரவணபாபு தலைமையில் நாகர்கோவில், தக்கலை, குலசேகரம், குழித்துறை ஆகிய 4 தீயணைப்பு நிலையங்களில் இருந்தும் தீயணைப்பு வீரர்களும், தீயணைப்பு நிலையங்களில் பயிற்சி பெற்ற அவசரகால மீட்பு படையினரும் விரைந்தனர். 60க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் மீட்பு பணியில் ஈடுபட்டனர்.

ஆனாலும், மீட்க முடியாத நிலையில் குழித்துறை பாலம் அமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்த இயந்திரங்கள் கொண்டுவரப்பட்டு சிறிது சிறிதாக பாறாங்கல் துண்டிக்கப்பட்டு விஜுமோன் நள்ளிரவில் மீட்கப்பட்டார். உடனடியாக ஆசாரி பள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டார். இந்த நிலையில், ஞாயிற்றுக் கிழமை அதிகாலை 12.15 மணியளவில் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். தலை, மார்பு, வயிறு ஆகிய பகுதிகளில் பலத்த காயங்கள் ஏற்பட்டதால், அதிகளவில் ரத்தம் வெளியேறியுள்ளது. இதனால் அவருக்கு வழங்கப்பட்ட சிகிச்சையை உடல்ஏற்காமல் உயிரிழக்க காரணமாக அமைந்ததாக, மருத்துவர்கள் தெரிவித்தனர். இதுகுறித்து உயிரிழந்த விஜூமோனின் தந்தை கணேசன் அளித்த புகாரின் பேரில், அருமனை காவல் துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

Leave a Reply

You must be logged in to post a comment.