மதுரை,
நிர்மலாதேவி விவகாரத்தில் பல்கலைக்கழக முக்கியப் புள்ளிகளைக் காப்பாற்றுவதற்காக உதவிப் பேராசிரியர் முருகன் வேண்டுமென்றே சிக்க வைக்கப்பட்டுள்ளார் என்று அவரது மனைவி சுஜா குற்றம் சாட்டியுள்ளார்.

மதுரை காமராஜர் பல்கலைக்கழக உதவிப் பேராசிரியர் முருகன் சிபிசிஐடி காவல்துறையினரால் விசாரிக்கப்பட்டு தற்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்த நிலையில், சனிக்கிழமையன்று மதுரை சுற்றுலா மாளிகையில் நிர்மலாதேவி விவகாரம் குறித்து விசாரணை நடத்தி வரும்சந்தானம் விசாரணைக் குழுவை முருகனின்மனைவி மற்றும் குடும்பத்தினர் சந்தித்தனர். முன்னதாக முருகனின் மனைவி சுஜா செய்தியாளர்களிடம் கூறியதாவது:- நிர்மலாதேவி விவகாரத்தில் மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்திலுள்ள முக்கிய நிர்வாகிகளைக் காப்பாற்ற எனது கணவர் பலிகடா ஆக்கப்பட்டுள்ளார். முழுமையான விசாரணை நடைபெற்றால் மட்டுமே உண்மை தெரியவரும். பல்கலைக்கழக வளாகத்தில் நடைபெற்ற புத்தாக்கப் பயிற்சியின்போது நிர்மலாதேவி கலந்துகொண்டார்.

அப்போது கருப்பசாமியுடன் இணைந்து தங்குவதற்கு இட வசதி செய்து கொடுத்தது மட்டுமே உண்மை. இதில் நிர்மலாதேவியை கல்லூரிக்குள் அனுமதித்தவர்கள், அவரைக் கல்லூரி வளாகத்தில் வைத்து சுற்றிக் காண்பித்தவர்கள் என பலரைக் காப்பாற்ற என் கணவரை பலிகடா ஆக்கியுள்ளனர்.  இதில் தொடர்புடைய உண்மையான குற்றவாளிகளைக் கண்டுபிடிக்க வேண்டும். பல்கலைக்கழகத்தில் உள்ள முக்கியப் புள்ளிகளைக் காப்பாற்றுவதற்காக எனது கணவர் கைது செய்யப்பட்டுள்ளார். எங்களது குடும்பத்தினர் தலைமறைவாக இருக்க வேண்டும் என சிலர் போனில் மிரட்டினர். குற்றவாளிகளைத் தப்பிக்க வைப்பதற்காக எனது கணவர் குற்றவாளி ஆக்கப்படுகிறார். எங்களது குடும்பத்திற்கு தொடர்ந்து மிரட்டல் வருகிறது. காவல்துறை உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்றார்.

Leave A Reply

%d bloggers like this: