“காவிரியின் பால்சுரக்கும் அமுதக்கிண்ணம் – அதன்
கழனியெல்லாம் நெல் கொழிக்கும் மஞ்சள் வண்ணம்.“

என்று நம் கவிஞர் தணிகைச் செல்வன் பாமாலை சூட்டிய தஞ்சைத் தரணியில் பட்டுக்கோட்டை வட்டம், செங்கப்பத்தான் காடு. ஆம் காடுதான், வயல்காடுகளும் தென்னஞ்சோலைகளும் நிறைந்த பூமி அது. வங்கக்கடற்கரை ஓரம். அவன் வாழ்ந்த காலத்திலே மேட்டூர் வாய்க்காலில் காவிரித் தண்ணீர் வந்துவிட்டது. இந்த வாய்க்கால் உருவாவதற்கு முன்பு காவிரித் தண்ணீரை பட்டுக்கோட்டை பருகியதில்லை. நீர் நிறைந்த வயலிலே இறங்கி கூலிக்காக உழுது கொண்டிருக்கிறான் அந்த விவசாயி மகன். அவன் வாங்குவதோ அற்பசொற்பக்கூலி. அவன் உருவாக்கும் செல்வமோ கோமானின் இல்லத்தில் குவியும், மாடுகளைத் தூடி ஏர் பிடித்து வரும் அவனது உள்ளத்திலே ஓர் உணர்ச்சி பீறிடுகிறது. உள்ளத்திலே உண்மை ஒளி உண்டாகி, வாக்கினிலே
கவிதையாக மலருகிறது.

“தேனாறு பாயுது வயலில் செங்கதிரும் சாயுது
ஆனாலும் மக்கள் வயிறு காயுறு – அதிசயந்தான்
வகையாக இந்த நாட்டில் என்று மாற்ற முண்டாகுமோ?”

– ஏரோட்டும் அந்த ஏழை மகன் உள்ளத்திலே எழுகிறது உணர்ச்சிமயமான இந்தக் கேள்வி. காவேரி தண்ணீர் தேனாகப் பாயுதே, அதிலே நானும் இந்த மாடுகளும் உழைத்து செங்கதிரும் சாயுதே. ஆனாலும் எங்கள் வயிறு காயுதே! ஏன்? என்றைக்கு இந்த நாட்டில் வகையான மாற்றம் உண்டாகும்? இது தான் அந்த உழைப்பாளியின் மனதில் உதித்த முதல் கேள்வி. உழைக்கும் இந்தச்சிறுவன் சாதிக்க ஆரம்பித்துவிட்டான். அவன் மனதிலே ஒரு காட்சி. மதிய நேரம், கடுமையான வெயில் ஏர்களை நிறுத்திவிட்டு மனைவிமார்கள் கொண்டு வந்த கஞ்சியைக் குடிக்கிறார்கள் ஏருழவர்கள். அதிலே ஒரு ஜோடி இவன் கண் முன்னால் காட்சி தருகிறார்கள்; கஞ்சியை கணவன் குடிக்கிறான் அருகில் குந்தியிருக்கும் பெண்ணுக்கு ஒரு சந்தேகம் வந்து விடுகிறது.

“சும்மா கெடந்த நெலத்தக் கொத்தி
சோம்பலில்லாமல் ஏர் நடத்தி
கம்மாக்கரையை ஒசத்திக்கட்டி
கரும்புக்கொல்லையில் வாய்க்கால் வெட்டி
சம்பாப் பயிரை பறிச்சு நட்டு
தகுந்த முறையில் தண்ணீர்விட்டு
நெல்லு வெளைஞ்சிருக்கு – வரப்பும்
உள்ளே மறைஞ்சிருக்கு – அட
காடு வெளைஞ்சென்ன மச்சான் – நமக்குக்
கையுங் காலுந்தானே மிச்சம்”

கஞ்சியைக் குடித்துக்கொண்டே அவன் பதில் சொல்கிறான்:

“இப்ப
காடு வெளையட்டும் பொண்ணே – நமக்குக்
காலமிருக்குது பின்னே
பட்ட துயரினி மாறும் -ரொம்பக்
கிட்ட நெருங்குது – நேரம்”

அவள் விடவில்லை; மேலும் கேள்வியைத் தொடுக்கிறாள்:

“அவன் மாடா ஒழைச்சவன் வாழ்க்கையிலே – பசி
வந்திடக் காரணம் என்ன மச்சான்”

திட்டவட்டமான இந்தக் கேள்விகளுக்கு பதில் சொல்லாமல் அவன் நம்ப முடியாதே! பதில் சொல்கிறான்:

“அவன் தேடிய செல்வங்கள் வேறே இடத்திலே
சேர்வதினால் வரும் தொல்லையடி”

உழைப்பவன் உருவாக்கி குவிகின்றன செல்வங்கள் – அந்தத் தானியங்கள் – உணவுப்பண்டங்கள் – அவையெல்லாம் அவன் வீட்டுக்கு வரவில்லை. வேறே இடத்தில் போய்ச்சேருகின்றன. அதனால் தான் இந்தத் தொல்லை. எந்தத் தொல்லை? தேனாறு பாய்ந்த போதிலும் செங்கதிர் சாய்ந்த போதிலும் நம் அடிவயிறு காய்ந்து கொண்டே இருக்கும் தொல்லை! வறுமைக்குக் காரணத்தை பல கவிஞர்கள் பலவாறாகக் கூறியிருக்கிறார்கள். ஆனால் ஏரோட்டிய இந்த கவிஞனோ எதார்த்தமான மனிதன். இவன் உழைத்த செல்வத்தை வேறு ஒருவன் பறித்துக்கொண்டு போவது நேர் அனுபவம் அல்லவா? அதைப்பயன்படுத்துகிறார்.

கோபுரத்தின் உச்சியில் மேல இருந்துகொண்டு பார்த்தால் இந்த உண்மை தெரியாது. இந்த ஏருழவன் அப்படிப்பட்டவனல்லவே. அவன் தன் வாழ்க்கையின் யதார்த்தங்களை வெளியிடும் போது, இந்த சமுதாய வாழ்வின் வர்க்க நிலையைச் சொல்ல வேண்டிய அவசியம் தெளிவாக ஏற்படுகிறது. பச்சையாகவே சொல்லிவிடுகிறான்.

“நல்லவர் செய்த செயல்களிலே -பயிர்
நடனமாடுது வயல்களிலே – அது
நெல்லுக் கதிராகி முதிரும் நாளிலே
நிலமுதலாளிகள் கையிலே – போய்
நிறைந்திடும் மார்கழித் தையிலே”

அந்த “வேறொருவன்” யார் என்பதையும் நமது கவிஞன் மர்மமாக விடவில்லை. தெளிவாகவே தெரிவித்து விடுகிறான். “அவன் நில முதலாளி” என்று நிலத்தை முதலாகக் கொண்டிருப்பவன் என்று, இயற்கை தந்த நிலத்திற்குப் ‘பட்டா’ வாங்கி வைத்திருப்பவன் இவன். முதலாளி என்று பெயர் சூட்டி வறுமைக்குக் காரணம் இந்தப் புள்ளிதான் என்கிறான். இவனால் தான் எல்லாத் தொல்லையும் நிகழுகிறது என்று ஒரு முடிவுக்கு வருகிறான். மதியக்கஞ்சியை வயிற்றில் ஊற்றி பசியின் கோரத்தை ஓரளவுக்கு அடக்கி மீண்டும் வயலில் இறங்குகிறான் ஏருழவன். ஏரைப்பிடித்துக் காளைகளை விரட்டுகிறான் அவனது சிந்தனையோட்டம் மேலும் சுடர்விடுகிறது.

மந்த நடை போடும் மாடுகளைப் பார்க்கிறான்! அவனுக்கு கோபம் வருகிறது. அவனை அடிமைப்படுத்தி வைத்திருக்கிற அவனது எஜமானன் மீது ஆவேசம் பிறக்கிறது. பாடுகிறான்;

“மனுஷனை பார்த்திட்டு உன்னையும் பாத்தா
மாற்றமில்லேடா ராஜா – எம்
மனசிலே பட்டதை வெளியிலே சொல்றேன்
வந்தது வரட்டம் போடா – சில
(மனுஷனை)

சில மனுஷன் மாட்டுப் புத்தியுள்ளவர்கள் நில முதலாளிகளக்க நம் கவிஞனின் மனதில் நிற்கும் மனுஷன். அவன் எப்படிப்பட்டவன்? இவனுக்குத் தெரியும். அவனையும் இவனையும் இணைக்கிறான் எப்படி?

‘வசதியிருக்கிறவன் தரமாட்டான் – அவனை
வயிறு பசிக்கிறவன் விடமாட்டான்
அவன் தரமாட்டான்
இவன் விடமாட்டான்’

என்று முடிவுக்கு வருகிறான். ஆகவே இதில் சமரசம் இல்லை. அவன் தரமாட்டான்; இவன் விடமாட்டான். போராட்டம் நடத்தித்தான் ஆக வேண்டும் என்ற முடிவுக்கு வருகிறான். இந்த மகத்தான முடிவுடன் உழைக்கும் மக்களின் ஒன்றுபட்ட சக்திதான் ஊரைச் சுரண்டிக் கொழுப்பவரின் கொட்டத்தை ஒடுக்கும் என்ற தீர்க்கமான முடிவோடு விவசாய இயக்கத்திலே சேருகிறான். கூலிக்காக ஏரோட்டியாக வாழ்க்கையைத் துவக்கியநமது கவிஞன்.நிஜ வாழ்க்கையில் சொந்த வாழ்க்கையில் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் அனுபவ பூர்வமாக எடுத்து முடிவு இது.

Leave a Reply

You must be logged in to post a comment.