“தமிழ் மீது அன்புடையோர்கள்ஆன்மா மீது நம்பிக்கை இல்லாதவர்களாக இருக்கலாம்.ஆனால் ‘எழுத்தே ஆன்மா, படைப்பே ஆன்மா’ என்று வாழ்ந்த தமிழறிஞர் உவேசா அவர்களின் ஆசிரியர் மகாவித்துவான் மீனாட்சிசுந்தரம் பிள்ளை அவர்கள் கூட்டங்கூட்டமாக தமது மாணவர்களை ஊர்ஊராக அழைத்துச் செல்லும் பாங்கை நினைத்துப் பார்த்தல் இப்போதைக்கு இயலுமா? அவரது இச்செயல்பாடு வாழ்த்துதலுக்கு உரியது” என்று கூறி தமது சிறப்புரையைத் தொடங்கினார் தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் முன்னைத் துணைவேந்தர் முனைவர் ம. இராசேந்திரன்.

டாக்டர் உ.வே.சாமிநாதையர் நூல் நிலையம், சென்னை பல்கலைக்கழகத் தமிழ் மொழித்துறை இணைந்து உவேசா நூல் நிலையப் பவழ விழாவையொட்டி மகாவித்துவான் மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்களின் 203-வது பிறந்த நாளான ஏப்ரல் 6 அன்று சென்னை உவேசா நூல்நிலைய வளாகத்தில் “மீனாட்சி சுந்தரம் பிள்ளையவர்களின் வாழ்வும் தமிழ்ப்பணியும்”என்ற கருத்தரங்கத்தை நடத்தியது. அதன் தொடக்கவிழா சிறப்புரையில் மீனாட்சி சுந்தரனாரின் தலைமைப்பண்பை இவ்வாறு சுட்டிக்காட்டி உரையைத் தொடர்ந்தார் இராசேந்திரன். “மார்ச், ஏப்ரல் மாதங்களில் சொத்துக்கணக்கு தாக்கல் செய்யப்படுவது வழக்கம்.தமிழின் சொத்துக்கணக்கு என்ன என்று கேட்டால் எப்படி விடையளிப்பது?’“தமிழுக்கு மூன்று சொத்துக்கள்:” ஆறுமுக நாவலர், வள்ளலார், திரிசிரபுரம் மீனாட்சிசுந்தரம் பிள்ளை’ என்பதை எடுத்துச் சொன்னவர் 19-ஆம் நூற்றாண்டு தமிழறிஞர் வையாபுரிப்பிள்ளை.

சிதம்பரம் பிள்ளை என்ற தமது தந்தையாரின் முதலெழுத்தான ‘சி’ என்று கொள்ளாது தி. மீனாட்சி சுந்தரம்பிள்ளை என்று அவர் போட்டுக்கொண்டதற்கு என்ன காரணம்? ஒக்கூர் மாசாத்தியார் போல ஊர்ப்பெயரை முன்னிறுத்துவது சங்ககால மரபு. மீனாட்சிசுந்தரனாரின் பெற்றோர் சொந்த ஊரான மதுரையம்பதியை விட்டகன்று திரிசிரபுரம் மேற்கே காவிரியின் தென்பாலுள்ள எண்ணெய் கிராமம் சென்று தங்குகின்றனர். அதவத்தூரில் சொந்த வீட்டில் குடியேறியதால் திரிசிரபுரம் என்ற பெயரையே முதற்பெயராக்கிக் கொண்டார். ‘திரிசிரபுரம்’ 1876-ல் மறைந்தபோது 3,000 ரூபாய் பிறருக்குக் கடன்பட்டிருந்தார். குடும்பநிலையறிந்த திருவாவடுதுறை சுப்பிரமணிய தேசிகர் அவரது புதல்வர் சிதம்பரம் பிள்ளையை அழைத்து ‘கடன்களைத் தீர்த்துவிடாமல் இறந்து போனார் என்ற அபவாதத்தை’ தவிர்க்க கடன்களை மடத்தின் மூலம் அடைத்துவிட்டு அதற்கீடாக பிள்ளையவர்கள் சேர்த்து வைத்திருந்த புத்தகங்கள், மூன்று கட்டுப்பெட்டிகள் கொண்ட ஏட்டுச் சுவடிகளை மடத்துப் புத்தகசாலையில் சேர்த்து விட அறிவுறுத்தினார். அதன்படியே நடந்தது.

தமிழை வளர்க்கவும் மாணவர்களைப் பேணவும் இப்படிக் கடன்வாங்கி கடன்வாங்கி தமிழுக்கு மூலதனம் சேர்த்தவர் திரிசிரம்! உவேசா, திரிசிரம் இருவருக்கு முன்னரும் தமிழறிஞர்கள் வாழ்ந்ததுண்டு. ஆனால் இவர்கள் இருவரும் கொண்டாடப்பட என்ன காரணம்? திரிசிரம். உவேசா வாழ்க்கையைத் திசைதிருப்பிக் கற்றுக்கொடுத்தது வெறும் தமிழ் மட்டுமல்ல. பயணம் பண்ணவும்தான்! உவேசாவின் “என் சரித்திரம்” முழுவதும் தமிழ்ப்பயணம் விரவிக் கிடக்கும். திரிசிரபுரம் என்றும் பாடசாலை வைத்திருந்தவரல்லர். மாணவரை உடனழைத்துச் செல்லும் பண்பினால் பங்களூரு தமிழ்ப்புரவலர் தேவராசப்பிள்ளை அழைக்க மாணாக்கர்களும் பங்களூருக்கு இடம்பெயர்ந்தனர்!  தாம் பட்ட அவமானங்கள், சிறுமை தமது மாணாக்கர்களுக்கு வந்துசேரக்கூடாது என்று எண்ணிய பாங்கு வியக்கவைக்கும். பாடபேத ஆராய்ச்சி செய்து தமிழ்த் தொண்டு ஆற்றியவர். உவேசாவுக்கு வேங்கடராமன் என்ற இயற்பெயரைவிட திரிசிரம் இட்ட பெயரான சாமிநாதனே நிலைத்தது. இவ்வாறு ஆசிரியரே ‘அப்பா’வானார்! “ என்று சிறப்பித்து உரையாற்றினார் இராசேந்திரன்.

முதல் அமர்வுக்கான அறிமுகவுரை நிகழ்த்திய முனைவர் வாணி அறிவாளன் மகாவித்துவான் திரிசிரபுரம் வருவதன் நோக்கமே பாடம் கேட்பதும் சொல்வதும்தான். இறுதிமூச்சுவரை இதாகவே இருந்தது. ஒருமுறை மீனாட்சிசுந்தரம் பிள்ளை நாளுக்கு நானூறு செய்யுள் இயற்றும் திறன் கொண்டவர். ஆழ்ந்த தியானத்தில் இருந்த போதிலும் உள்ளுக்குள் அன்றைய பாடத்திட்டத்தை செய்யுளாகச் சொல்லி ஒருமுகப்படுத்தும் அளவுக்கு செயல் ஊக்கம் மிக்கவர் என்று சிலாகித்துக் கூறினார். அறிஞர் மு.வ.வின் மாணவரும், வைணவ உரைவளம் குறித்தும் மணிப்பிரவாள நடை குறித்தும் ஆய்வு செய்த அறிஞருமான பேராசிரியர் தெ. ஞானசுந்தரம் “மகாவித்துவானின் இலக்கணப் புலமை” பற்றி நகைச்சுவை பொங்க எடுத்துரைத்தார். “வினைத்தொகை என்பதற்கு எப்போதும் சுடுகாடு, ஊறுகாய் என்பதையே உதாரணமாகக் காட்டுகின்றோம். இது மாதிரி இல்லாமல் நான் வகுப்பு எடுப்பேன். பெயரெச்சம் என்பதற்கு சிவந்த மண், வினையெச்சம் என்பதற்குத் திரும்பிப் பார், உவமைத்தொகைக்கு தாமரை நெஞ்சம், உருவகத்துக்கு இதயகமலம் என்று திரைப்படப் பெயர்களைச் சுவையாகக்கூறினால் மாணவர்கள் எளிதாக விளங்கிக் கொள்வார்கள்” என்று தொடங்கி மகாவித்துவான் கடினமாகக் கற்று எளிமையாக விளக்கியவர் என்பதை விவரித்தார்.

எழுவாய் இன்றி இவர் எழுதிய பாணியைப் பெரிதும் பின்பற்றியவர் உவமைக் கவிஞர் சுரதா.ஆய்த எழுத்து உயிருமல்ல, மெய்யுமல்ல, தனிநிலை எழுத்து என்று எடுத்துக்காட்டுடன் உரைத்தவர். அன்மொழி, அவ்வழி, போலி, வழக்கு இலக்கணத்துக்கு எடுத்துக்காட்டுகள் தந்தவர், மாயூர புராணத்துக்கு அவர் எழுதிய அற்புதமான அவையடக்கம் மாபெரும் புலமையாளர் எனக் காட்டியது. “நால்வகை நிலத்துக்கும் உரியது பாலை” என்பதற்கு பொருத்தமான எடுத்துக்காட்டுகளுடன் விளக்கியதை “அகத்திணை” என்ற தமது நூலில் அருணாசலம் பிள்ளையும் (மதுரை காமராசர் பல்கலைக்கழக வெளியீடு ), தமிழகத்தில் நிலப்பாலை இல்லை; காலப்பாலையே உண்டு என்று வ.சுப. மாணிக்கனாரும் உறுதிப்படுத்தினார்” என்று கருத்துரை வழங்கினார்.

Leave a Reply

You must be logged in to post a comment.