புரட்சியின் இலக்கணமான அந்தோனியோ கிராம்ஷி, ஜான் பால் சாற்றே, பாப்லோ நெருடா மாயோ ஏஞ்சலோ, மார்செல்லோ முஷ்ட்டோ உள்ளிட்டோர்களையும் இன்னும் பல சிந்தனையாளர்களின் கருத்துக்களையும், எழுத்துக்களையும் தமிழுலகிற்கு அறிமுகம் செய்தவர் எஸ்.வி.ராஜதுரை. மார்க்சிய பெரியாரிய,அம்பேத்கரிய கருத்துக்களில் தன்னை முழுவதுமாக ஈடுபடுத்திக்கொண்டவர் எஸ்.வி.ஆர். தனது எழுத்துக்களாலும் மொழிபெயர்ப்புகளாலும் இடதுசாரி வாசகர்களை காந்தம் போல தன்னிடம் ஈர்த்துக்கொண்டவர்.உலகக் கவிதைகளைத் தமிழில் அறிமுகம் செய்து அறிவுலகை திரும்பிப்பார்க்க செய்தவர் எஸ்.வி.ஆர். உலகப்புகழ் பெற்ற துருக்கிய கவிஞர்நஸீம் `ஹிக்மத் முதல் தர்வீஷ் முகமது பாலஸ்தீன கவிஞர் முகமது தர்வீஷ் எனஎண்ணற்ற கவிஞர்களையும், கவிதைகளையும் தமிழ் அறிவுலகிற்கு அறிமுகம் செய்து திரும்பிப் பார்க்கச் செய்தவர்.

மிகவும் சிக்கலான சாமானியர்களுக்கு எளிதில் புரியாத தத்துவங்களையும், கோட்பாடுகளையும் தனது தெளிந்த நீரோடை போன்ற எழுத்தால் அனைவரிடமும் கொண்டு சேர்ப்பதே இவரின் தனிச் சிறப்பு.மேலும் எண்ணற்ற மொழிபெயர்ப்புகளை நமக்கு வழங்கிய எஸ்.வி.ஆர். அதில் காட்டிய ஆர்வமும் அக்கறையும் நம்மை வியப்பில் ஆழ்த்தும். ஆங்கில மூலத்தில் தாம் ரசித்து வாசித்த நூல்களையும், தமிழ்ச் சிந்தனை உலகிற்கு அவசியத் தேவை என தாம் கருதும் நூல்களை தமிழாக்கம் செய்ய மிகுந்த கவனமும் மெனக்கெடலும் செலுத்தி எந்த விதத்திலும் பிழை ஏற்படாதவண்ணம் அதீத கவனத்துடன் செயல்படுவார். சமீபத்தில் குன்னூரில் நடைபெற்ற புத்தகத் திருவிழாவில் மார்செல்லோ முஷ்ட்டோ எழுதிய நூல் ஒன்றை மொழியாக்கம் செய்த இவர் “அறிவுப் பயணத்தின் புதிய திசைகள்” எனும் தலைப்பில் வெளியிட்டார்.

இந்த நிகழ்வில் நம்மிடம் பேசிய எஸ்.வி.ஆர். “இந்த ஆண்டின்மிக முக்கிய நாளாக காரல் மார்க்சின் இருநூறாவது ஆண்டு நிறைவு விழா மே மாதம் ஐந்தாம் நாளில் நடைபெறவுள்ளது. உலகம் முழுவதிலும் உள்ள அறிஞர்களாலும் ,இடது சாரி இயக்கங்களாலும் கொண்டாடப்படவுள்ளது. மார்க்ஸ் ஒரு ஜெர்மானியர். அவரைப்போலவே அறிவுலகத்திற்கு ஜெர்மானியர்கள் அளித்த கொடைகள் ஏராளம், அதில் ஒருவர் குட்டன்பர்க். இவர்தான் 1469ல் முதன் முதலில் அச்சுக்கலையை கண்டுபிடித்தவர். அச்சு உருவாக்கம் என்பதையும், அச்சு இயந்திரத்தையும் இவர் தான் கண்டு பிடித்தார். அதன் பிறகுதான் புத்தகங்கள் வந்தன. பத்திரிகைகள் வந்தன. பின் ஐரோப்பாவில் மறுமலர்ச்சி இயக்கங்கள் தோன்றின.

மார்டின் லூதர் கிங் விவிலியத்தை லத்தின் மொழியில் இருந்து ஜெர்மன் மொழிக்கு மொழிபெயர்த்து சாமானிய மக்களும் படிக்கும் அளவிற்கு வகை செய்தார். எனவே புத்தகத் திருவிழாக்கள் போன்ற நிகழ்வுகளில் குட்டன்பர்க் என்ற அந்த ஜெர்மானியரை நினைவு கூர்வது அவசியமான ஒன்றாகும்” என்றார். புத்தகங்களோடும்,எழுத்துக்களோடும் தன் உலகை மாற்றிக்கொன்ட எஸ்.வி.ஆர்.உண்மை களப்போராளியும் கூட. உலகில் எந்த ஒரு மூலையில் வன்முறையும்,ஒடுக்குமுறையும், இனப்படுகொலையும் நிகழ்கிறதோ தொடர்ந்து கண்டனங்களைத் தெரிவிப்பவர் இவர் பல்வேறு மேனாட்டு அறிவாளிகளையும் , மேதைகளையும் அறிமுகம் செய்த இவர் தமிழ் அறிவுலகிலும் எம்.எஸ்.எஸ்.பாண்டியன் ,சிவானந்தன் உள்ளிட்ட பலரை அடையாளம் காட்டவும் தவறவில்லை. எழுபத்தாறு வயதைக் கடந்தும் இன்றளவும் தொடர் வாசிப்பாலும் எழுத்தாலும் வாழ்ந்து கொண்டிருக்கும் இவரது படைப்புகள் அறிவுலகில் தனித்துவம் கொண்டவை. இசை,ஓவியம் ,பத்திரிகை, விமர்சனம் எனப் பல துறைகளில் ஆர்வமும் நாட்டமும் செலுத்தும்எஸ்.வி.ஆரின் பங்களிப்பு காலம் கடந்து நிற்கும் என்பதற்கு அவரின் நூலும் நுட்பமான பேச்சும் சான்றுகளாகும்.

Leave a Reply

You must be logged in to post a comment.