சென்னை :

சென்னை மெரினா கடற்கரையில் விவசாயிகள் காவேரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரி அமைதியான வழியில் போராட அனுமதி கோரியிருந்த வழக்கில் நீதிமன்றம் நிபந்தனையுடன் கூடிய அனுமதி வழங்கியது. உடனடியாக தமிழக அரசின் சார்பில் அதனை எதிர்த்து மேல் முறையீடு செய்யப்பட்டிருக்கிறது. தமிழ அரசின் இந்த நடவடிக்கை தமிழக மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

கடந்த 2017ல் ஜல்லிக்கட்டுக்காக மிகப்பெரும் போராட்டத்தை மெரினாவில் தமிழக மக்கள் நடத்தினர். இதைத்தொடர்ந்து, மாநில அரசு திட்டமிட்டு இது போன்ற போராட்டங்களை ஒடுக்கும் வகையில் மெரினா கடற்கரை ஒரு பொழுதுபோக்குக்கான இடம் என்றும், இனிமேல் அதில் போராட்டங்கள் நடத்த அனுமதி வழங்கப்படாது எனவும் அறிவித்தது. இதை எதிர்த்து தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு சங்கத்தலைவர் அய்யாக்கண்ணு அவர்கள் தொடர்ந்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

அதில், அமைதியான வழியில் போராட்டம் நடத்துவது ஒவ்வொருவரின் உரிமை. அதனை அனுமதிக்க வேண்டும். மெரினாவில் 90 நாட்கள் போராட்டம் நடத்த அனுமதிக்க முடியாது. ஒரு நாள் போராட்டம் நடத்த காவல்துறை அனுமதிக்க வேண்டும். போராட்டத்தின் போது போராடுபவர்களுக்கு உரிய பாதுகாப்பு அளித்திட வேண்டும். எழுத்துரிமை, பேச்சுரிமையை வெளிப்படுத்த ஒவ்வொரு குடிமகனுக்கும் உரிமை உள்ளது என நீதிபதி டி.ராஜா தனது தீர்ப்பில் தெரிவித்திருந்தார்.

மேல் முறையீடு

இதையடுத்து உடனடியாக  காவல் துறை  இயக்குநர் மற்றும் உள்துறை செயலாளர் சார்பில் இந்த தீர்ப்பிற்கு தடை விதிக்க வேண்டும். மெரினாவில் போராட அனுமதி அளித்தால் சட்ட ஒழுங்கு பிரச்சனை ஏற்படும். இதே போல் மற்ற சங்கங்களும் போராட அனுமதி கேட்பார்கள் எனவே ஒரு நபர் அமர்வு பிறபித்த உத்தரவிற்கு தடை விதிக்க வேண்டும் என்று உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி அமர்வில் முறையிட்டனர். இது அவசர வழக்காக எடுத்து உடனே விசாரிக்க வேண்டும் என கோரினர்.

ஆனால் தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதிகள் மணிக்குமார், பவானி சுப்ராயன் ஆகியோர் அடங்கிய அமர்வில் முறையிட கோரினார். இதையடுத்து அந்த அமர்வில் முறையிட்டுள்ளனர். இன்றே மனு விசாரிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

போக்குவரத்து தொழிலாளர்கள் போராட்டத்தின் போது, போராட்டத்திற்கு எதிராக  பல்வேறு உத்தரவுகள் வழங்கி அமர்வு என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

You must be logged in to post a comment.