===க.சுவாமிநாதன்===                                                                                                                                                        பஞ்சாப் நேசனல் வங்கியில் நடந்தேறிய ரூ.13578 கோடி மோசடியில் தேடப்படும் நபர் நிரவ் மோடி ஆவார். அவர் பிப்ரவரியில் ஹாங்காங்கிற்கு தப்பி ஒடினார். அங்கிருந்து இலண்டனுக்கு போனார். அங்கு ஒரு மாதம் தங்கினார். தற்போது அமெரிக்காவிற்கு போய் இருப்பதாக செய்தி ( எகானமிக் டைம்ஸ் 27.04.2018)

நிரவ் மோடியின் “இன்பச் சுற்றுலா” பற்றிய அலுவல்ரீதியான அறிக்கை டைம்ஸ் ஆப் இந்தியா வசம் கிடைத்துள்ளதாம். நிரவ் மோடியின் குடும்ப மரத்தின் கிளைகளும், அவரால் பயன்படுத்தப்பட்ட நிறுவனங்களும் பணத்தை சுற்றுக்கு விடுவதற்கு ஹாங்காங் தான் தளமாகப் பயன்படுத்தப்பட்டதாக அது கூறுகிறது. இந்த அறிக்கை நிரவ் மோடியின் “ஒட்டத்தை” தேதி வாரியாக வர்ணிக்கிறது.ஜனவரி 1 அன்று நிரவ் மோடி முதலில் ஐக்கிய அரபு எமிரேடிற்கு தான் போனார். இந்திய புலனாய்வு அமைப்புகள் தேட (?) ஆரம்பித்தவுடன் பிப்ரவரி 2 அன்று ஹாங்காங்கிற்கு பறந்துள்ளார். நிரவ் மோடி, அவரது துணைவியார் அமி மோடி, சகோதரர் நிசல் மோடி மாமா மெகுல் சோக்கி ஆகியோர் மீது சி.பி.ஐ முதல் தகவல் அறிக்கை பதிவாகி இரண்டு நாட்களுக்குப் பிறகே இந்த ஒட்டம் நடந்துள்ளது. அவரின் நிறுவனங்களான டயமன்ட் ஆர் யு.எஸ், கோலார் எக்ஸ்போர்ட்ஸ், ஸ்டெல்லார் டயமன்ட்ஸ் ஆகியவற்றின் மீதும் அப்போது வழக்கு பதிவு செய்யப்பட்டது.

ஹாங்காங்கில் நீண்ட தங்கலுக்கு அவர் திட்டமிட்டாலும் பிப்ரவரி 14 அன்று லண்டனுக்கு பயணமானார். மறுநாள் அங்கு போய் சேர்ந்துள்ளார். லண்டனின் பாண்ட் ஸ்ட்ரீட் மெட்ரோ ஸ்டேசனிற்கு அருகில் ஃபோர் சீசன்ஸ் ஒட்டல் அருகில் ஒர் அபார்ட்மென்டில் ஒரு மாதம் தங்கியிருந்துள்ளார். அங்கிருந்து மார்ச் மூன்றாம் வாரத்தில் நியூயார்க்கிற்குப் பறந்துள்ளார். இந்திய பாஸ்போர்ட் முடக்கப்பட்ட பிறகும் எப்படி பறந்தார் என்ற கேள்வி எழுகிறது. பெல்ஜியம் பாஸ்போர்ட்டை அவர் பயன்படுத்தியதாக அவ்வறிக்கை கூறுகிறது. எத்தனை எத்தனை பாஸ்போர்ட்டுகளோ! இன்னும் எத்தனை எத்தனை நாடுகளோ!

நியுயார்க்கில் நிரவ் மோடியின் நண்பர்களும், கார்ப்பரேட்டுகளும் அவரை பார்த்துள்ளனர். இந்திய புலனாய்வு அமைப்புகள் நிரவ் மோடி தங்கியுள்ள இடத்தை நெருங்கி விட்டார்கள். லோயிஸ் ரீஜன்சி, 540-பார்க் அவென்யூ, 61வது தெரு, நியுயார்க் நகரம் என்ற இடத்திற்கு அருகில் இருக்கிறாராம். அது டைம்ஸ் ஸ்கொயர் அருகில் உள்ளதாம்.

இது ஏதோ அவர் தப்பித் தப்பி ஒடுகிற கதை என்று மட்டும் புரிந்துக் கொள்ளக் கூடாது. போகிற வழிகளில் பொந்துகளுக்குள் பணத்தைப் புதைக்கிற வேலையையும் செய்கிறார். ஹாங்காங்கில் இருந்த போது சன்சைன் ஜெம்ஸ் லிமிடெட், சைனோ டிரேடர்ஸ் லிமிடெட், அவுராஜெம் கம்பெனி லிமிடெட் ஆகிய நிறுவனங்கள் வாயிலாக இப்படி பண மோசடிக்கே ஏற்பாடு செய்திருக்கிறார். சி.பி.இ.எஸ்.டி நிறுவனமும் இந்த ‘டீலை’ செய்வதற்கு துணையாய் இருந்துள்ளது.இப்படி ஒரு திகில் கதையை அந்த அரசின் அலுவல் அறிக்கை எழுதியுள்ளது. நான்கு மாதங்களில் நான்கு நாடுகளுக்கு அவர் பறந்துள்ளார். மோப்பம் பிடித்து சுற்றுகிற நமது புலனாய்வு அமைப்புகளுக்கு அவரைத் திரும்ப இங்கு கொண்டு வருகிற வழி தெரியவில்லை!

வழி தெரியவில்லையா? அரசிடம் உறுதி இல்லையா?

இதோ இன்னொரு திகில் கதை                                                                                                                                          ஐ.டி.பி.ஐ வங்கியின் ரூ.600 கோடி மோசடியில் முன்னாள் ஏர்செல் ஸ்தாபகர் சி.சிவசங்கரன் உள்ளிட்ட 15 எக்சிகியூட்டிவ் அதிகாரிகள் மீது சி.பி.ஐ குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்துள்ளது. இந்த அதிகாரிகளின் பட்டியலைப் பார்க்கும்போது அவர்கள் ஐ.டி.பி.ஐ மட்டுமின்றி பல வங்கிகளின் டாப் எக்சிகியூட்டிவ்களாக இருக்கின்றனர் என்பது அதிர்ச்சியைத் தருகிறது.

உதாரணமாக கிஷோர் காரத் என்பவர் இந்தியன் வங்கியின் மேனேஜிங் டைரக்டராகவும், சீப் எக்சிகியூட்டிவ் ஆகவும் இருப்பவர். மெல்வின் ரீகோ என்பவர் இதே தலைமைப் பொறுப்புகளில் சிண்டிகேட் வங்கியில் இருப்பவர். ரீகோ, பேங்க் ஆப் இந்தியாவின் தலைமைப் பொறுப்பிலும் இருந்திருக்கிறார். இவர்கள் ஐ.டி.பி.ஐ வங்கியில் பொறுப்புகளை வகித்த காலத்தில் இம்மோசடி நடந்துள்ளது.சிவசங்கரனுக்கு சொந்தமான ஆக்செல் சன் ஷைன், வின் விண்ட் ஒய் ஆகிய நிறுவனங்கள் ரூ.600 கோடிகளுக்கு வங்கிக் கடன்களை வாங்கிவிட்டு கட்டவில்லை. ஆக்செல் நிறுவனம் பிரிட்டிவ் வெர்ஜின் தீவுகளைத் தலைமையகமாக கொண்டது. வின் விண்ட் ஒய் நிறுவனம் பின்லாந்தில் தலைமையகத்தைக் கொண்டது. இரு நாடுகளுமே “வரிச் சொர்க்கங்கள்” என்று கருதப்படுபவை. ஏமாற்றுபவர்களும், மோசடிக்காரர்களும் தஞ்சம் புகுவதற்காகவே பொருளாதார வானத்தில் வரிச் சொர்க்கங்கள் உருவாக்கப்படுகின்றன என்பது தெளிவாகிறது.

எப்படி சிவசங்கரன் நிறுவனங்கள் மோசடி செய்துள்ளன என்பதை முதல் தகவல் அறிக்கை விவரிக்கிறது.

அக்டோபர் 2010ல் ஐ.டி.பி.ஐ வங்கி ரூ.320 கோடி கடனை வின் விண்ட் ஒய் நிறுவனத்திற்கு தந்தது. பிறகு அந்நிறுவனம் பின்லாந்தில் திவால் நோட்டீஸ் கொடுக்கிறது. அந்தக் கடன் வராக் கடனாக அறிவிக்கப்படுகிறது. அதோடு முடிந்திருந்தால் கூட கதை சுவாரஸ்யமானதாக இருந்திருக்காது.

இங்கு தான் ஒரு ட்விஸ்ட் வருகிறது. சிவசங்கரனின் ஒரு நிறுவனம் திவால் நோட்டிசு கொடுத்து வராக் கடனாக அதன் பாக்கி அறிவிக்கப்பட்ட பின்னர் அவரின் இன்னொரு நிறுவனமான ஆக்செல் சன்சைனிற்கு ரூ.523 கோடிகள் கடன் வழங்கப்படுகிறது. அத்தொகை வின் விண்ட் ஒய் நிறுவனத்திற்கு பயன்படுத்தப்படுகிறது. இப்படி வங்கி பணம் அந்நிய முதலீட்டு விதி முறைகளுக்கு மாறாக வாரி இறைக்கப்பட்டுள்ளது.தற்போது நெருக்கடிக்கு ஆளாகியுள்ள வங்கிகளின் பட்டியலில் ஐ.டி.பி.ஐ வங்கியும் இணைந்துள்ளது. சில சொந்தக் கட்டிடங்களை விற்கத் துவங்கியுள்ளது. அண்மையில் 900 கோடிகளுக்கு ஒரு கட்டிடம் விற்கப்பட்டுள்ளது. இப்படியான விற்பனைகள் ரூ.4100 கோடிகளை தொட்டு விட்டதாம். அரசிடமிருந்தும் ரூ.106 கோடிகளை மறு மூலதனமாகப் பெற்றுள்ளது. இத்தொகை அரசு வங்கிகளுக்கு வழங்கப்பட்டுள்ள மறு மூலதனத் தொகைகளைக் காட்டிலும் அதிகமாகும்.

இதுவெல்லாம் வங்கிகளுக்கு திகில் தருகிறதோ இல்லையோ வங்கி சேமிப்புதாரர்களுக்கு திகில் தருகின்றன.

Leave a Reply

You must be logged in to post a comment.