ஸ்ரீநகர்:
கதுவா நிகழ்வு தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்ய இந்திய வழக்கறிஞர்கள் சங்கத்திற்கு எந்த அதிகாரமும் கிடையாது என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர்களில் ஒருவரும் ஜம்மு-காஷ்மீர் சட்டமன்ற உறுப்பினருமான முகமது யூசுப் தாரிகாமி கூறியுள்ளார்.கதுவா நிகழ்வு தொடர்பான வழக்கு, உச்ச நீதிமன்றத்தில் வியாழக்கிழமையன்று விசாரணைக்கு வந்தபோது, இந்திய வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் ஓர் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டதாகவும், அதில் “கதுவா சம்பவம் தொடர்பாக மத்தியக் குற்றப் புலனாய்வுக் கழகத்தின் (சிபிஐ) விசாரணை கேட்டு ஜம்மு- காஷ்மீர் வழக்கறிஞர்கள் கிளர்ச்சி செய்தது ‘நியாயமானதுதான்’ என்று கூறப்பட்டிருந்ததாகவும் செய்திகள் வெளியாகின.
இதனடிப்படையிலேயே வழக்கறிஞர்கள் சங்கம் என்ற பெயரில் அறிக்கை தாக்கல் செய்தவர்களை, முகமது யூசுப் தாரிகாமி கடுமையாக சாடியுள்ளார். இதுதொடர்பாக அவர் அறிக்கை ஒன்றையும் வெளியிட்டுள்ளார்.

“அதில், சிபிஐ விசாரணை கேட்டு அறிக்கை தாக்கல் செய்வதற்கு இந்திய வழக்கறிஞர்கள் சங்கத்திற்கு எந்த அதிகாரமும் இல்லை” என்று கூறியுள்ள தாரிகாமி, “இந்திய வழக்கறிஞர்கள் சங்கம், பாலியல் வல்லுறவுக்கு உள்ளாகி இறந்த சிறுமியின் பக்கம் நிற்கிறதா, அல்லது அக்கொடுமைகளை இழைத்த அயோக்கியர்களின் பக்கம் நிற்கிறதா?” என்று, தான் கேட்க விரும்புவதாகவும் தெரிவித்துள்ளார்.

உச்ச நீதிமன்றம், இந்திய வழக்கறிஞர்கள் சங்கத்திடம் இதுதொடர்பாக அறிக்கை எதையும் தாக்கல் செய்யுமாறு கேட்காது போது, வழக்கறிஞர்கள் முந்திக் கொண்டு அறிக்கை தாக்கல் செய்தது ஏன்? என்ற கேள்வியையும் எழுப்பியுள்ள அவர், “கதுவா விஷயத்தில் காவல்துறையினர் குற்றச்சாட்டு தாக்கல் செய்வதை, உள்ளூர் வழக்கறிஞர்கள் தடுத்தார்களா?” என்பதை மட்டுமே உச்ச நீதிமன்றம் கேட்டிருந்தது என்றும் குறிப்பிட்டுள்ளார்.

“மத்தியக் குற்றப் புலனாய்வுக் கழகத்திடம் விசாரணையை ஒப்படைக்க வேண்டும் என்று குற்றம் சாட்டப்பட்டவர்கள் தரப்புதான் கோரிக்கை விடுத்து வருகின்றனர்” என்பதைச் சுட்டிக்காட்டியிருக்கும் தாரிகாமி, “இவ்வாறு விசாரணை கோருவதற்கு குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு என்ன உரிமை இருக்கிறது?” என்று கேட்டுள்ளார். மேலும், “யார் புலன்விசாரணை செய்ய வேண்டும் என்று தேர்ந்தெடுக்கும் அதிகாரம் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு கிடையாது என்ற் நிலையில், குற்றம் சாட்டப்பட்டவர்களின் இத்தகைய சட்டவிரோதமான கோரிக்கைக்கு சட்டப்பூர்வ அந்தஸ்து அளித்திடவே இந்திய வழக்கறிஞர்கள் சங்கம் முயற்சிக்கிறது” என்ற குற்றச்சாட்டையும் முன்வைத்துள்ளார்.

வழக்கறிஞர்கள் சங்க அறிக்கையானது, “புலனாய்வு அதிகாரிகள் மீதும், அரசுத் தரப்பினர் மீதும் செல்வாக்கு செலுத்த முயற்சிக்கிறது என்பதுடன், பாதிக்கப்பட்டவர்க்கு ஒரு நியாயமான விசாரணை கிடைப்பதையும் அது மறுக்கிறது” என்றும் முகமது யூசுப் தாரிகாமி குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply

You must be logged in to post a comment.