நெல்லூர்:
ஆட்டோ ஓட்டினாலும், ‘ஹெல்மெட்’ அணிய வேண்டும் என்று ஆந்திர போலீசார் அரங்கேற்றிய அராஜகத்தை, சிஐடியு தலைமையில் திரண்ட ஆட்டோ ஓட்டுநர்கள் உடைத்தெறிந்தனர்.

போக்குவரத்து விதிமீறல் ஈடுபடுவது, ஓட்டுநர் உரிமம் இல்லாதது, வாகனத்தின் ஆவணங்கள் சரியாக இல்லாதது ஆகிய காரணங்களுக்காக ஆட்டோ ஓட்டுநர்களிடம் அபராதம் வசூலிப்பது நடைமுறையில் இருப்பதுதான். ஆனால், ஹெல்மெட் அணியவில்லை என்று கூறி, ஆட்டோ ஓட்டுநர்களிடம் அபராதம் வசூலித்த கொடுமை ‘ஹை-டெக் முதல்வர் சந்திரபாபு நாயுடு-வின் ஆட்சியில் நடந்துள்ளது. குறிப்பாக நெல்லூரில் ஆட்டோ ஓட்டுநர்களை விரட்டி விரட்டி அபராதம் விதித்துள்ளனர். ஒரு ஆட்டோ ஓட்டுநரிடம் ஒரே நாளில் 6 இடங்களில் அபராதம் வசூலித்து நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளனர்.

சில கார்ப்பரேட் டாக்ஸி நிறுவனங்கள் நெல்லூரிலும் ‘கடை’ திறந்துள்ளதால் அவர்களுக்கு சாதகமாக ஆட்டோ போக்குவரத்தை ஒழித்துக்கட்டும் முயற்சியாக இதை அவர்கள் செய்துள்ளனர்.இந்நிலையில், நெல்லூர் போலீசாருக்கு எதிராக கொந்தளித்த ஆட்டோ ஓட்டுநர்கள், புதன்கிழமையன்று சிஐடியு தொழிற்சங்கத்தின் தலைமையில் நூற்றுக்கணக்கானோர் போராட்டத்தை ஈடுபட்டனர். ஆட்டோ தொழிலை அழிக்க நடக்கும் முயற்சிக்கு கடும் எச்சரிக்கையும் விடுத்தனர்.இதையடுத்து, போராட்டக் களத்திற்கே வந்த காவல்துறை அதிகாரிகள், இனி இதுபோன்ற தவறு நடைபெறாது என ஆட்டோ ஓட்டுநர்களிடம் உறுதியளித்தனர். போராட்டத்தைக் கைவிடுமாறும் கேட்டுக் கொண்டனர். போலீசாரின் தங்களின் நடவடிக்கையை திரும்பப் பெற்றதால், ஆட்டோ தொழிலாளர்களும் போராட்டத்தை விலக்கிக் கொண்டனர்.

Leave A Reply

%d bloggers like this: