தஞ்சாவூர்:
வறட்சி பாதித்த மாவட்டமாக அறிவிக்கப்பட்ட தஞ்சை மாவட்ட விவசாயிகளுக்கு தலா ஒரு லட்சம் ரூபாய் வழங்க அரசுக்கு வேண்டுமென வழக்கறிஞர் வெ. ஜீவக்குமார் வழக்கு தொடர்ந்துள்ளார்.

தஞ்சாவூரை சேர்ந்த வழக்கறிஞர் வெ.ஜீவகுமார் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினராக உள்ளார். பல்வேறு நூல்களை எழுதியுள்ள இவர் பொதுமக்களுக்கான பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்து சென்றுள்ளார்.

இவர் சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில், ஒரு மனுவை தாக்கல் செய்துள்ளார். அம்மனுவில் கூறியிருப்பதாவது: “தஞ்சாவூர் மாவட்டத்தில் சிறு, குறு விவசாயிகள் அதிகளவில் உள்ளனர். ஆனால் கடந்த சில ஆண்டுகளாகவே, டெல்டா மாவட்டமான தஞ்சையில் இயற்கை பொய்த்ததால் விவசாயம் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் விவசாயிகள் வாழ்வாதாரத்தை இழந்து வாடுகின்றனர். பிழைப்பு தேடி வெளி மாவட்டங்களுக்கு விவசாயிகள், தொழிலாளர்கள் இடம் பெயர்ந்து வருகின்றனர். இம்மாவட்டத்தை வறட்சி பாதித்த மாவட்டமாக அரசு அறிவித்துள்ளது.

எனவே விவசாயிகள் இடம் பெயர்வதை தடுக்கவும், வாழ்வாதாரத்தை காத்திடவும், பாதிக்கப்பட்ட விவசாயிகள் அனைவருக்கும் தலா 1 லட்சம் வீதம் அரசு இழப்பீடு வழங்க உத்தரவிட வேண்டும்” என கூறப்பட்டிருந்தது.இந்த வழக்கு நீதியரசர்கள் சி.டி.செல்வம், பசீர் அகமது அமர்வு முன்பு புதன்கிழமையன்று விசாரணைக்கு வந்தது. இம்மனு தொடர்பாக தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்ட நீதியரசர்கள் வழக்கு விசாரணையை ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.

Leave a Reply

You must be logged in to post a comment.