ஐதராபாத்,
ஆந்திர அரசின் அதிகாரப்பூர்வ இணையத்தில் 1.3 லட்சம் பேரின் ஆதார் தகவல்கள் கசிந்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

அரசு வழங்கும் மானியங்களை பெற ஆதார் அவசியம் என்று தொடங்கி இன்று செல்போன் கம்பெனிகள் வரை ஆதார் கட்டாயம் என்ற சூழல் உருவாக்கப்பட்டுள்ளது. மனிதர்களுக்கு கொண்டு வரப்பட்ட ஆதார் திட்டத்தில் சில  இடங்களில் நாய்களுக்கு ஆதார் வழங்கப்பட்டு இருந்தது. இதுபோன்ற சூழலில் மீண்டும் மீண்டும் ஆதார் திட்டம் பாதுகாப்பான நடை முறை என்று மத்திய அரசு கூறி வந்தது.

இந்நிலையில் ஆந்திர அரசின் வீட்டு வசதி வாரிய இணையதள பக்கத்தில் 1.3 லட்சம் பேரின் ஆதார் தகவல்கள் முறையின்றி வெளியாகி இருக்கிறது. ஒருநபரின் ஜாதி, படிப்பு , வீட்டு முகவரி உட்பட பல தகவல்கள் பொதுவில் எல்லோரும் பார்க்கும் வகையில் இந்த தகவல்கள் வெளியாகி உள்ளது. யார் வேண்டுமானாலும் ஆந்திராவில் இருக்கும் இந்த 1.3 லட்சம் பேரின் விவரங்களையும் பார்த்துக் கொள்ள முடியும். 

கடந்த சில மாதங்களுக்கு முன் 500 ரூபாய்க்கு ஆதார் தகவல்கள் விற்கப்பட்டதில் இருந்து இந்த பிரச்சனை பெரிய அளவில் விவாதிக்கப்பட்டு இருக்கிறது. இதனால் ஆதார் தகவல்களை பாதுகாக்க என்ன மாதிரியான நடவடிக்கை எடுக்கப்பட்டு இருக்கிறது என்று உச்சநீதி மன்றம் கேள்வி எழுப்பியது. அதற்கு பதில் அளித்த மத்திய அரசு ஆதாருக்கு பாதுகாப்பாக 13 அடி அடர்த்தியான சுவர் இருப்பதாக உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. அந்த சுவர் இருக்கும் கட்டிடத்திற்குள்தான் ஆதார் தகவல்கள் வைக்கப்பட்டு இருக்கிறது. இதனால் ஆதார் தகவலை யாரும் திருட முடியாது என்றும் கூறியது. இது இணைய வல்லுநர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. கட்டிட சுவருக்கும் இணைய தகவல்கள் பாதுகாப்பிற்கும் என்ன சம்மந்தம் இருக்கிறது என்று தெரியாமலேயே ஒரு அரசு இருக்க முடியுமா என்ற கேள்வியை எழுப்பி வருகின்றனர்.

இந்நிலையிலேயே தற்போது  ஆந்திர அரசு இணையதளம் மூலம்  ஆதார் தகவல்கள் கசிந்திருப்பது மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

இந்த விவகாரம் கடும் சரச்சைக்குள்ளானதையடுத்து அந்த இணையதள பக்கத்தில் இருந்து தற்போது ஆதார் தகவல்கள் நீக்கப்பட்டு இருக்கிறது. இச்சம்பவம் நாட்டு மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Leave a Reply

You must be logged in to post a comment.