திண்டுக்கல், ஏப்.25
திண்டுக்கல் ஊராட்சி ஒன்றியம் தோட்டனூத்து ஊராட்சியில் கடந்த 3 ஆண்டுகளாக தீர்க்கப்படாத குடிநீர் பிரச்சனைக்காக 20 கிராமங்களைச் சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் காலிக்குடங்களுடன் திண்டுக்கல் நத்தம் சாலையில் 3 மணி நேரம் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து கடும் நெருக்கடிக்கு உள்ளானது.
திண்டுக்கல் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்டது தோட்டனூத்து ஊராட்சி. இந்த ஊராட்சிக்கு உட்பட்ட ரெண்டலப்பாறை, இந்திராகாலனி, ரெட்டியபட்டி, நல்லமநாயக்கன்பட்டி, அரசனம்பட்டி, அன்னை நகர், தோட்டனூத்து, அழகர்நாயக்கன்பட்டி. வாசிமலைநகர், புளியம்பட்டி, ஆர்.எம்.டி.சி.காலனி, ஜெய்நகர், அருணா மீனாட்சி நகர், மேட்டுர், சங்கனம்பட்டி, பாலமரத்துப்பட்டி, உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட கிராம மக்கள் பங்கேற்றனர். இந்த கிராமங்களில் கடந்த 3 ஆண்டுகளாக குடிநீர் பிரச்சனை நிலவுகிறது.
மாதத்திற்கு ஒரு நாள் குடிநீர் விநியோகம்
திண்டுக்கல்லில் இருந்து நத்தத்திற்கு காவிரி கூட்டுக்குடிநீர் திட்ட குடிநீர் குழாய்கள் செல்கிறது. இந்த குழாய்கள் மூலம் ரெண்டலப்பாறையில் உள்ள டேங்கில் மாதம் ஒரு முறை; தண்ணீர் ஏற்றி ஒரு நாள் மட்டும் விநியோகம் செய்யப்படுகிறது. மற்ற நாட்களில் தண்ணீர் விநியோகிப்பதில்லை. மேலும் இந்த கிராமங்களில் உள்ள சில ஆழ்துளை கிணறுகள் தண்ணீரின்றி வறண்டு கிடக்கின்றன. சில கிணறுகளில் தண்ணீர் இருந்தும் விநியோகம் செய்யப்படுவதில்லை. அரசனம்பட்டி, அழகர்நாயக்கன்பட்டி. புளியம்பட்டி, அன்னை நகர், ரெண்டலப்பாறையில் ஒரு பகுதி, நல்லமநாயக்கன்பட்டியில் பகுதிகளில் ஆழ்துளைக் கிணறுகளில் தண்ணீர் உள்ளது. மோட்டார் அடிக்கடி பழுதாகிறது. இதனால் தண்ணீர் இருந்தும் பொதுமக்களுக்கு விநியோகிக்கவில்லை. காவிரி கூடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு ரெட்டியபட்டியில் தினசரி ஆறு போல் தண்ணீர் வீணாகிறது. சங்கனம்பட்டியில் ஆழ்துளை கிணறு அமைப்பதற்கு நிதி ரூ.5 லட்சம் வரை ஒதுக்கீடு செய்தும் இதுவரை பணிகள் துவங்கவில்லை.
தனியார் – கூடுதல் விலைக்கு குடிநீர் விநியோகம்
இப்பகுதியில் தலைவிரித்தாடும் குடிநீர் பிரச்சனையையொட்டி தனியார் நிறுவனங்கள் தண்ணீரை அதிக விலைக்கு விற்கிறார்கள். அன்றாட கூலி தொழிலாளர்கள் குடிநீரை வாங்க தங்களது வருவாயில் அதிக நிதியை செலவு செய்ய வேண்டியுள்ளது. தனியார் தண்ணீர் நிறுவனங்களுக்கு ஆதரவாகவும், உடந்தையாகவும் அரசு அதிகாரிகள் திட்டமிட்டே காவிரி குடிநீர் குழாய்களை சேதப்படுத்துவதாக கூறப்படுகிறது. இதன் காரணமாகவே கிராமங்களில் உள்ள ஆழ்துளை கிணறுகளை, அதன் மோட்டார்களை சரி செய்து கொடுக்க அதிகாரிகள் மறுக்கிறார்கள். இதே போல பாலமரத்துப்பட்டியில் தனியாக ரேசன்கடை, அரசனம்பட்டியில் உள்ள ரேசன் கடைக்கும் மின் இணைப்பு, அரசணம்பட்டி, ரெட்டியவட்டியில் குளத்தில் சட்டவிரோதமாக எடுக்கப்படும் மண் கொள்ளையை தடுக்க வேண்டும். 15க்கும் மேற்பட்ட கிராமங்களில் பழுதாகி விழும் நிலையில் உள்ள மின் கம்பங்களை மாற்றிட வேண்டும் போன்ற கோரிக்கைகள் நிறைவேற்றப்படாமல் உள்ளன.
ஓப்பந்தத்தை மதிக்காத அதிகாரிகள்
இது தொடர்பாக பல முறை மறியல் போராட்டங்களுக்கு தேதி அறிவித்தும், பின்னர் அதிகாரிகளுடன் சமரச பேச்சுவார்த்தையில் பங்கேற்று அதிகாரிகளின் வாக்குறுதிகளை நம்பியும், எழுத்து மூலமாக ஏற்பட்ட உடன்பாட்டின் அடிப்படையிலும் போராட்டங்கள் வாபஸ் பெறப்பட்டுள்ளன, ஆனால் அதிகாரிகள் எழுத்துப்பூர்வமாக ஏற்றுக்கொண்ட கோரிக்கைகளை தொடர்ந்து நிறைவேற்றுவதில் சுணக்கத்துடன் செயல்பட்டதால் நிலைமை மேலும் சிக்கலுக்குள்ளானது. இதனையடுத்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பாக புதனன்று மறியலுக்கு திட்டமிடப்பட்டது. ஊர் முழுவதும் போஸ்ட்டர் அடித்து விளம்பரம் செய்தும் அதிகாரிகள் உறுதியான பதில் ஏதும் தராததால் மக்கள் திட்டமிட்டபடி சிபிஎம் தலைமையில் புதனன்று காலை மறியலில் பங்கேற்றனர்.
ஊர் சாட்டி செங்கொடியுடன் புறப்பாடு.;
ரெண்டலப்பாறை சர்ச்சில் மணி அடித்தும், இந்திரா காலனியில் விநாயகர் கோவில் ஊர் சாட்டி மக்களை மக்களை மறியலில் பங்கேற்க வைத்தனர். இதே போல் மற்ற கிராமங்களில் இருந்து புதனன்று காலையிலேயே செங்கொடியைப் பிடித்துக்கொண்டு படைபடையாக புறப்பட்டு மறியலுக்கு வந்தனர். காலை 8 மணிக்கே கிராம மக்கள் சாலையில் அமர்ந்தும், ;குடிநீர் கேட்டு கோஷமிட்டனர். இதன் காரணமாக போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. ரெட்டியபட்டியில் இருந்து திண்டுக்கல் சாலையில் திண்டுக்கல் வரையிலும், நத்தம் செல்லும் சாலையில் ஆர்.எம்.டி.சி. காலனி வரையிலும், அரசு மற்றும் தனியார் பேருந்துகள், வாகனங்கள் போக்குவரத்து பாதிக்கப்பட்டன. இதனையடுத்து டவுன் டி.எஸ்.பி. சிகாமணி, ரூரல் டி.எஸ்.பி. கோபால், ஆய்வாளர் ஜெயச்சந்திரன், சப்இன்ஸ்பெக்டர் இளஞ்செழியன், திண்டுக்கல் ஊராட்சி ஒன்றிய மேலாளர் சரவணன். வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பழனிச்சாமி, சுகுனா, உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்றனர்.
வாகனங்களுக்கு வழிவிட்டு மீண்டும் மறியல்
கிராம மக்கள் கோட்டாட்சியர் வராமல் இடத்தை விட்டு நகரமாட்டோம் என்று அறிவித்தனர். இதனையடுத்து கோட்டாட்சியர் வருவதாக கூறப்பட்டதையடுத்து மறியலில் ஈடுபட்டவர்கள் போராட்டத்தை விலக்கிக்கொண்டு வாகனங்களுக்கு வழிவிட்டனர்.
அமரர் ஊர்திக்கு வழிவிட்ட மக்கள்
போராட்டத்தின் போது வந்த அமரர் ஊர்திக்கும் வழிவிட்டனர். இதனையடுத்து கோட்டாட்சியர் வரவில்லை என்றவுடன் மீண்டும் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனையடுத்து கோட்டாட்சியர் ஜீவா, கிழக்கு வட்டாட்சியர் கற்பகம் ஆகியோர் வந்தனர்.
தனியார் குடிநீர் வாகனங்களுக்கு எச்சரிக்கை
சிபிஎம் கட்சியின் தலைவர்கள் கிராம பெரியவர்கள் கோட்டாட்சியரிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதனையடுத்து உடனடியாக டேங்கில் லாரிகள் மூலம் தண்ணீர் கொண்டு வந்து ஏற்றி வழங்குவது என்றும், விரைவில் காவிரிக்கூட்டுக்குடிநீர் கிடைக்க நடவடிக்கை எடுப்பதாகவும். 3 நாளில்ரெண்டலப்பாறையில் தேவையான அளவு ஆழ்துளை கிணறுகள் அமைப்பது என்றும், அரசு அனுமதியின்றி குடிநீர் விற்பனை செய்யும் தனியார் வாகனங்களை பறிமுதல் செய்வது என்றும், மற்ற கிராமங்களில் உள்ள குடிநீர் பிரச்சனையையும் 2 நாட்களுக்குள் முடித்துத் தருவதாக கோட்டாட்சியர் ஜீவா உத்தரவாதம் அளித்ததையடுத்து போராட்டம் விலக்கிக்கொள்ளப்பட்டது.
இந்த போராட்டத்திற்கு சிபிஎம் ஒன்றியச் செயலாளர் தா.அஜாய்கோஷ் மாவட்டக்குழு உறுப்பினர் பி.கே.கருப்புசாமி ஆகியோர் தலைமை வகித்தனர். மாவட்டக்குழு உறுப்பினர் என்.காந்தி. ரெண்டலப்பாறை ஊர் மணியம் ஆரோன், நாட்டாமை மனோகரன், ஆரோக்கியசாமி, இந்திரா காலனி ஊர் முக்கியஸ்தர்கள், சிபிஎம் ஒன்றியக்குழு உறுப்பினர்கள் எஸ்.ஜோசப், சரண்குமார், கிளைச் செயலாளர்கள் நல்லுச்சாமி, கோபால், கஸ்பர், தங்கமணி, கந்தசாமி, ஞானபாத்திமாமேரி, சுப்பம்மாள், தனமேரி, உள்ளிட்ட பலர் மறியலில் பங்கேற்றனர். (நநி)

Leave a Reply

You must be logged in to post a comment.