தேனி:
குரங்கணி தீ விபத்து சம்பவத்தில் தேடப்பட்ட முக்கிய குற்றவாளி பீட்டர் வான் கெயிட் போடி நீதிமன்றத்தில் சரணடைந்தார். தேனி மாவட்டம் போடி குரங்கணி தெற்கு
பீட் வனப்பகுதியில் கொழுக்குமலை அருகே ஒத்தைமரம் பகுதியில் மார்ச் 11 ஆம் தேதி ஏற்பட்ட காட்டுத் தீயில் சிக்கி மலையேறும் பயிற்சி மேற்கொண்ட 9 பேர் சம்பவ
இடத்திலேயே உடல் கருகி இறந்தனர்.மேலும் 14 பேர் சென்னை, மதுரை, ஈரோடு, கோவை மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு உயிரிழந்தனர். மொத்தம் 23 பேர் இறந்துவிட்ட நிலையில் இந்த சம்பவம்

குறித்து தொடக்கத்தில் ஈரோடு மாவட்டம் சென்னிமலை, காட்டூர் ரோடு பகுதியைச் சேர்ந்த தண்டபாணி மகன் பிரபு என்பவர் கொடுத்த புகார் வாக்குமூலத்தின் அடிப்படையில் சந்தேக மரணம் என போடி குரங்கணி காவல்நிலையத்தில் வழக்கு பதிவு செய்திருந்தனர்.

பின்னர் இந்த வழக்கின் பிரிவுகள் மாற்றப்பட்டு அனுமதி யின்றி மலையேறும் பயிற்சிக்கு அழைத்துச் சென்று மனித உயிருக்கு ஆபத்து ஏற்படுத்தியதாக சென்னை டிரக்கிங் கிளப் நிறுவனரும் பெல்ஜியம் நாட்டை சேர்ந்த வருமான மார்ஷல் மகன் பீட்டர் வான் கெயிட் (46), மேற்படி பிரபு மற்றும் தீ விபத்தில் இறந்த அருண் பிரபாகரன் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்தனர்.பிரபு இவ்வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் இருந்து வருகிறார். முதல் குற்றவாளி பீட்டரை போலீசார் தேடி வந்தனர். இதில் பீட்டர் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் முன் ஜாமீன் கேட்டு மனு செய்தார்.இந்த மனு ஏப்ரல் 12 ஆம் தேதி அனுமதிக்கப்பட்டு வழக்கு தொடர்பான நீதிமன்றத்தில் சரணடைந்து ஜாமீன் பெற்றுக்கொள்ள உத்திரவிடப்பட்டது. அதன் பேரில் புதன் கிழமையன்று பீட்டர் போடி குற்றவியல் நீதித்துறை நடுவர் ஆர்.மணிவாசகன் முன்னிலையில் சரணடைந்தார். இதனையடுத்து அவருக்கு இரு நபர்கள் அளித்த உத்தரவாதத்தின் பேரில் நிபந்தனையற்ற ஜாமீன் வழங்கி நீதிபதி உத்தரவிட்டார்.

Leave a Reply

You must be logged in to post a comment.