தேன்கனிக்கோட்டை:
கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை வட்டம் கல்கேரி கிராமத்தைச் சேர்ந்தவர் சுரேஷ். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கிளைச் செயலாளராகவும்
முன்னணி ஊழியராகவும் செயல்பட்டவர். கல்கேரி கிராமத்தில் நடைபெற்ற ஆலய நுழைவுப் போராட்டத்தில் முக்கியப் பங்கு வகித்ததால் ஆத்திரமடைந்த சாதி ஆதிக்கச் சக்தியினர் ,சுரேசை கடத்திப் படுகொலை செய்தனர்.

இந்நிலையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் புதன்கிழமையன்று சுரேஷின் இல்லத்திற்குச் சென்று , அவரது மனைவி மற்றும் மகளை சந்தித்து ஆறுதல் கூறினார். பின்னர் கே.பாலகிருஷ்ணன் செய்தியாளர்களிடம் கூறியதாவது: தோழர் சுரேஷ் கல்கேரி கிராமத்தில் நடைபெற்ற ஆலய நுழைவுப் போராட்டத்தில் முன்னின்று செயல்பட்டவர். அவரது மரணம் கட்சிக்கு பேரிழப்பாகும். தோழர் சுரேசின் குடும்பத்தினரை கட்சி முழுமையாக பாதுகாக்கும் . சுரேசை அவரது இல்லத்திலிருந்து அழைத்துச் சென்று திட்டமிட்டு படுகொலை செய்துள்ளனர். இதை திசை திருப்பும் முயற்சியில் காவல்துறையினர் ஈடுபடக்கூடாது.

யானை மிதித்து சுரேஷ் இறந்தார் என்று சில பத்திரிகைகளிலும், ஊடகங்களிலும் காவல்துறை மூலம் வெளிவந்துள்ள செய்தி முற்றிலும் உண்மைக்குப் புறம்பானது. இந்த சம்பவத்தில் காவல்துறையினர் உண்மை குற்றவாளிகளை கண்டுபிடித்து,வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து, குற்றவாளிகளுக்கு உரிய தண்டனை பெற்றுத் தருவார்கள் என்று நம்புகிறோம்.

இதனை மீறும் பட்சத்தில் நீதி கேட்டு, மாநில அளவில் போராட்டத்தை நடத்துவதோடு, நீதிமன்றத்திற்குச் சென்று சிபிசிஐடி விசாரணை கோருவோம்.
அத்தகைய நிலைக்கு கொண்டு செல்ல வேண்டாம் என்று காவல்துறைக்கு கே.பாலகிருஷ்ணன் அறிவுறுத்தினார்.

மேலும் அவர் கூறுகையில், சாதி ஆதிக்கச் சக்தியினரில் ஒரு சிலரின் ஆதிக்கவெறிக்கு சுரேஷ் பலியாகியுள்ளார். காவல்துறையினரின் விசாரணை முழுமையாக முடியவில்லை. மருத்துவப் பரிசோதனை அறிக்கையிலும், சுரேஷ் யானை மிதித்துத்தான் கொல்லப்பட்டார் என்று தெரிவிக்கப்படவில்லை. பலமான தாக்குதலால் மார்பு எலும்பு உடைந்து நுரையீரலில் குத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சுரேசை அழைத்துச் சென்ற சமூக விரோதி முருகேசன் இன்னமும் காவல்துறை வளையத்திற்குள்தான் இருப்பதாக கூறப்படுகிறது. அவர் ஒருவர் மட்டுமே இந்த  சம்பவத்தில் ஈடுபட்டிருப்பார் என்று கூறமுடியாது. அவருடன் யார் யாருக்கு தொடர்பு உள்ளது என்பதையும், உடனடியாக வெளி உலகிற்கு தெரியப்படுத்த வேண்டியதும் காவல்துறையின் கடமை என்று கூறினார்.

நடிகர் எஸ்.வி.சேகர் கைது செய்யப்படாதது குறித்த எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்த அவர், எஸ்.வி.சேகருக்கு தமிழக அரசின் தலைமைச் செயலாளர் மிக நெருக்கமானவர் என்பதால், காவல்துறை அவரை தேடும் முயற்சியிலும் ஈடுபடவில்லை, கைது செய்யவும் நடவடிக்கை எடுக்கவில்லை, இது வன்மையாக கண்டிக்கத்தக்கது என்று கே.பாலகிருஷ்ணன் கூறினார்.
இந்த சந்திப்பின் போது கட்சியின் மாநிலக்குழு உறுப்பினர்கள் ஜி.ஆனந்தன், டி.ரவீந்திரன், கே.சாமுவேல்ராஜ், தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கத்தின் மாநிலத் தலைவர் பி.டில்லிபாபு, சிபிஎம் கிருஷ்ணகிரி மாவட்டச் செயலாளர் எஸ்.ஆர்.ஜெயராமன், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் வி.சாம்ராஜ், ஆர்.சேகர், தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாவட்ட தலைவர் ஆனந்தகுமார், செயலாளர் எக்ஸ்.இருதயராஜ், தருமபுரி மாவட்ட செயலாளர் மாதையன், தேன்கனிக்கோட்டை செயலாளர் வெங்கடேசன் , மாவட்டக்குழு உறுப்பினர்கள் சேதுமாதவன், அனுமப்பா, விவசாயிகள் சங்க மாவட்டச் செயலாளர் பிரகாஷ், வாலிபர் சங்க மாவட்டச் செயலாளர் ரவி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

Leave a Reply

You must be logged in to post a comment.