ஈரோடு,
இலவச வீட்டுமனை பட்டா வழங்கக்கோரி ஈரோடு மாவட்ட ஆட்சியரை பொதுமக்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் தாலுகா கோணமூலைக் கிராமம், நஞ்சப்பகவுண்டன் புதூர் பகுதியில் 130 குடும்பங்களைச் சேர்ந்தோர் வசித்து வருகின்றனர். இவர்கள் அனைவரும் தலித் சமூகத்தைச் சார்ந்த விவசாய கூலி தொழிலாளர்கள். இவர்கள் அனைவரும் ஒரு வீட்டில் மூன்று குடும்பங்கள் வரை வசித்து வருகிறார்கள். ஆகவே, தங்களுக்கு அரசு சார்பில் இலவச வீட்டுமனை பட்டா வழங்கக்கோரி பல முறை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்நிலையில் செவ்வாயன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு திரண்டு வந்தனர். அப்போது மாவட்ட ஆட்சியர் எஸ்.பிரபாகர் காரில் ஏறி கிளம்ப முயன்ற நிலையில், அவரது காரை திடீரென முற்றுகையிட்டனர். இதனால் ஆட்சியர் அலுவலகத்தில் பெரும் பரபரப்பான சூழல் ஏற்படவே, அவர்களின் கோரிக்கைகள் குறித்து ஆட்சியர் கேட்டறிந்தார். இதில் நஞ்சப்பகவுண்டன் புதூர் பகுதியில் உள்ள அரசு புறம்போக்கு நிலத்தில் தங்களுக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி மனு அளித்தனர். இதனை பெற்றுக்கொண்ட ஆட்சியர் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததைத் தொடர்ந்து அனைவரும் கலைந்து சென்றனர்.

Leave A Reply

%d bloggers like this: