===ஏ.பி.அன்பழகன்===
2014 மே மாதத்தில் மத்தியில் ஆட்சி பொறுப்பேற்ற மோடி அரசின் 4 ஆண்டுகள் நிறைவு பெற உள்ளது. இக்காலங்களில் பாஜக அரசு எடுத்த நடவடிக்கைகள் சாதாரண ஏழை, எளிய, நடுத்தர மக்களை சொல்லொண்ணா துன்பத்திற்கு ஆளாக்கியுள்ளதென்றால் மிகையல்ல.

குறிப்பாக உழைக்கும் மக்களின் வாழ்க்கைத் தரம் பின்னோக்கி சென்றுள்ளது. இந்தியாவில் உள்ள பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு தாரை வார்க்கும் நிலையினை அதிவேகமாக அமலாக்கி வருகிறது. ஒட்டு மொத்த சாலைப் போக்குவரத்து தொழிலை கார்ப்பரேட் நிறுவனங்களிடம் ஒப்படைக்கும் விதத்தில் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.
உயிர் பலி விபத்துக்கள் ஏராளமாக நடப்பதை தடுக்கும் பொருட்டு “சாலை போக்குவரத்து மற்றும் பாதுகாப்பு மசோதா” என்ற விதத்தில் கடந்த 13.09.2014 அன்று இணையத்தில் வெளியிட்டது. அதில் விபத்துக்களை தடுப்பதற்கான நடவடிக்கை என்று கூற எதுவுமில்லை. போக்குவரத்து தொழிலை கார்ப்பரேட்டுகளிடம் ஒப்படைப்பதற்கான நடவடிக்கையாகவே இம்மசோதா உள்ளது.

இம்மசோதாவினை எதிர்த்து AIRTWF, CITU உள்ளிட்ட இடதுசாரி இயக்கங்கள் கிளர்ச்சி பிரச்சாரங்கள் நாடு முழுவதும் மேற்கொண்டதன் விளைவாகவும், 2015 ஏப்ரல் 30-ஆம் தேதி நடைபெற்ற வேலை நிறுத்தத்தில் 2.5 கோடிக்கு மேல் சாலை போக்குவரத்து தொழிலாளர்கள் பங்கு பெற்ற நிலையில், மத்திய அரசு மசோதாக்களை கிடப்பில் போட்டு வைத்தது. கடந்த ஓராண்டிற்கு முன்பாக இருக்கும் “மோட்டார் வாகனச் சட்டத்திலேயே” 92 திருத்தங்களை மேற்கொண்டு நாடாளுமன்றத்தில் மத்திய போக்குவரத்து அமைச்சர் நிதின் கட்காரி வாய்மொழியாக எடுத்துரைத்து, ஒப்புதலையும் பெற்றுவிட்டது பாஜக அரசு. மாநிலங்களவையில் ஒப்புதல் பெறப்பட்ட பின்பு தான் சட்டமாக்க முடியும்.

சிபிஐ(எம்) தோழர்கள் சீத்தாராம் யெச்சூரி, தபன்சென் (சிஐடியு), குலாம்நபி ஆசாத் (காங்கிரஸ்), கனிமொழி (திமுக), நவநீத கிருஷ்ணன் (அதிமுக) போன்றோர் சபையில் ஆட்சேபணை செய்ததின் விளைவாக “நிலைக்குழு”விற்கு அனுப்பப்பட்டது. சமீபத்தில் நாடாளுமன்றத்தில் காவிரி பிரச்சனை, ஆந்திர மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து, நீரவ் மோடி மோசடி போன்ற விஷயங்களையொட்டி ஏற்பட்ட கூச்சல், குழப்பங்களால் இம்மசோதா தாக்கல் செய்ய முடியாமல் போய் உள்ளது. சாலை போக்குவரத்து தொழிலாளர்களுக்கு என்றைக்குமே கழுத்தின் மீது கத்தி போன்ற சூழல் தான் உள்ளது. இந்நிலையில், மத்திய பாஜக அரசு, துறை உத்தரவுகளின் மூலம் பல வடிவங்களில், நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

தமிழகத்தில்…
இரண்டாம் உலகப் போருக்குப் பின் ஆங்கிலேயரால் இந்தியாவின் பொது போக்குவரத்துப் பற்றி ஆய்வு செய்ய 1944-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் ஒரு குழுவை மைய அரசு நியமனம் செய்தது. அக்குழு இந்தியா முழுவதும் இயங்கிக் கொண்டிருந்த போக்குவரத்து பற்றி ஆய்வு செய்தது. அப்போது தனியாருக்கு சொந்தமான பேருந்துகள் வியாபார அடிப்படையில் சுய லாபத்திற்காக இயங்கிக் கொண்டிருந்தது தெரியவந்தது.

பொதுமக்களுக்கு பயன்படுகின்ற வகையில், பேருந்து போக்குவரத்தை நாட்டுடைமையாக்க வேண்டுமென்று 1946 டிசம்பரில் அக்குழு மைய அரசுக்கு பரிந்துரைத்தது. அதன் அடிப்படையில் அனைத்து மாநிலங்களும் பேருந்து போக்குவரத்தை நாட்டுடைமையாக்க வேண்டுமென்று ஆணையிட்டது.

அவ்வாணையை ஏற்றுக் கொண்ட சென்னை மாகாண அரசு, மாநிலத்தின் தலைநகரான சென்னையில் அப்போது இயங்கிக் கொண்டிருந்த 239 தனியார் பேருந்துகளையும் நாட்டுடைமையாக்க வேண்டுமென்று 1947 மார்ச் திங்கள் 24-ஆம் தேதி ஆணையிட்டது.
சென்னையிலும் குமரி மாவட்டத்திலும் இயங்கி வந்த சென்னை மாநில போக்குவரத்துத் துறை கர்நாடக அரசுடன் ஒரு ஒப்பந்தம் செய்து கொண்டு, முதன் முறையாக 1959 ஆகஸ்டில் சென்னைக்கும் பெங்களூருக்கும் இடையே விரைவு பேருந்தை இயக்கியது. இந்நிலையில், கூடுதலாக பேருந்துகளை இயக்க பொதுமக்கள் வற்புறுத்தினர்.

அதன் அடிப்படையில், 120 மைலுக்கு மேற்பட்ட அனைத்து வழித்தடங்களிலும், தமிழகம் முழுவதும் உள்ள மாவட்டங்களின் தலைமையகங்களை இணைக்கின்ற வகையில், விரைவு பேருந்துகள் இயக்கப்பட்டன. அரசு போக்குவரத்து தமிழகம் முழுவதும் விரிவுபடுத்தப்பட்டது.
அண்ணா தலைமையில் தமிழ்நாட்டில் 1967-இல் புதிய ஆட்சி மலர்ந்தது. 1946-இல் கொண்டு வரப்பட்ட நாட்டுடைமைக் கொள்கை ஒரு சிறிய வட்டத்திற்குள்ளேயே செயல்பட்டு வந்தது. எனவே அண்ணாவின் புதிய அரசு, நாட்டுடைமை கொள்கைக்கு ஆக்கமும் ஊக்கமும் அளித்து தீவிரமாக அமல்படுத்தியது.

அதன்படி 1971 நவம்பர் 8-ஆம் நாளிட்ட அரசாணை எண். 86, தமிழ்நாடு அரசால் வெளியிடப்பட்டது. உத்தரவின்படி சென்னை மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் இயங்கி வந்த தமிழ்நாடு அரசுப் போக்குவரத்து பேருந்து இயக்கமும் நிர்வாகமும் 1956 கம்பெனி சட்டத்தின் கீழ் 01.01.1972 முதல் பல்லவன் போக்குவரத்துக் கழகம் என்று வரையறுக்கப்பட்ட நிறுவனமாக மாற்றப்பட்டது.

அதனைத் தொடர்ந்து பல்வேறு பெயர்களில் போக்குவரத்துக் கழகங்கள் உருவாக்கி செயல்பட்டு வந்தது. தற்போது 8 அரசு போக்குவரத்து கழகங்கள் உள் மற்றும் வெளி மாநிலங்களுக்கான போக்குவரத்து சேவைகளை மக்களுக்கு வழங்கி வருகின்றன. 8 கோட்டங்களின் கீழ் 21 மண்டலங்களாக பிரிந்து மாவட்ட அளவில் மக்களுக்கான பயணத் தேவையை பூர்த்தி செய்து கொண்டிருக்கின்றன போக்குவரத்துக் கழகங்கள்.

கழகங்களின் இன்றைய நிலை
மார்ச் 2016 முடிய 2,239 ஸ்பேர் பஸ்களை உள்ளடக்கி 23,078 பேருந்துகள் தமிழகம் முழுவதும் இயக்கப்பட்டு வருகின்றன. மாநிலம் முழுவதும் 319 பணிமனைகளை கொண்டும், தலைமை அலுவலகங்கள், ஒர்க் ஷாப்புகள் போன்ற பகுதிகளை உள்ளடக்கி 1,48,411 போக்குவரத்து ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர். குறிப்பாக ஓட்டுநர், நடத்துநர், டெக்னிக்கல் ஊழியர்களின் கடுமையான உழைப்பால் ஒரு லிட்டர் டீசலுக்கு 5.29 கி.மீ தூரமும், ரீபில்டு டயர் ஒன்று 2.01 லட்சம் கி.மீ தூரமும் இயக்கும் விதத்தில் தொழிலாளர்கள் பணிதிறன் உயர்ந்து வருகின்றன.

20.01.2018 தேதிய கட்டண உயர்வுக்கு முன்பு, நாளொன்றுக்கு சற்று ஏறக்குறைய 98 லட்சம் கி.மீ. தூரம் பேருந்துகளை இயக்கி 24 கோடியே 7 லட்சம் ரூபாய் அளவிற்கு நாளொன்றுக்கு வருமானம் ஈட்டி கொடுத்துள்ளனர். அதே போன்று தீபாவளி, பொங்கல் போன்ற பண்டிகை காலங்களில் சரியான முறையில் உணவு கூட மேற்கொள்ள முடியாமலும் உறக்கமின்றி இரவு பகலாக சிறப்பு பேருந்துகளை இயக்கி மக்களின் பயணத்தேவையை பூர்த்தி செய்து கொடுத்து, சுமார் 91 கோடி ரூபாய் அளவிற்கு, கடந்த ஆண்டில் மட்டும் கழக நிர்வாகங்களுக்கு வசூலித்து கொடுத்துள்ளனர்.

26.09.1991 தேதி அரசு ஆணை எண். 2552 உத்தரவின் அடிப்படையில் கணக்கிட்டால், வழித்தடங்களில் இயக்கும் பேருந்துகளில் சற்று ஏறக்குறைய 65 சதவிகித பேருந்துகள் வழித்தடத்தில் இயக்க லாயக்கற்ற தன்மையில் உள்ளது. இவ்வாறான பேருந்துகளை பராமரித்து, வழித்தடத்தில் இயக்கி மக்களின் பயணத் தேவையை பூர்த்தி செய்து கொடுத்து, அனைத்து மாநில போக்குவரத்துக் கழகங்களின் கூட்டமைப்பிடமிருந்து (ASRTU-DELHI) பல விருதுகளை தமிழக போக்குவரத்து கழகங்கள் பெற்றுள்ளன. கல்வித் தரத்தை மென்மேலும் உயர்த்த பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு சென்று வர 32 லட்சம் மாணவர்களுக்கு இலவச பஸ் – பாஸ் கொடுத்து வருகின்றோம்.

வஞ்சிக்கும் தமிழக அரசு
இவ்வாறு கடுமையாக உழைக்கின்ற போக்குவரத்து தொழிலாளர்களை வஞ்சிக்கும் போக்கில் தான் அதிமுக அரசு செயல்பட்டு வருகின்றன என்றால் மிகையல்ல.
ஓராண்டு ஊதிய ஒப்பந்தத்திற்கான போராட்டத்திற்கு பின்னரும் அரசு, தொழிலாளர்களின் நியாயத்தை மறுத்ததால் வேலை நிறுத்தம் நடைபெற்றது. வேலை நிறுத்தத்திற்கு பின்பு நிர்வாகம் பல்வேறு பழிவாங்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது. காவல்துறை பொய் வழக்கை காரணம் காட்டி தற்காலிக வேலை நீக்கம் செய்யப்பட்ட தொழிலாளர்களின் வேலை நீக்கம் விலக்கி கொள்ளப்படவில்லை. தேவையற்ற முறையில், 100 நாட்களுக்கு மேல் தற்காலிக வேலை நீக்கத்தில் வைக்கப்பட்டுள்ளனர்.

வேலை நிறுத்தம் முடிந்த பின்பு குற்றச்சாட்டை காரணம் காட்டி பதவி உயர்வு, பணி நிரந்தரம், பணிமனை மாற்றம், ரெவியு போன்றவை சுமார் 1,20,000 பணியாளர்களின் பலன்களை நிறுத்தியுள்ளனர். தொழிலாளர் அமைதியை சீர்குலைக்கும் அடிப்படையிலேயே கழக நிர்வாகங்கள் செயல்பட்டு வருகின்றன.

ஓட்டுநர், நடத்துநர் தொழிலின் தன்மையின் காரணமாக எங்கு தொட்டாலும் சிறு சிறு குற்றம் காண முடியும். இதைபற்றியெல்லாம் கவலை ஏதும்படாமல் சட்டத்திற்கு புறம்பாக இன்ன குற்றத்திற்கு இன்ன தண்டனை என நிர்ணயம் செய்து “தண்டனை வழங்க பட்டியலிட்டு” உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தொழிற்தகராறு சட்டம், நிலையாணைகள் சட்டம் போன்ற எதைப் பற்றியும் கவலைப்படாமல் சட்ட விரோத காரியத்தில் தமிழக அரசும், கழக நிர்வாகங்கள் ஈடுபடுவது சட்டத்தையே கேலி கூத்தாக்கும் பிற்போக்குத்தனமான நடவடிக்கையாகவே அமைந்துள்ளது.

கடந்த ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தையில் ஒப்புக் கொண்டபடி கழகங்களின் செலவீனத்திற்காக செலவு செய்யப்பட்ட தொழிலாளர்கள் பணத்தை உரிய கணக்கில் சேர்க்க எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. தொடர்ந்து மீண்டும் தொழிலாளர் பணத்தை செலவு செய்யப்படும் நிலை தொடர்கிறது. ஓய்வு பெற்றவர்களுக்கும் நிலுவைகள் மீண்டும் சேரும் சூழ்நிலை உருவாகியுள்ளது.

வேலை நிறுத்தத்தையொட்டி மேற்கண்ட பிரச்சனைகள் பெருமளவிற்கு விவாதிக்கப்பட்டு ஒட்டு மொத்த தமிழக மக்களும், அரசு மற்றும் கழக நிர்வாகங்களின் நடவடிக்கையை கண்டித்த பின்பும் மீண்டும் இதே காரியத்தை செய்வது வேண்டுமென்றே செய்யும் செயலாகவே கருதிட இடமளிக்கிறது.

ஊதியம் தவிர்த்து இதர ஒப்பந்த சரத்துக்களும் முழுமையாக அமலாக்கப்படவில்லை. பேச்சுவார்த்தையின் போது இனிமேல் ஒப்பந்தம் முறையாக அமலாகும். அரசு ஒப்புக் கொண்டதை நாணயமாக அமலாக்குவோம் என அமைச்சரும் அதிகாரிகளும் கூறியிருந்ததை அவர்கள் நினைத்து பார்க்க வேண்டும்.

கட்டண உயர்வால் பாதிக்கும் மக்கள்
போக்குவரத்துக் கழகங்கள் சேவைத்துறை அரசு உதவி செய்வதன் மூலமாகத்தான் இதை சிறப்பாக நடத்த முடியும். பொது போக்குவரத்து உலகம் முழுவதும் அப்படித்தான் நடக்கிறது.

இதைப் பற்றியெல்லாம் எவ்வித கவலையும் படாமல் கடந்த 20.01.2018 அன்று பேருந்து கட்டணம் உயர்த்தப்பட்டதால் நாளொன்றுக்கு 30 லட்சத்திற்கும் மேற்பட்ட பயணிகள் குறைந்துள்ளனர். மறுபுறத்தில் பல வழித்தடங்களில் தனியார் பேருந்துகளை விட கூடுதல் கட்டணம் வசூலித்து பயணிகளை தனியார் பேருந்துகள் உள்ளிட்ட வாகனங்களுக்கு செல்லும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. பல வழித்தடங்களில் சொகுசு, எக்ஸ்பிரஸ், நீண்ட தூர வழித்தடம் போன்ற காரணங்களை சொல்லி அரசு நிர்ணயித்த கட்டணத்தைவிட கூடுதலாக வசூலிக்கப்படுகிறது.

கூடுதல் பேருந்துகள் இயக்குவதை சரி செய்வதாகக் கூறி பல வழித்தடங்களில் தனியாருக்கு சாதகமாக பேருந்துகள் நிறுத்தப்பட்டுள்ளன. இது போன்ற ஒட்டு மொத்த நடவடிக்கைகளும் போக்குவரத்துக் கழகங்களை சீர்குலைக்கும் நடவடிக்கையாகவே அமைந்துள்ளது. குறிப்பாக 1972-ஆம் ஆண்டுகளுக்கு பிறகு, சுமார் 40 ஆண்டுகளுக்கு மேலாக தொழிலாளர்களின் கடும் உழைப்பால், கழகத்தில் பயணம் செய்யும் பயணிகளுடைய எண்ணிக்கை உயர்வடைந்தது.
ஆனால், அதைப் பற்றி எவ்வித கவலையும் படாமல் எடுத்த நடவடிக்கை போக்குவரத்து கழகங்களை பாதிப்பிற்குள்ளாக்கியுள்ளது.

இவை அனைத்தையும் முறைபடுத்தி போக்குவரத்து கழகங்களை பாதுகாக்கவும் பயணிகளின் எண்ணிக்கையை உயர்த்தவும் அரசு முயற்சி எடுக்க வேண்டும்.

அணி திரள்வோம்!
சென்னையில் டீலக்ஸ், எக்ஸ்பிரஸ், சாதாரண பேருந்து என மூன்று விதமாக பேருந்துகள் இயக்கப்படுகின்றன. அவை ஒவ்வொன்றும் பேருந்துகள் சேவை கட்டணம் அடிப்படையில் வித்தியாசப்படும். கடந்த காலங்களில் மேற்கண்டவாறு இயக்கப்பட்ட பேருந்துகள் சேவை, தரம் ஆகியவற்றில் வேறுபாடு இல்லாமல் சமீப காலத்தில் அனைத்து பேருந்துகளும் (சாலைகளில் வாகன பெருக்கத்தின் காரணமாக) சாதாரண பேருந்து போலவே நின்று செல்லும் சூழல் ஏற்பட்டுள்ளது.

மாநிலம் முழுவதும் ஏப்ரல் 2016-ன் கணக்கின்படி 2,20,33,780 வாகனங்கள் சாலையில் இயக்கப்படுகின்றன. சென்னை மாநகரத்தில் மட்டும் சுமார் 48 லட்சம் வாகனங்கள் பதிவு செய்யப்பட்டு சாலையில் இயக்கப்படுகின்றன.

இதனால், அதிக கட்டணம் செலுத்தி, சொகுசு மற்றும் விரைவு பேருந்துகளில் பயணிப்போர் நடத்துநர்களிடம் புலம்பும் நிலையே நீடிக்கிறது. மேலும் டீலக்ஸ் பேருந்துகளில் பயணிப்போர் எண்ணிக்கை மிக குறைவாகவே உள்ளது. சாதாரண கட்டணத்தைவிட, ரயில் கட்டணம் பாதியாக உள்ளதால், கடந்த மூன்று மாதங்களில் ரயில் பயணிகளின் எண்ணிக்கை வழக்கத்தைவிட 3 லட்சம் கூடியுள்ளதாக ரயில்வே நிர்வாகம் கூறியுள்ளது. ஷேர் ஆட்டோக்கள், கால் டாக்சி, சொந்த வாகனங்கள் (டூவீலர் / கார்) பயணத்தை மேற்கொண்டு வருவதால் எம்டிசி-யில் நாளொன்றுக்கு சுமார் 12 லட்சம் பயணிகள் எண்ணிக்கை குறைந்துள்ளது.

ஏற்கெனவே இருந்த கட்டணத்தை விட 20.01.2018 முதல் 60 சதவீதத்திற்கு மேல் கட்டணம் உயர்த்தப்பட்ட நிலையில், கூடுதல் வருமானம் வரும் என்று நிர்வாகம் எதிர்பார்த்தது. நாளொன்றுக்கு சராசரியாக எம்.டி.சி-யில் ரூ.2.25 கோடியாக ரூ.2.60 கோடியாக மட்டுமே வசூலாகும் நிலை உள்ளதென தெரிகிறது.

இதே போன்று தான் மாநிலம் முழுவதுமுள்ள மற்ற கழகங்களின் நிலைப்பாடுகள் உள்ளன. கூடுதலாகவே அரசு விரைவு போக்குவரத்து கழகத்திற்கு வருமானம் குறைந்துள்ளது.
மத்திய – மாநில அரசுகள் கடைப்பிடிக்கின்ற தவறான கொள்கைகளின் காரணமாக கழக நிர்வாகங்களின் நடவடிக்கை தொழில் அமைதியற்ற சூழ்நிலையை உருவாக்கி – தொழிலாளர்களையும் கழகத்தையும் அழிக்கும் மோசமான நடவடிக்கையாக மாறி வருகிறது.

மக்கள் பயன்படுத்தும் அரசு பேருந்து, ஆட்டோ, டாக்சி, மேக்சி கேப், டெம்போ, மினி டோர் போன்ற வாகனங்கள், சரக்கு வாகனங்கள் உட்பட பொது போக்குவரத்தின் கீழ் இயங்கும் தன்மை கொண்டது. மோட்டார் வாகன சட்டத் திருத்தத்தின் மூலம் (மசோதா) பொது போக்குவரத்தை கார்ப்பரேட்டுகளிடம் கொடுக்கும் முயற்சியே ஆகும். அதன் பகுதியாகவே OLA, UBER, LYNK போன்ற நிறுவனங்கள் தமிழகத்தில் முன்கூட்டியே இயக்கப்படுகின்றன. சட்டத் திருத்த மசோதா அப்ரூவல் ஆகும்பட்சத்தில் ஓரிரு வாகனங்களை வைத்து சுய தொழில் மேற்கொள்ளும் ஓட்டுநர்கள் கூட கார்ப்பரேட்டுகளிடம் கூலி அடிமைத்தனமாக பணிபுரியும் சூழலே ஏற்படும்.

பொது போக்குவரத்தை மேலும் பலப்படுத்தி மக்களின் பயணத் தேவையை பூர்த்தி செய்து கொடுக்க மத்திய – மாநில அரசுகள் முன் வர வேண்டுமென, பொதுமக்களும் போக்குவரத்து தொழிலாளர்களும் ஒன்றுபட்ட வலுவான போராட்டங்களுக்கு அணி திரள வேண்டுமென தமிழ்நாடு அரசு போக்குவரத்து ஊழியர் சம்மேளனத்தின் சார்பில் (சிஐடியு) அறைகூவி அழைக்கின்றோம்.

கட்டுரையாளர் : தமிழ்நாடு அரசு போக்குவரத்து ஊழியர் (சிஐடியு) சம்மேளன மாநில துணைத் தலைவர்

Leave a Reply

You must be logged in to post a comment.