தக்கலை:
மத்திய அமைச்சர் தலைமையில் நடைபெற்ற கிராமசபை கூட்டம் பாஜக புகழ்பாடவா என அதில் கலந்து கொண்டு பேச வாய்ப்பளிக்காததால் ஏமாற்றத்துடன் திரும்பிய பொதுமக்கள் கேள்வி ஏழுப்புகின்றனர்.

தக்கலை அருகே முத்தலக்குறிச்சி ஊராட்சியில் கிராம ஊராட்சி தினத்தை முன்னிட்டு, மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் தலைமையில் கிராம சபை கூட்டம் நடைபெற்றது. உள்ளாட்சி அமைப்புகள் அதிகாரிகள் சாம்ராஜ்யமாக மற்றப்பட்டுள்ள நிலையில் கிராமசபைக் கூட்டங்களில் பொதுமக்கள் புறக்கணிக்கப்படுவதாக குற்றச்சாட்டு கூறப்பட்டு வருகிறது. அதுபோலவே மத்திய அமைச்சர் தலைமை தாங்கிய கூட்டத்திலும் பங்கேற்ற பொதுமக்கள் தங்களது கருத்துகளைக் கூற அதிகாரிகள் அனுமதிக்கவில்லை. தற்போது இந்த கூட்டம் மக்களிடம் மத்திய அரசின் குறைகளை மறைக்கும் விதத்தில் ஏற்படுத்தப்பட்டதாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.

இதுகுறித்து முன்னாள் ஊராட்சிமன்ற தலைவர் செல்லம் கூறுகையில், ஒவ்வொரு கிராமசபை கூட்டமும் அப்பகுதி மக்களுக்கு முக்கியமானதாகும். கிராமசபைக் கூட்டங்களில் அப்பகுதி மக்கள் ஒன்று கூடி நிறைவேற்றும் தீர்மானம் ஒவ்வொரு கிராமத்தின் வளர்ச்சிக்கும் முதுகெலும்பு மாதிரி. ஆனால், தற்போது நடைபெற்றது மாநில ஆட்சி அதிகாரத்தில் மத்திய அரசின் தலையீடு மத்திய அமைச்சர் மூலம் வெளிப்படுகிறது. உள்ளாட்சி பணிகள் கடும் தேக்கத்தை சந்தித்து வரும் நிலையில் மக்கள் தங்கள் அடிப்படை வசதிகளை பெறுவதற்கு மிகவும் சிரமப்படுகின்றனர்.

குடிநீர் பிரச்சனை, மதுபான கடைகள் திறக்கும் பிரச்சனை என தமிழகம் முழுவதும் உள்ள கிராமங்கள் விழிபிதுங்கி இருக்கும் வேளையில், முத்தலக்குறிச்சி ஊராட்சி பகுதியில் செவ்வாயன்று மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் அப்பகுதி மக்களின் குறைகளை கூற அனுமதி வழங்காமல், அமைச்சரும், அரசு அதிகாரிகளும் உரையாற்றிச் சென்றது மக்களிடம் பெரும் ஏமாற்றத்தையே ஏற்படுத்தியுள்ளது என கூறினார்.

Leave a Reply

You must be logged in to post a comment.