====எம்.கண்ணன், என்.ராஜேந்திரன்====
மைக்ரோசாப்ட்டில் வேலை கிடைக்காமல் கூகுள் தொடங்கியவர்கள், கூகுளில் வேலை கிடைக்காமல் ஃபேஸ்புக் தொடங்கிய கதை போல இன்ஸ்டாகிராம் செயலிக்கும் ஒரு கதை உண்டு. இந்தக் கதையில் உள்ள வித்தியாசம் முந்தைய கதைகளுக்கு மாறானது என்பதுதான். இன்ஸ்டாகிராம் நிறுவனர் கெவின் யார்க் சிஸ்ட்ரோம் (Kevin York Systrom) கூகுள் நிறுவனத்தில் வேலை பார்த்தவர். ஜிமெயில், காலண்டர், டாக்ஸ் போன்ற கூகுள் சேவைப்பிரிவுகளில் பணியாற்றியவர். நல்ல வேலை, வருமானத்திற்கும் குறைவில்லை. எல்லாம் நன்றாகப் போய்க்கொண்டிருந்தது. ஆனால், மனதிற்கு திருப்தி ஏற்படவில்லை. ஏதாவது செய்யவேண்டும் என்கிற ஆர்வம் காரணமாக, கூகுளை விட்டு வெளியேறுகிறார் சிஸ்ட்ரோம்.

நெக்ஸ்ட்ஸ்டாப் என்ற புத்தம் புதியதாக தொடங்கப்பட்ட நிறுவனத்தில் பணியில் சேர்கிறார். புதிய பணியில் கற்றுக்கொண்ட அனுபவம் அவருக்கு புதிய பளிச் ஐடியா ஒன்று பிறக்கிறது. அதை செயல்படுத்த மாதிரி செயலியை உருவாக்கினார். இச்செயலி உருவாக முதல் காரணம் தன் தோழியுடன் மெக்சிகோவிற்கு பயணித்தபோது ஐபோனில் எடுக்கப்பட்ட படங்கள் சரியாக வரவில்லை. ஐபோன் கேமரா நன்றாக இருந்தாலும், படத்தை அழகாக்கும் ஃபில்டர் வசதிகள் இல்லாதது அவருக்குக் குறையாக இருந்தது. கேமரா செயலியில் ஃபில்டர் வசதிகள் இருந்திருந்தால் படத்தை அழகாக்கியிருக்கலாமே என்கிற எண்ணமே பர்ப்பின் செயலியாக உருவெடுத்தது. புதிய செயலி தயாராகிவிட்டது. இந்த செயலியை சந்தைப்படுத்த முதலீடு தேவை. இந்த ஐடியாவில் நம்பிக்கை கொண்ட இரண்டு பேர் கிடைத்தார்கள். மூன்று கோடி ரூபாய் ஆரம்ப முதலீடும் கிடைத்தது.இப்போது நெக்ஸ்ட்ஸ்டாப் நிறுவனத்திலிருந்து வெளியேறி பர்ப்பின் என்ற பெயரில் தன் நண்பர் மைக் க்ரிக்கர் (Mike Krieger) உடன் இணைந்து புதிய நிறுவனத்தை தொடங்கினார். ஆப்பிள் ஐஓஎஸ்-ல் இயங்கும் வண்ணம் பர்ப்பின் (Burbn) ஆப்பை உருவாக்கி 2010ஆம் ஆண்டில் வெளியிட்டனர். அதிகம் பேரை இந்த ஆப் கவரும் என்று எதிர்பார்த்தார் கெவின் சிஸ்ட்ரோம். ஆனால், எதிர்பார்த்த அளவிற்கு யாரும் இச்செயலியைப் பயன்படுத்தத் தொடங்கவில்லை.

சிக்கல் எங்கே என்று ஆராய்ந்தபோது, தாங்கள் வழங்கிய அதிகப்படியான வசதிகள்தான் பிரச்சனை என்பதை அறிந்துகொண்டனர். ஆரம்பத்தில் பழகுவோருக்கு தேவையான வசதிகளைக் கொடுத்து, படிப்படியாக வசதிகளை சேர்த்திருந்தால் எளிதாக இருந்திருக்கும் என்பதை அனுபவத்தில் உணர்ந்து கொண்டனர். உடனடியாக தங்கள் செயலியில் இருந்த வசதிகளில் தேவை எது, தேவையில்லாதது எது என்பதை ஆராய்ந்து வடிகட்டினர். இப்போது எளிமையாக, முற்றிலும் மாறுபட்ட செயலி ஒன்று ஒரே மாதத்தில் உருவாக்கினர். இந்த செயலிக்கு இன்ஸ்டண்ட் கேமரா டெலிகிராம் என்ற புதிய பெயரை சூட்டினர். பெரிய பெயராக இருக்கிறதென்று இன்ஸ்டாகிராம் என்று சுருக்கப்பட்டது.

ஆப்பிள் ஸ்டோரில் வெளியிடப்பட்ட ஒரே மாதத்தில் 1 மில்லியன் பயனரையும், தொடங்கிய முதல் ஆண்டில் 10 மில்லியன் பயனரையும் பெற்று மிகப் பெரிய வளர்ச்சியைப் பெற்றது இன்ஸ்டாகிராம். இந்த ஆப் ஆண்ட்ராய்டில் இரண்டு வருடங்கள் கழித்து 2012ஆம் ஆண்டில்தான் அறிமுகமானது.தொடங்கிய முதல் ஆண்டிலேயே மிகப்பெரிய வரவேற்பைப் பெற்ற செயலியை வாங்க பெரிய பெரிய நிறுவனங்கள் போட்டியிட்டன. இந்தப் போட்டியில் ஒருவழியாக ஃபேஸ்புக் நிறுவனம் ஒரு பில்லியன் டாலர்கள் கொடுத்து 2012ஆம் ஆண்டில் விலைக்கு வாங்கியது. ஃபேஸ்புக் விலைக்கு வாங்கியிருந்தாலும், அதனை தனி நிறுவனம் போலவே இதுவரை நடத்திவருகிறது. இச்செயலியின் நிறுவனர்களான கெவின் சிஸ்ட்ரோம் மற்றும் மைக் கிரிக்கர் இருவரும் தலைமைப் பொறுப்பிலேயே இருந்து வருகின்றனர். செயலியின் வளர்ச்சிக்கான முடிவுகளை எடுக்கும் அதிகாரத்தை இவர்களிடமே விட்டுவைத்துள்ளது ஃபேஸ்புக்.

படங்களை மெருகூட்டுவது பகிர்வது என்று தொடங்கிய இன்ஸ்டாகிராம் செயலி, படங்களுக்கு டேக் இடுதல், இருப்பிடம் பதிதல், அரட்டை அடித்தல் எனப் பலவசதிகளையும் இணைத்து ஃபேஸ்புக், ஸ்னாப் சேட், வாட்ஸ்அப், டிவிட்டர் போன்றவற்றிற்கு இணையாக சமூகவலைத்தளங்களில் முன்னணி வகிக்கிறது. ஃபேஸ்புக், கூகுள் போலவே இன்ஸ்டாகிராம் மீதும் பயன்படுத்துவோரை அடிமையாக்குதல், மூளை சலவை செய்தல் என்பன போன்ற பல குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன. ஃபேஸ்புக், ட்விட்டர், யூடியூப், ஸ்நேப்சாட், இன்ஸ்டாகிராம் ஆகிய சமூக வலைதளங்கள் குறித்த ஆய்வு ஒன்றில், ‘எதிர்மறை எண்ணங்களை உருவாக்குவதில், ‘இன்ஸ்டாகிராம்’ முதலிடத்தில் உள்ளதாகவும், அதிகமான அளவில் ‘இன்ஸ்டாகிராம்’ பயன்படுத்துபவர்கள், அதிக மன உளைச்சலுக்கு ஆளாகின்றனர்’ என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

%d bloggers like this: