சேலம்,
சேலத்தில் சிறுமியை கடத்த முயன்றவர்களுக்கு ஆதரவாக காவல்துறையினர் செயல்பட்டு வருவதாக மார்க்சிஸ்ட் கட்சி மற்றும் மாதர் சங்கத்தினர் குற்றம்சாட்டியுள்ளனர்.

சேலம் மாநகரம் புதுரோடு பகுதியை சேர்ந்த 16 வயது நிரம்பிய சிறுமி ஒருவர் பெற்றோரை இழந்ததால் தனது தாத்தா, பாட்டியுடன் வசித்து வருகிறார். இந்நிலையில் கடந்த ஞாயிறன்று மாலை வீட்டில் கோபித்து கொண்டு சேலம் புதிய பேருந்து நிலையம் அருகில் உள்ள ஆட்டோ நிறுத்தம் அருகில் நின்று கொண்டிருந்துள்ளார். இதை பார்த்த ஆட்டோ ஒட்டுநர்கள் இருவர் அச்சிறுமியை வீட்டில் கொண்டு சென்று விடுவதாக கூறி ஆட்டோவில் ஏற்றி சென்றுள்ளனர். பிறகு சிறிது தூரம் சென்றவுடன், அச்சிறுமியை வலுக்கட்டாயமாக ஒரு காரில் ஏற்றியுள்ளனர்.

இதனால் அதிர்ச்சியடைந்த அச்சிறுமி சிறிது தூரம் சென்றபின் சிறுநீர் கழிக்க வேண்டும் எனக் கூறி அவர்களிடமிருந்து தப்பியோடியுள்ளார். இதனை கண்ட பொதுமக்கள் சிறுமியை மீட்டு சம்மந்தப்பட்ட நபர்கள் பிடிக்க முயலவே அங்கிருந்து அவர்கள் தப்பி சென்றுள்ளனர். இதுபற்றி சேலம் சூரமங்கலம் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் விசாரனை நடத்தினர். இதன்பின் சிறுமியை கடத்த முயன்ற ஆட்டோ ஓட்டுநர்களான சீனிவாசன் மற்றும் இம்ரான் ஆகிய இருவரை பிடித்து விசாரித்தனர். இருப்பினும் அவர்கள் மீது எவ்வித வழக்கும் பதியாமல் வேண்டுமென்ற தாமதப்படுத்தி வந்ததாக கூறப்படுகிறது.

இதுகுறித்து அறிந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சேலம் மேற்கு மாநகர செயலாளர் எம்.கனகராஜ், மாவட்ட குழு உறுப்பினர் பி.பாலகிருஷ்ணன் மற்றும் மாதர் சங்க மாவட்ட செயலாளர் ஐ.ஞானசௌந்தரி ஆகியோர் காவல்துறை அதிகாரிகளை சந்தித்து குற்றவாளிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தியுள்ளனர். இருப்பினும் குற்றவாளிகள் மீது உரியமுறையில் வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்காமல் அவர்களை தப்ப வைக்கும் முயற்சியில் காவல்துறையினர் ஈடுபட்டு வருவதாக அவர்கள் செய்தியாளர்களிடம் தெரிவித்தனர். மேலும், பாதிக்கப்பட்ட சிறுமி தற்போது காவல்துறையினரின் கட்டுப்பாட்டில் வைக்கப்பட்டுள்ள நிலையில், அவரை சந்திக்கவும் காவல்துறை அதிகாரிகள் அனுமதி மறுத்து வருவதாக குற்றம்சாட்டினர்.

Leave A Reply

%d bloggers like this: