நாகர்கோவில்:
கன்னியாகுமரி மாவட்ட கடல்பகுதி களில் கடல் சீற்றத்தின் காரணமாக 3 வது நாளாக மீனவர்கள் யாரும் மீன்பிடிக்க கடலுக்கு செல்லவில்லை.கடந்த 2 நாட்களாக கடல்சீற்றம் காரணமாக குளச்சல், மிடாலம், அழிக்கால், மண்டைக்காடு புதூர், கொட்டில்பாடு, வாணியக்குடி, குறும் பனை, ராமன்துறை வள்ளவிளை உள்ளிட்ட கடற்கரை கிராமங்களில் கடல் நீர் வீடுகளுக்குள் புகுந்ததால் கடற்கரை கிராமங்கள் தத்தளித்தன. மேலும் கடல் சீற்றத்தின் காரணமாக கரையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மீனவர்களின் படகுகளும் நீரில் அடித்து செல்லப்பட்டன. ராமன்துறை, அழிக்கால், தேங்காப்பட்டணம், இனயம், குறும்பனை, வள்ளவிளை ஆகிய இடங்களில் கடற்கரையோரங்களில் சாலைகள் கடல்நீரில் அடித்து செல்லப்பட்டதால் போக்குவரத்து துண்டிக்கப் பட்டது. சுமார் 8 வீடுகளும் கடல்சீற்றத்தால் சேதமடைந்தன.

இந்த நிலையில் திங்கள் கிழமை கடலின் சீற்றம் குறைந்து கடல் சிறிது இயல்பு நிலைக்கு திரும்பியது. இதனால் தற்காலிக முகாம்களில் தங்க வைக்கப்பட்டிருந்த மீனவ மக்கள் தங்கள் ஊரின் அருகேயுள்ள உறவினர் வீடுகளில் சென்று தங்கினர்.

கன்னியாகுமரியில் கடல் சீற்றம் குறைந்திருந்தாலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை காரணாமாக பூம்புகார் படகு போக்குவரத்து திங்கள் கிழமையும் ரத்து செய்யப்பட்டது. மேலும் சுற்றுலா பயணிகள் முக்கடல் சங்கமம் உள்ளிட்ட பகுதிகளில் அனுமதிக்கப்பட வில்லை. எனவே சுற்றுலா பயணிகள் வருகையின்மை காரணமாக கன்னியாகுமரி பகுதி வெறிச்சோடி காணப்பட்டது.

Leave A Reply

%d bloggers like this: