திருப்பூர்,
திருப்பூரில் 29 வது சாலை பாதுகாப்பு வாரவிழா திங்களன்று கொண்டாடப்பட்டது. முன்னதாக திருப்பூர் வடக்கு வட்டார போக்குவரத்து மற்றும் மாநகர காவல்துறை சார்பில் நடைபெற்ற இவ்விழாவின் துவக்க நிகழ்ச்சியாக போக்குவரத்து விதிகள் குறித்த விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. பேரணியை திருப்பூர் மாவட்ட ஆட்சியர் பழனிசாமி, மற்றும் மாநகர ஆணையர் நாகராஜ் இணைந்து கொடியசைத்து துவக்கிவைத்தனர். இதனிடையே இப்பேரணியில் அதிக அளவில் காவல்துறையினர் கலந்துகொண்டதால் பல இடங்களில் போக்குவரத்தை சரி செய்ய முடியாமல் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

இதன் உச்சகட்டமாக திருப்பூர் மாநகரின் மையப்பகுதியான ஏபிடி சாலையில் இருசக்கர வாகனத்தில் வேகாக வந்த ஒருவர், மற்றொரு இருசக்கர வாகனத்தில் வந்தவர் மீது மோதினார். இதில் ஒருவருக்கு கால் முறிந்து ரத்தம் அதிக அளவில் வெளியேறி உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார். இவரை காப்பாற்ற பொதுமக்கள் போராடிக் கொண்டிருந்த வேளையில் விபத்தை ஏற்படுத்திய இருசக்கர வாகனத்தில் வந்தவர் நிற்காமல் தப்பிச் சென்றார்.  இதனிடையே காயமடைந்தவரை காப்பாற்ற 108 ஆம்புலன்ஸ் சுமார் அரைமணி நேரம் தாமதமாக வந்தது. இதன்பின்னரே விபத்தில் சிக்கி உயிருக்கு போராடிக்கொண்டிருந்தவரை சிகிச்சைக்காக மீட்டு பொதுமக்கள் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் காவல்துறையினர் சம்பவ இடத்தில் இல்லாததால் கடும் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டது. இதனால் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் பெரும் அதிருப்திக்குள்ளாகினர்.

Leave a Reply

You must be logged in to post a comment.