மேட்டுப்பாளையம்,
ரயில் பயணங்களின் போது பெண்களுக்கு எதிராக நடைபெறும் குற்றங்கள் மீது ரயில்வே காவல்துறை கடுமையான நடவடிக்கை எடுக்கும் என காவல்துறை ஏடிஜிபி சைலேந்திரபாபு தெரிவித்துள்ளார்.

கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் ரயில்நிலையத்தில் பயணிகளின் பாதுகாப்பு மற்றும் சேவையை அடிப்படையாக கொண்ட புதிய காவல் உதவி மையம் புதிதாக துவக்கப்பட்டுள்ளது. ரயில்வே காவல்துறை சார்பில் துவக்கப்பட்ட இக்காவல் உதவி மையத்தை கூடுதல் காவல்துறை இயக்குனர் சைலேந்திரபாபு திங்களன்று துவக்கி வைத்தார். இதன் பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், மேட்டுப்பாளையத்தில் இருந்து தினசரி இயக்கப்பட்டு வரும் நீலகிரி மலைரயிலில் பயணிக்க நாட்டின் பல்வேறு மாநிலங்களில் இருந்து மட்டுமின்றி வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகின்றனர். இவர்களுக்கு மொழி பிரச்சனை காரணமாக ஏற்படும் இடையூர்களை களையும் விதமாகவும், உரிய பாதுகாப்பு மற்றும் வழிக்காட்டும் விதமாகவும் இந்த காவல் உதவி மையம் செயல்படும். இந்தி, ஆங்கிலம் உள்ளிட்ட மொழிப்புலமை உள்ளவர்கள் மற்றும் ரயில்வே காவல்துறையினர் இதற்கென தனியாக நியமிக்கப்பட்டு வெளி மாநில மற்றும் வெளிநாட்டு பயணிகளுக்கு இவர்கள் உதவி புரிவார்கள்.

தற்போது, மேட்டுப்பாளையம் ரயில்நிலையத்தில் துவக்கப்பட்டுள்ள இதுபோன்ற காவல் உதவி மையம் விரைவில் மற்ற ரயில்நிலையங்களுக்கும் விரிவுபடுத்தப்படும். ரயில்வேயில் தற்போது மூன்றில் ஒரு பங்கு பெண் காவல்துறை அதிகாரிகள் உள்ளனர். ரயில் பயணங்களின் போது பெண் பயணிகளுக்கு எதிராக நடைபெறும் குற்றங்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். பெண்கள் பயணத்தின் போது தங்களுக்கு ஏற்பட்ட பிரச்சனையை வாய் மொழியாக புகார்தெரிவித்தால் கூட அதனை வழக்காக பதிவு செய்து உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Reply

You must be logged in to post a comment.