தெலுங்கானா மாநில செயலாளர் தம்மினேனி வீரபத்ரம் நன்றி உரையாற்றினார். இந்த மாநாட்டை நடத்த வாய்ப்பு கொடுத்ததற்காக நன்றி தெரிவித்தார். அத்துடன் கடந்த நான்கு மாதங்களாக ஏறத்தாழ 700 தொண்டர்கள், 21 வெவ்வேறு குழுக்களாக பிரிக்கப்பட்டு இந்த மாநாட்டிற்குப் பணியாற்றினர். மாநாட்டிற்காக கட்சி ஆதரவாளர்கள் மூலம் ரூ.50 லட்சம் மதிப்புள்ள உணவுப் பொருட்கள் கிடைத்தன. அத்துடன் நிதியாக ரூ.16 லட்சம் கட்சிக்காக வழங்கினர். மாநாட்டில் பிரதிநிதிகளுக்கு உரிய நோட்டு புத்தகங்கள், பை, இதர பொருட்கள் என ஒவ்வொன்றையும் பல்வேறு தரப்பினரும் நன்கொடையாக வழங்கியதையும் நன்றியுடன் நினைவு கூர்ந்தார்.மாநாட்டு முகப்புப் பகுதியிலும், அரங்கத்திலும், சுற்றிலும் கலை அம்சத்தோடு எழிலான முறையில் அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. குறிப்பாக கார்ல் மார்க்ஸ், ஏங்கெல்ஸ், லெனின், ஸ்டாலின் முகப்புச் சிலை, மற்றும் சுந்தரய்யா கிராமப்புற விவசாயத் தொழிலாளர்களிடையே சைக்கிளில் சென்று பணியாற்றியதை நினைவு கூர்ந்த ஓவியம், நுழைவாயிலில் உழைப்பாளிகள், கற்பாறை வடிவமைப்பு ஆகியவை எழிலுடன் அமைக்கப்பட்டிருந்தன.
இம்மாநாட்டுக்கு வைக்கப்பட்டிருந்த தியாகிகள் நினைவுஸ்தூபி இதுவரை இல்லாத அளவுக்கு வித்தியாசமான முறையில் ஈர்க்கக்கூடியதாகவும், கம்பீரமாகவும் வடிவமைக்கப்பட்டிருந்தது.

ஒவ்வொரு சிறிய அம்சங்களும் சிறப்பாக நேர்த்தியாக செய்யப்பட்டிருந்தன. இந்த கலைப் பணிகளை மேற்கொண்ட திரைத்துறை கலை இயக்குநர் ரமணா ஒரு காலத்தில் கட்சியின் சுவரெழுத்துகளை எழுதக்கூடியவராக இருந்தவர் என்று வீரபத்ரம் அறிமுகம் செய்து வைக்க, அவருக்கு கட்சியின் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி சால்வை அணிவித்தார். நினைவுப் பரிசை கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் வழங்கினார். அவருடன் இணைந்து திரைக்கலை பயிற்சியாளர் சந்தர் ராவ் என்பவரும் பாராட்டப்பட்டார்.பிரதிநிதிகள் மற்றும் தொண்டர்கள் என ஒவ்வொரு நாளும் சுமார் 2 ஆயிரம் பேர் வீதம் ஐந்து நாட்களும் சிறப்பான முறையில் உணவு தயாரித்து வழங்கிய யூசுப் அலியும் மாநாட்டு அரங்கில் பலத்த கரவொலிக்கு இடையே பாராட்டி கௌரவிக்கப்பட்டார். பினராயி விஜயன் அவருக்கு சால்வை அணிவித்தார். முன்னதாக, உணவுக்கு பதிலாக நமக்கு அவர் ஆரோக்கியத்தை வழங்கினார் என்று வீரபத்ரம் பொறுத்தமான முறையில் அறிமுகம் செய்தார்.

Leave a Reply

You must be logged in to post a comment.