உத்திரப்பிரதேசத்தில் குழந்தைகள் ஆக்சிஜன் இல்லாமல் இறந்ததில்:க்கு எவ்வித தொடர்பும் பொறுப்பும் கிடையாது என்பதற்கு ஆதாரங்கள் அனைத்தும் பொதுவெளியில் இருக்கின்றன. சம்பவம் நடந்த அன்று அவர் விடுப்பில் இருந்ததற்கான ஆதாரமும் இருக்கிறது. ஆனால், குற்றப்பத்திரிகையில் அவர் சொல்லாமல் பணிக்கு வராததாக சொல்லியிருக்கிறார்கள். விடுப்பில் இருந்தாலும், சம்பவத்தை கேள்விப்பட்டவுடன் வேறு ஆக்சிஜன் நிறுவனங்களுடன் தொடர்பு கொண்டு பேசியது, சிலிண்டர்களை மத்திய காவல் படை உதவியுடன் மருத்துவனைக்கு வரவழைத்தது, குழந்தைகள் இறப்பினை குறைக்க அவர் எடுத்த நடவடிக்கைகள் அனைத்திற்குமே கால் ரெகார்ட்ஸ் உள்ளிட்ட ஆதாரங்கள் இருக்கின்றன.

இவ்வளவு ஏன், விசாரணை முடித்து உத்திரப்பிரதேச அரசு தாக்கல் செய்துள்ள குற்றப்பத்திரிக்கையிலேயே ‘ஆக்சிஜன் சிலிண்டர்கள் வாங்குவதோ, அவர்களுக்கு பணம் வழங்குவதோ அல்லது பராமரிப்பதோ டாக்டர் கபீல் கானின் பொறுப்பு அல்ல என்று குறிப்பிட்டு இருக்கிறார்கள். ஆனாலும், அவர் எட்டு மாதங்களாக சிறையில் இருக்கிறார்.

நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்ட குற்றவாளிகளான ஜெயலலிதா, சல்மான் கான் போன்றவர்கள் கண்ணிமைக்கும் நேரத்தில் ஜாமீன் பெற்றுவிடும் தேசத்தில் எந்த வித முகாந்திரமும் இல்லாத ஒரு பொய் வழக்கில் ஏன் எட்டுமாதங்களாக சிறையில் இருக்க வேண்டும்? உச்சநீதிமன்றம் வரை போராடி ஜாமீன் பெற முடியவில்லை என்றால் கூட சட்டநடைமுறைகள் பின்பற்றப்பட்டுவிட்டன என்ற ஒரு திருப்தி இருக்கும். ஆனால், உயர்நீதிமன்றம் ஜாமீன் மனுவை விசாரிக்காமலேயே இருப்பதை நாம் எப்படி புரிந்து கொள்வது? ஜாமீன் மனு விசாரணையின் போது சில நேரம் அரசு வழக்கறிஞர்கள் வேண்டுமென்றே ஆஜராகாமல் இருக்கிறார்கள். அல்லது கூடுதல் தகவல்கள் வேண்டும் என்று சொல்கிறார்கள், மனுதாரர் தரப்பு தாக்கல் செய்த கவுண்டர் அபிடேவிட்டை நீதிமன்ற அலுவலகம் ‘தேடி’ க் கொண்டிருக்கிறது என்று மீண்டும் மீண்டும் ஒத்திவைத்துக் கொண்டே இருக்கிறது.

ஜாமீனை மறுப்பதற்கு உயர்நீதிமன்றத்திற்கு அதிகாரம் இருக்கிறது. மறுத்தால் உச்சநீதிமன்றத்திற்கு சென்று மருத்துவர் எளிதாக ஜாமீன் வாங்கி விடலாம் என்பது தான் யோகி ஆதித்யநாத் அரசின் பயம். அதனால் தான் முடிந்தளவிற்கு சில்லறை காரணங்கள் காட்டி இழுத்தடிக்கிறார்கள்அரசு தனக்கு ஏற்பட்ட அவமானத்திற்காக ஒருவரை பழிவாங்குவது இருக்கட்டும், ஆனால் அடிப்படை உரிமைகளை காக்க வேண்டிய உயர்நீதிமன்றம், ஒருவரின் அடிப்படை உரிமை பறிக்கப்பட்டு சிறையில் இருக்கும் போது ஜாமீன் மனுக்களின் மீதான விசாரணையை எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்ததாக நீதிமன்றம் கருதவேண்டும்?

எப்போது நீதிமன்றம் ஜாமீனை மறுக்கலாம்? புலன் விசாரணை முடியவில்லை, சாட்சிகளை கலைக்கலாம், ஆதாரங்களை அழிக்கலாம் என்று அரசு தரப்பு வாதிடலாம். விசாரணை முடிந்து குற்றப்பத்திரிக்கையும் தாக்கல் செய்யப்பட்ட நிலையில் ஒரு ஜாமீன் மனுவின் மீதான விசாரணையை உயர்நீதிமன்றமும் அரசுடன் கூட்டு சேர்ந்து கொண்டு வழக்கு விசாரணையை ஒத்திவைத்துக் கொண்டே இருப்பது நீதியின் குரல்வளையை நெறிப்பதற்கு ஒப்பானது. நீதித்துறையின் மீதான ஊழல் என்பது சாதாரண விஷயம். ஆனால், அரசு ஒரு சாமான்யனை பழிவாங்குவதற்கு நீதித்துறை உடன்படுவது என்பது பாசிச அபாயம்.

“அல்லல்பட்டு ஆற்றாது அழுதகண்ணீர் அன்றே
செல்வத்தை தேய்க்கும் படை”
என்ற வள்ளுவனின் வாக்கு உண்மையென்றால் இவர்களுக்கு கூடிய விரைவில் பேரழிவு நிச்சயம்.

Leave A Reply

%d bloggers like this: