===ஆர்.சிங்கார வேலு===
தேசிய கட்டிட, கட்டுமானத் தொழிலாளர் மாநாட்டை, மத்திய அரசு புது தில்லி பிரவாசி பாரதீய கேந்திரத்தில் ஏப்ரல் 18 இல் நடத்தியது. அரசு, வேலை அளிப்போர், தொழிலாளர் சார்பில் 150க்கும் மேற்பட்ட பிரதிநிதிகள் மாநாட்டில் பங்கேற்றனர். ஐ.எல்.ஒ பிரதிநிதி, மத்திய தொழிலாளர் அமைச்சர், அருணாச்சலப் பிரதேசம், ஒடிசா, ராஜஸ்தான், மணிப்பூர், தெலுங்கானா, உ.பி ஆகிய மாநிலங்களின் தொழிலாளர் அமைச்சர்கள், பல மாநிலங்களின் தொழிலாளர் துறை செயலாளர் / தொழிலாளர் ஆணையர் / கட்டுமான வாரிய செயலாளர்கள் மற்றும் தொழிலாளர் அமைச்சக அதிகாரிகள் மாநாட்டில் பங்கேற்றனர்.

இம்மாநாட்டில் சிஐடியு சார்பில் ஆர்.சிங்காரவேலு, தொ.மு.ச சார்பில் பேச்சிமுத்து, ஏஐடியுசி, எச்.எம்.எஸ், பி.எம்,எஸ், பிரதிநிதிகள் மற்றும் பஞ்சாயத்து சங்க சார்பில் சுபாஷ் பட்நகர், கீதா ஆகியோரும் பங்கேற்றனர்.

உச்ச நீதிமன்றம், 19.3.18 இல் தாக்கல் செய்யப்பட்ட ரிட் மனு 316/2006 மீது வழங்கிய தீர்ப்பின் விபரங்களை அதிகாரிகள் எடுத்துரைத்தனர். அதில், கட்டுமான நிறுவனங்கள் மற்றும் கட்டுமானத் தொழிலாளர்கள் பதிவு செய்யப்பட வேண்டும். ரயில்வே, பாதுகாப்பு துறை கட்டுமான திட்டங்களிலும் நல வரி வசூலிக்க வேண்டும். ரூ.28,000 கோடிக்கு மேல் பயன்படுத்தாமல் உள்ள கட்டிட நல வரியை ஆக்கப்பூர்வமாக கட்டுமானத் தொழிலாளர் நலன்களுக்காக செலவிட வேண்டும். அனைத்து மாநிலங்களிலும் ஆலோசனைக் குழு, நல வாரிய முத்தரப்புக் குழுக்கள் அமைத்து செயல்படுத்த வேண்டும்.

நாடு முழுவதும் அமலாக்க வேண்டிய வகையில் மாதிரி திட்டத்தை 2018 செப்டம்பருக்குள் மத்திய தொழிலாளர் அமைச்சகம் தயாரிக்க வேண்டும். நல வாரியங்கள் சமூக தணிக்கைக்கு உட்படுத்தப்பட வேண்டும் போன்ற பல வழிகாட்டல்களை உச்ச நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது.
நல வாரியச் செயல்பாடுகள் குறித்த விபரங்களை மாநில அமைச்சர்கள், அதிகாரிகள் சுட்டிக் காட்டினர். மத்திய தொழிலாளர் அமைச்சர் சிறப்புரை ஆற்றினர் ( இந்தியில்).
நாடு முழுவதும் 7.65 கோடி கட்டுமானத் தொழிலாளர்கள் உள்ளனர். 2018-இல் மார்ச் வரை மாநில நல வாரியங்களில் 3.05 கோடி பேர் பதிவு செய்துள்ளனர். ரூ. 42,257 கோடி நல வரி வசூல் ஆகியுள்ளது. ரூ.12,030 கோடி மட்டுமே செலவிடப்பட்டுள்ளது. அதாவது ரூ.30,227 கோடி செலவிடப்படாமல் உள்ளது.

தமிழ்நாட்டில் 28.21 லட்சம் பேர் பதிவு; ரூ.2390 கோடி நல வரி வசூல் ; ரூ.757 கோடி செலவு செய்யப்பட்டு, இருப்பு ரூ.1633 கோடி உள்ளது.நாட்டிலேயே அதிகமாக உத்தரப்பிரதேசத்தில் 42 லட்சம் பேர் பதிவு. மகாராஷ்டிராவில் அதிகமாக நல வரி ரூ.6108 கோடி வசூல் ஆகியுள்ளது. நாட்டிலேயே அதிக பயன்பாடு கேரளாவில், வரவுக்கு மேல் செலவு செய்ய வேண்டிய நிலை, 3 லட்சம் பேருக்கு மாதம் ரூ.1100 வீதம் பென்சன் கொடுத்து வருவதால் ஏற்பட்டுள்ளது.

1948 இல் அரசு நிறைவேற்றிய கப்பல் துறை தொழிலாளர் சட்டம் (DOCK WORKERS ACT) போல 1969இல் மகாராஷ்டிராவில் மத்தாடி சட்டம் கொண்டு வரப்பட்டது. பல்வேறு இடங்களில் பணிபுரியும் சுமைப்பணி தொழிலாளர்களுக்கு மத்தாடி வாரியம் மூலம் வேலை, சமூக பாதுகாப்பு வழங்கும் வகையில் இச்சட்டம் உள்ளது. தொழிலாளர் கிராஜீவிட்டி, விடுமுறை ஊதியம் போன்ற பல சமூக பாதுகாப்பு பயன்களை பெறுகின்றனர். இந்த மத்தாடி சட்டம் குறித்து மாநாட்டில் விளக்கப்பட்டது.

மத்திய அரசின் உத்தேச சமூக பாதுகாப்பு சட்டத் தொகுப்பு குறித்து விளக்குவதும் நிகழ்ச்சி நிரலில் இடம் பெற்றிருந்தது. நாட்டின் அனைத்து மத்திய தொழிற்சங்கங்களும் எதிர்த்திடும் சமூக பாதுகாப்பு சட்டத் தொகுப்பு பற்றி மாநாட்டில் விளக்கக் கூடாது என ஆர்.சிங்காரவேலு உள்ளிட்ட தொழிற்சங்க தலைவர்கள் குரல் எழுப்பியதும் இது வாபஸ் பெறப்பட்டது.
1996 இல் அரசு நிறைவேற்றிய அகில இந்திய கட்டிட, கட்டுமானத் தொழிலாளர் சட்டம் மற்றும் நல வரி சட்டம் அமலாக்கம் குறித்து தொழிற்சங்கத் தலைவர்கள் தங்கள் கருத்துக்களை மாநாட்டில் விரிவாக எடுத்துக் கூறினர்.

மாநாட்டில் ஆர். சிங்காரவேலு குறிப்பிட்ட சில முக்கிய கருத்துக்கள்:-
1.நாடு முழுவதும் மணல் மற்றும் கல் குவாரிகள் மீது பசுமை தீர்ப்பாயம் விதித்துள்ள தடைகள் நீக்கப்பட வேண்டும். சுற்றுப்புறச் சுழலுக்கு தீங்கு விளைவிக்காமல், மணல் மற்றும் கல் குவாரிகளை அரசே செயல்படுத்த வேண்டும்.

2.கட்டுமானத் தொழிலாளர்க்கு குறைந்த விலையில் வீடு கட்டித்தரும் பணியில் மத்திய, மாநில அரசுகள் மற்றும் நல வாரியம் ஈடுபட வேண்டும்.

3.உச்ச நீதிமன்ற வழிகாட்டுதல்களை கறாராக அரசு பின்பற்ற வேண்டும். மாநில ஆலோசனைக் குழு, நல வாரியங்களில் சிஐடியு உள்ளிட்ட மத்திய சங்கங்களுக்கு உரிய பிரதிநிதித்துவம் வழங்க வேண்டும்; நலவாரிய குழு கூட்டத்தை முறையாக கூட்டவும் வேண்டும். 2014 இல் தமிழக அரசு அமைத்த அதிமுக சங்க பிரதிநிதிகள் மட்டும் இடம் பெற்ற நல வாரியம் போல், முத்தரப்பு ஏற்பாட்டை கேலிக் கூத்தாக்கக் கூடாது.

4.1998 முதல் ரயில்வே, பாதுகாப்பு துறை போன்ற அரசு துறைகளில் கட்டுமானப் பணிகளுக்கான நல வரி வசூலிக்க வேண்டும். 100 நாள் வேலைத் திட்டத்தில் நல வரி வசூலிக்கப்பட வேண்டும். 90 நாட்கள் வேலை செய்யாவிடினும், இத்திட்ட தொழிலாளர்களை நல வாரியத்தில் உறுப்பினர்களாக சேர்க்க வேண்டும்.

5.கேரள நல வாரியம் வரவுக்கு மேல் செலவு செய்கிறது. மத்திய அரசு கேரளாவின் நல வாரியத்திற்கு நிதி அளிக்க வேண்டும்.

6.கட்டுமானத் தொழிலாளருக்கு வேலை பாதுகாப்பு இல்லை, எனவே அடித்தட்டில் உள்ள இவர்களிடமிருந்து நலத் திட்ட பணப்பயன்களுக்காக பங்களிப்பு தொகை எதுவும் கேட்கக் கூடாது. மிகக் குறைந்த அளவில் பதிவு, புதுப்பித்தல் கட்டணம் இருக்க வேண்டும்.

7.மாநிலங்களுக்கு இடையே இடம் பெயரும் தொழிலாளர் சட்டம், 1979 கறாராக அமலாக்கப்பட வேண்டும். வெளி மாநிலத் தொழிலாளரையும் நல வாரியத்தில் உறுப்பினர்களாக்க வேண்டும்.
நாடு முழுவதும் ஒரே சீரான பணப்பயன்கள் வழங்க வேண்டும்.

8.விலைவாசி புள்ளியுடன் இணைக்கப்பட்டு, மாதம் ரூ.3000 ஓய்வூதியம்;

9.பெண் தொழிலாளர்க்கு 55 வயதிலேயே ஓய்வூதியம்;

10.எங்கு விபத்து நடந்து தொழிலாளி இறந்தாலும் ரூ.5 லட்சம் நிவாரணம்;

11.இயற்கை மரண நிவாரணம் ரூ.1 லட்சம்;

12.பிரசவ நிதி ரூ.18,000.

13.தமிழகத்தில் சமூக நலத்துறை மூலம் வழங்கும் பிரசவ நிதி ரூ.18,000. ஆனால் நல வாரியத்தில் ரூ.6 ஆயிரம் வழங்கும் பாரபட்சம் உள்ளது.

14.மத்திய தொழிற்சங்கங்களுடன் கலந்து ஆலோசித்து சீரான, உயர்த்தப்பட்ட பணப்பயன்கள் நிர்ணயிக்கப்பட வேண்டும்.

15.சட்டப்படியான கட்டுமானத் தொழிலாளர் பணப்பயன்களுக்கு மட்டுமே நல வாரிய நிதி செலவிடப்பட வேண்டும் ; தமிழகம், தெலுங்கானா, மேற்கு வங்கம் போன்ற பல மாநிலங்களில் இது வேறு காரியங்களுக்கு பயன்படுத்தப்படுவது நிறுத்தப்பட வேண்டும்.

16.நல வாரியங்களில் தற்காலிக தொழிலாளருக்கு பதிலாக, நிரந்தர தொழிலாளர்களையே நியமிக்க வேண்டும்.

17.எல்ஐசியின் ஆம் ஆத்மி பீம யோஜனா மீண்டும் துவக்கப்பட வேண்டும். அடல் பென்சன் யோஜனா வாபஸ் பெறப்பட வேண்டும். சிறப்பு இஎஸ்ஐ திட்டம் அமலாக்கப்பட வேண்டும்.
புதுச்சேரியில் கடந்த 6 மாதங்களாக பணப்பயன்கள் வழங்கப்படவில்லை, அங்கு பென்சன் திட்டமே இல்லை.

18.மேற்குவங்கத்தில் கட்டிட நல நிதி உள்ளிட்டு 5 சமூக பாதுகாப்பு திட்டங்களை இணைத்துள்ளனர். இந்த இணைப்பு வாபஸ் பெறப்பட வேண்டும்.

19.மாநில நல வாரியங்கள் எவ்வளவு தொழிலாளர்கள் புதுப்பிக்கத் தவறி, விடுபட்டனர் என்ற விபரங்களை கொடுக்க வேண்டும். தமிழகத்தில் 5 ஆண்டுக்கு ஒரு முறை புதுப்பித்தால் போதும் என்றுள்ள நிலையில், எழுத்தறிவற்ற தொழிலாளர்கள் இந்த தேதியை நினைவில் வைக்காமல், புதுப்பிக்க தவறி விடுபடுகின்றனர்.

20.மத்திய அரசின் முறைசாரா தொழிலாளர் சமூக பாதுகாப்பு சட்டம், 2008-ஐ அமல்படுத்த, ஆண்டுக்கு ரூ.1.5 லட்சம் கோடி மத்திய அரசு ஒதுக்க வேண்டும் என அனைத்துத் தொழிற்சங்கங்களும் கோரி வருகின்றன. தமிழகத்தில் 15 முறைசாரா நல வாரியங்களில் நல திட்டங்களுக்கு உரிய நிதி பட்ஜெட்டில் ஒதுக்கப்படவில்லை.

21.சமூக பாதுகாப்பு சட்டத் தொகுப்பு சட்டமாக்கப்பட்டால், கட்டுமானத் தொழிலாளர் சட்டம், நல நிதி சட்டம் செயலற்றுப் போகும். எனவே சமூக பாதுகாப்பு சட்டத் தொகுப்பு வாபஸ் பெறப்பட வேண்டும்.

22.மத்திய, மாநில அரசுகள் இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை இத்தகைய மாநாடுகளை நடத்த முன்வர வேண்டும் என தேசிய கட்டிட, கட்டுமானத் தொழிலாளர் மாநாட்டில் கூறினார்.

கட்டுரையாளர் : இந்திய கட்டுமானத் தொழிலாளர் சம்மேளனம் அகில இந்திய தலைவர்.

Leave A Reply

%d bloggers like this: