’நாடறிந்த’ குழாயடிச் சண்டைகளை, குடுமிப்பிடி சண்டைகளை அல்லது ‘தர்ம யுத்தங்களை’ கம்யூனிஸ்டுகளிடம் காண முடியாது. அவரவர் புரிதலில், அனுபவத்தில் பெற்ற கருத்துக்களின் முரண்பாடு மட்டுமே அது.

அதிகாரம், பதவி, தங்கள் சொந்த நலன், முக்கியத்துவம் கருதி ஏனையக் கட்சிகளுக்குள் நடக்கும் வழக்கமான பூசல்களை கம்யூனிஸ்டுகளிடம் காண முடியாது. மக்களின், கட்சியின் நலன் கருதி நடக்கும் விவாதங்கள் மட்டுமே அவை.

குழி தோண்டுதல், காலை வாருதல், கோஷ்டி சேர்த்தல் என அதிகாரத்திற்காக நடக்கும் போட்டியல்ல கம்யூனிஸ்டுகளுக்குள் நடக்கும் போராட்டம். மார்க்சியத்தை மக்களிடமும், மக்களை மார்க்சியத்திடமும் கொண்டு செல்வதில் தவறுகள் நடந்து விடக் கூடாதே என்னும் அக்கறையே அது.

தாங்கள் முன்வைக்கும் கருத்துக்கள் தோற்றுவிட்டால் தங்களின் தோல்வியாக சுருக்கிக்கொண்டு, கட்சியிலிருந்து விலகி விடுகிற, வெளியேறி விடுகிற சம்பவங்களை கம்யூனிஸ்டுகளிடம் காண முடியாது. பெரும்பான்மை கருத்துக்கு மதிப்பு கொடுத்து, தங்களின் கருத்துக்களை விட்டுக் கொடுக்கிற நிகழ்வாகவே இருக்கும் அது.

சி.பி.எம்மின் 22 வது அகில இந்திய மாநாடு இதைத்தான் மீண்டும் பிரகடனம் செய்திருக்கிறது.

எதை எதையெல்லாமோ எதிர்பார்த்த பத்திரிகைகள், ஊடகங்கள், எதிரிகளுக்கு சுவாரசியம் இல்லாமல் போயிருக்கலாம். அதற்கு கம்யூனிஸ்டுகளை குறை சொல்லாதீர்கள். உங்களையே ஆராய்ந்து கொள்ளுங்கள்.

நாட்டையே அச்சுறுத்தும், எந்த தார்மீக நெறிகளும் இல்லாத, மூர்க்கத்தனமான ஆர்.எஸ்.எஸ் & பிஜேபியிடமிருந்து நாட்டையும், மக்களையும் எப்படி பாதுகாப்பது, அந்த பேரழிவு சக்தியை எப்படி வலுவிழக்கச் செய்வது என்பது ஹைதராபாத்தில் நடந்த சி.பி.எம்மின் 22 வது அகில இந்திய மாநாட்டில் முக்கியமாக விவாதிக்கப்பட்டு இருக்கிறது.

அதில் நாட்டுக்கும், மக்களுக்கும் தங்களால் இயன்ற அளவு பாதிப்புகளை ஏற்படுத்திய- அந்த பேரழிவு சக்தியை வளர்த்து விட்ட – காங்கிரஸுடனான உறவு எப்படி இருக்க வேண்டும் என்பதில் முரண்பட்ட கருத்துக்கள் வந்திருக்கின்றன.

காங்கிரஸோடு அறவே எந்த உறவும், புரிதலும் வைத்துக் கொள்ளக் கூடாது என்ற நிலைபாட்டிலிருந்து, காங்கிரஸ் நமக்கு அரசியல் ரீதியாக எதிரிதான் என்ற போதிலும், இந்த பேரழிவு சக்தியை வீழ்த்துவதில், காங்கிரஸோடு தேர்தலில் புரிதல் கொண்டு செயல்படலாம் என தீர்மானிக்கப்பட்டு இருக்கிறது.

தங்களின் சக்தி அறிந்து, எதிரியின் சக்தி அறிந்து, எதிரியின் எதிரிகள் சக்தி அறிந்து எடுக்கப்பட்ட முடிவு இது. இந்தக் காலச் சூழலையும், எதிர்கால நலனையும் கணித்து எடுக்கப்பட்ட முடிவு இது.

தேசம் முழுவதும் உள்ள கட்சிக் கிளைகள், மாவட்டங்கள், மாநிலங்கள் அளவில் விவாதித்து, கருத்துக்களை சேகரித்து அதை அகில இந்திய மாநாட்டில் முன்வைத்து விவாதம் நடத்தி, முடிவு எடுக்கப்பட்டு இருக்கிறது.

தவறோ, சரியோ, இதுதான் முடிவு. கட்சியின் முடிவு. கட்சியில் இருக்கும் அனைவரின் முடிவு. அதுதான் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி.

போற்றுவோர்கள் போற்றட்டும், புழுதி வாரி தூற்றுவோர் தூற்றட்டும், கம்யூனிஸ்டுகளின் கடன் பணி செய்து கிடப்பதே!

( பி.கு: இதுபோல எந்தக் கட்சியில் தங்கள் அரசியல் தீர்மானத்தை நாட்டுக்கே தெரியப்படுத்தி, அதில் கட்சியில் உள்ள அனைவரும் விவாதம் நடத்தி, இப்படி முடிவு எடுத்து இருக்கிறார்கள் என்னும் ஜனநாயகத்தையும், பொறுப்புணர்வையும், கூட்டு முடிவையும் மனதில் கொண்டு விமர்சித்தால் அது நியாயமாக இருக்கும்.)

Mathavaraj

Leave a Reply

You must be logged in to post a comment.