ஹைதராபாத்:
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 22ஆவது அகில இந்திய மாநாட்டின் நிறைவாக ஹைதராபாத் நகரில் செந்தொண்டர் அணிவகுப்பும், மக்கள் திரள் அலை அலையாகக் கலந்து கொண்ட பொதுக் கூட்டமும் ஞாயிறன்று நடைபெற்றது.முகமது அமீன் நகரில் பிரதிநிதிகள் மாநாடு ஞாயிறன்று மதியம் நிறைவடைந்ததைத் தொடர்ந்து மாலை சுமார் 4 மணியளவில் செந்தொண்டர் அணிவகுப்பு மாலக் பேட் எனும் இடத்தில் இருந்து தொடங்கியது. கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் பிருந்தா காரத் இந்த அணிவகுப்பைத் தொடங்கி வைத்தார். இதில் தெலுங்கானா மாநிலத்தைச் சேர்ந்த இளைஞர்கள், இளம்பெண்கள் ஆயிரக்கணக்கானோர் மிடுக்குடன் கம்பீரமாக அணிவகுத்து வந்தனர். இந்த அணிவகுப்புக்கு முன்பாக அதிர, அதிர பறை இசை முழக்கத்துடன் நூற்றுக்கணக்கானவர்கள் ஊர்வலமாகச் சென்றனர்.

இந்த பறை இசையும், செந்தொண்டர்களின் அணிவகுப்பும் வரலாற்றுச் சிறப்புமிக்க ஹைதராபாத் நகர மக்களை வெகுவாக ஈர்த்தது. சாலையின் இருபுறமும் பல்லாயிரக்கணக்கான மக்கள் திரண்டிருந்து இந்த அழகிய ஊர்வல, அணிவகுப்பைப் பார்வையிட்டனர்.

கட்சியின் பொதுச் செயலாளர் சீத்தாராம் யெச்சூரி மற்றும் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர்கள் பி.வி.ராகவலு, சுபாஷினி அலி, எம்.ஏ.பேபி, முகமது சலீம், ஹன்னன் முல்லா, நிலோத்பல் பாசு மற்றும் தெலுங்கானா மாநிலச் செயலாளர் தம்மினேனி வீரபத்ரம் ஆகியோர் திறந்த வாகனத்தில் செந்தொண்டர் அணிவகுப்பைப் பார்வையிட்டு உடன் சென்றனர். விஜயவாடா தேசிய நெடுஞ்சாலையில் நான்கு கிலோ மீட்டர் தொலைவில் சரூர் நகர் மைதானத்தை செந்தொண்டர் அணிவகுப்பு சென்றடைந்தது.

அங்கு நடைபெற்ற மாநாட்டுப் பொதுக் கூட்டத்தில் தெலுங்கானா மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் வந்திருந்த சாமானிய உழைப்பாளி மக்கள், பெண்கள் என பல்லாயிரக்கணக்கானோர் திரண்டிருந்தனர். சரூர்நகர் மாபெரும் ஸ்டேடியம் மைதானம் சிகப்பு வண்ணத்தில் எங்கு பார்த்தாலும் மனிதத் தலைகளாகக் காட்சியளித்தது. அரசியல் தலைமைக்குழு உறுப்பினரும் வரவேற்புக்குழுத் தலைவருமான பி.வி.ராகவலு பொதுக்கூட்டத்துக்கு தலைமை வகித்தார். இப்பொதுக்கூட்டத்தில் கட்சியின் பொதுச் செயலாளர் சீத்தாராம் யெச்சூரி, கேரள முதல்வரும் அரசியல் தலைமைக்குழு உறுப்பினருமான பினராயி விஜயன், அரசியல் தலைமைக்குழு உறுப்பினர்கள் மாணிக் சர்க்கார், பிருந்தா காரத் மற்றும் தெலுங்கானா மாநிலச் செயலாளர் தம்மினேனி வீரபத்ரம் உள்ளிட்ட தலைவர்கள் உரையாற்றினர்.

மோடி அரசின் நான்காண்டு கால ஆட்சியின் அவலங்களையும், உழைக்கும் மக்களுக்கு ஏற்படுத்தப்பட்டுள்ள கடும் துயரங்களையும், ஜனநாயகத்தைச் சீர்குலைத்து மதவெறியையும், பல்வேறு குறுகிய சாதி, மத, இன அடையாளங்களைப் பயன்படுத்தி மக்களைப் பிளவுபடுத்தும் ஆபத்தான அரசியலை மேற்கொண்டிருப்பதையும், தேச ஒற்றுமைக்கு ஆபத்து விளைவிக்கும் செயல்களையும் அம்பலப்படுத்தி தலைவர்கள் பேசினர்.

தற்போதைய பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கும், முந்தைய ஐக்கிய முற்போக்குக் கூட்டணிக்கும் நவீன தாராளமய கொள்கை அடிப்படையில் எந்த வேறுபாடும் இல்லை. ஒரே நாணயத்தின் இரு பக்கங்கள் தான். எனவே மக்கள் போராட்டங்களின் மூலம் மாற்றுக் கொள்கைகளை வலுப்படுத்துவோம். அதே சமயம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைமையிலான கேரள இடது ஜனநாயக முன்னணி அரசு உழைக்கும் மக்களுக்கு மேற்கொண்டிருக்கும் பல்வேறு சமூக நலத் திட்டங்கள், உரிமைகள், குழந்தைகளின் கல்வி, சுகாதாரம் ஆகியவற்றுக்கான மாற்றுக் கொள்கைகளை விளக்கிக் கூறினர். ஒன்றுபட்டு தீர்மானகரமான முறையில் செயல்பட்டு பாரதிய ஜனதாவை வீழ்த்துவோம், நவீன தாராளமயத்துக்கு எதிராக மக்களுக்கான மாற்றுக் கொள்கை அடிப்படையில் இடது ஜனநாயக சக்திகளை அணிதிரட்ட, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை வலிமையான முறையில் வளர்த்தெடுப்போம். செங்கொடி வீழ்ந்து விட்டது, எங்கே செங்கொடி என்று கேட்போர் இங்கே தெலுங்கானாவிற்கு வந்து பார்க்கட்டும், எங்கெங்கு காணினும் சிவப்பாக இருக்கிறது, செங்கொடிக்கு அழிவில்லை, இந்த நவீன தாராளமய கொள்கைகளை அமல்படுத்தும் ஆளும் வர்க்கத்தை செங்கொடி வீழ்த்தும் என்றும் தலைவர்கள் குறிப்பிட்டனர்.

செய்தி: வே.தூயவன், படங்கள்: கவாஸ்கர்

Leave A Reply

%d bloggers like this: