புதுதில்லி:
இந்திய மருத்துவர்கள், மருந்துக் கம்பெனிகளை விளம்பரப்படுத்தவே வெளிநாடு செல்வதாக பிரதமர் மோடி கூறியிருப்பதற்கு, இந்திய மருத்துவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.இதுதொடர்பாக, மோடிக்கு கடிதம் ஒன்றையும் எழுதியுள்ளனர்.பிரதமர் மோடி அண்மையில் லண்டனில் சுற்றுப்பயணம் செய்தபோது, வெஸ்ட் மினிஸ்டரில் இந்திய வம்சாவளியினர் ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சியில் பங்கேற்றார். அப்போது, இந்திய மருத்துவர்களின் தவறுகளை சுட்டிக்காட்டி கேள்வி ஒன்றுக்கு பதிலளித்திருந்தார்.
அதில், “இந்திய மருத்துவர்கள், தனியார் மருந்துக் கம்பெனிகளின் உதவியுடன் வெளிநாட்டு கருத்தரங்குகளில் கலந்து கொள்வதாகவும், மருந்து கம்பெனிகளை விளம்பரப்படுத்தும் செயல் அது” என்று கருத்து தெரிவித்திருந்தார். இந்த கருத்துக்கே இந்திய மருத்துவர்கள் சங்கம் அதிருப்தி தெரிவித்துள்ளது.

“வெளிநாடுகளில் நடக்கும் கருத்தரங்கில் பங்கேற்பதன் மூலம், மருத்துவர்கள் தங்களது அறிவை மேம்படுத்திக்கொள்ள முடிகிறது; இந்த கருத்தரங்குகள் மருந்துக் கம்பெனிகளால் நடத்தப்படுகிறது என்ற பிரதமரின் கருத்தில் உண்மையில்லை; 70 சதவிகிதம் இந்திய மருத்துவர்கள் இங்கிலாந்து மருத்துவமனைகளில் பணியாற்றுகின்றனர்” என மருத்துவர்கள் சங்கம் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.மேலும், “மருந்துகளின் விலையை நிர்ணயிப்பது மருத்துவர்கள் இல்லை, அரசாங்கம்தான்” சாடியுள்ள இந்திய மருத்துவர்கள் சங்கம், “ஒரு சிலர் தவறில் ஈடுபடுகிறார்கள் என்பதற்காக ஒட்டுமொத்த மருத்துவர்களையும் வெளிநாட்டு மண்ணில் வைத்து காயப்படுத்துவது முறையில்லை” எனவும் தெரிவித்துள்ளது.

Leave A Reply

%d bloggers like this: