வாசிப்பு என்பது எழுத்தாளனுக்கு உணவு மட்டுமல்லாமல் உயிரைப் போன்றதும் ஆகும். விஞ்ஞானி ஸ்டீபன் ஹாக்கிங் சமீபத்தில் மரணமடைந்தார். இயற்பியலுக்காக ஏகப்பட்ட பங்களிப்பைச் செய்தவர் அவர். அவருடைய ‘த டிரிப் ஹிஸ்டரி ஆப் டைம்’ என்னும் நூல் தொடர்ந்து 5 ஆண்டுகளாக அதிகம் விற்பனையாகும் நூலாக இருக்கிறது. தமிழில் “காலம் ஒரு வரலாற்றுச் சுருக்கம்” என வெளிவந்த இந்த புத்தகம், இன்றும் உலகின் சிறந்த புத்தகமெனப் பாராட்டப்படுகிறது.

இவரது உடலின் பெரும்பாலான பகுதிகள் செயலிழந்த நிலையில் இருந்தார். சக்கர நாற்காலியில்தான் இவரது வாழ்க்கை நகர்ந்தது. உடல் பாகங்கள் ஏதும் அசையாது, பேசுவதற்குக் கூட ஒரு கணினி வேண்டும் என்ற நிலை…ஆனாலும், இவரின் சாதனைகளின் தாகம் மட்டும்தணியவே இல்லை. அவருக்கு நோய் இருந்தபோதும், முழு நேரத்தையும் சிந்தனையிலும் வாசிப்பதிலும் செலவழித்தார். எனவேதான், அவர் மறைந்தாலும் பிரமிப்புடன் பார்க்கப்படுகிறார். வாசிப்பதற்கும் எழுதுவதற்கும் வயது ஒரு தடையாக இருக்க முடியாது. அர்ச்சுனனின் கண்ணுக்குத் தெரிந்த பறவையின் ஒற்றைக் கண்ணைப் போல், நேர்த்தியான, உண்மையான லட்சியப் பார்வை வேண்டும். அடாவ்டோ கோவால்ஸ்கிடா சில்வா என்னும் பிரேசில் நாட்டுஎழுத்தாளர், “அப்ரெண்டேலே” என்னும் நூலை எழுதியபோது, அவருடைய வயது என்ன தெரியுமா? வெறும் 5 வயது மட்டுமே! பாலகனாக இருந்தபோதே நூல் வடித்தவர் அவர்.

அமெரிக்காவின் கொலராடோ மாகாணத்தில் வசித்தஎமிலி ரோசாவுக்கு மருத்துவம் மற்றும் அறிவியல் மீது அலாதி ஆர்வம்… சின்ன வயதிலேயே மருத்துவம், அறிவியல் குறித்த நூல்களையெல்லாம் படிக்க ஆரம்பித்தார். அவருடைய முக்கியமான ஆராய்ச்சிக் கட்டுரை, அமெரிக்கன் மெடிக்கல் அஸோசியேசன் இதழில் வெளியானது. அப்போது அவருக்கு வயது 11.இந்த வயதிலேயே ஆராய்ச்சியா என, கின்னஸ் புத்தகம்,அவசர அவசரமாய் அவரின் பெயரைச் சாதனையாளர் பட்டியலில் பதிவு செய்தது. கான்ஸ்டண்டைன் காலியிஸ் என்னும் கிரீஸ் நாட்டு எழுத்தாளர், ‘எ கிளான்ஸ் ஆப் மை லைஃப்’ என்னும் நூலைக் கடைசியாக எழுதினார். 2002 ஆம் ஆண்டில் 169 பக்கங்களுடன் நேர்த்தியாக எழுதப்பட்ட அந்த நூலை அவர் எழுதி வெளியிட்ட போது அவருக்கு வயது 101. தமிழகத்தைச் சேர்ந்த சுவாமிநாத அய்யருக்குப் படிப்பின் மீது இருந்த அதீத ஆர்வத்தால் மதுரைக் காமராஜர் பல்கலைக் கழகத்தில் கணிதவியலில் எம்.பில்.பட்டம் பெற்றார். எனவே, வயது ஒரு தடையாக இருப்பதில்லை.

மாமேதை லெனின், 50 வயதைத் தாண்டிய போது, மாரடைப்பு ஏற்பட்டு, உடலின் வலது பக்கம் பாதிக்கப்பட்டது. இரும்பு மனிதரான அவர், இடது கையால் எழுதிப்பழகினார். கடுமையான உடற்பயிற்சி மூலம் பழைய நிலைக்குத் திரும்பினார். ஆனால், மறுபடியும் அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டது. அப்போதும் அவர் சளைக்காமல், படுக்கையில் இருந்தபடியே, வாசிப்பதையும் எழுதுவதையும் தொடர்ந்தார். இப்படி மரணம் வரை வாசிப்பதை- எழுதுவதை நிறுத்தாத மாவீரராகத் திகழ்ந்தவர் லெனின். புத்தகங்களை அறிவின் பொக்கிசம் எனலாம். புத்தகங்கள் புதுமையையும் படைக்கும்… புரட்சியையும் படைக்கும்… உலகின் பெரிய மாற்றங்களைப் போர்க் களங்கள் மட்டும் செய்யவில்லை. புத்தகங்களும் செய்திருக்கின்றன.

18-ஆம் நூற்றாண்டு புத்தகங்களின் பொற்கால நூற்றாண்டு. காரல்மார்க்சின் 33 ஆண்டுக் கால உழைப்பில் உருவான “மூலதனம்” உழைக்கும் வர்க்கத்தை ஒற்றுமைப்படுத்தியது. அதன் மூலம் உழைப்பாளிகளின் தலைமையில் எழுந்த புரட்சி வெற்றி பெற்றது. “கடையனுக்கும் கடைத் தேற்றம்” என்னும் புத்தகம் தான் மோகன்தாஸ் காந்தியை மகாத்மாவாக்கியது. பேரறிஞர் அண்ணா, தனது அறுவை சிகிச்சைக்குப் போவதற்கு முன், தான் விரும்பிப் படித்த புத்தகத்தைப் படித்து முடித்த பிறகே அறுவை சிகிச்சை அரங்கிற்குச் சென்றார். ‘பயங்கரமான போராயுதங்கள் எவை?’ என்று கேட்ட போது, ‘புத்தகங்கள்’ தான் என்றார் மார்ட்டின் லூதர்கிங். ஒவ்வொரு படத்திலும் நடிக்க ஒப்புக் கொள்கிறபோது, பெறுகின்ற முன்பணத்தில் முதல் 100 டாலருக்கு புத்தகங்கள் வாங்கும் பழக்கத்தைக் கொண்டிருந்தார் சார்லிசாப்ளின். ‘மனிதனின் மாபெரும் கண்டுபிடிப்பு எது?’ எனக் கேட்டபோது, சற்றும் யோசிக்காமல், “புத்தகம்” என்று பதிலளித்தார் ஆல்பர்ட் ஐன்ஸ்டீன். ‘தனிமையான தீவில் தள்ளப்பட்டால், என்ன செய்வீர்கள் ?’ எனக் கேட்டபோது, “புத்தகங்களுடன் மகிழ்ச்சியாக வாழ்ந்து விட்டு வருவேன்” என்றார் நேரு.

தான், தூக்கிலிடப்படுவதற்கு ஒரு நிமிடம் முன்பு வரையிலும்,வாசித்துக் கொண்டேயிருந்தார் மாவீரன் பகத்சிங். “நான் வாசிக்காத ஒரு நல்ல புத்தகத்தை வாங்கிவந்து, என்னைச் சந்திப்பவனே எனது தலை சிறந்த நண்பன் ,” என்றார் ஆபிரகாம் லிங்கன்.வாசிப்பதும், எழுதுவதும் ஒரு நதியைப் போல, ஒரு புத்தகம் இன்னுமொரு புத்தகத்திற்கு அழைத்துச் செல்லும், மேலும் அது மற்றுமொரு புத்தகத்திற்கு அழைத்துச் செல்லும்… முடிவில்லா இந்த புத்தக நதியில் மூழ்கி, மூழ்கி அறிவானந்தம் பெறுவது மானுடத்தின் மகத்துவம்.

கட்டுரையாளர் : சிபிஎம் மாநிலக்குழு உறுப்பினர்.

Leave a Reply

You must be logged in to post a comment.