உன்னத உலகம்
உலகம் இன்று நமது உள்ளங்கையில். அதற்கு மனித உழைப்பும், அறிவியல் தொழில் நுட்ப வளர்ச்சியும் ஒரு காரணமாகும். ஆனால் ஒரு உன்னதமான உலகிற்கு புத்தகங்கள்தான் காரணமாக இருக்க முடியும். அறிவியல் தொழில்நுட்பம் உலகை, உலகின் அனைத்துச் செயல்பாடுகளையும் உள்ளபடியே நம் கண்முன் நிறுத்துகின்றன. ஆனால் புத்தகங்கள் உலகை பல்வேறுவிதமான பரிமாணங்களில்  சிந்திக்கத் தூண்டுகின்றன. கண்ணுக்குத் தெரியாத உலகை எழுத்துவடிவில் வாசிக்கும் போது எண்ணற்ற கற்பனைகள் தோன்றுகின்றது. சிந்தனைகள்தான் சிலந்திவலைக்குள் சிக்கிக்கொண்டோரையும் மீட்டெடுக்கும் ஆயுதமாகும். சகமனிதனை நேசிக்கவும், புரிந்துகொள்ளவும், அரவணைத்துக்கொள்ளவும் நம்மை தயார்படுத்துபவை புத்தகங்களே. சாதி, மதம், இனம், மொழி உணர்வுகள் தாண்டி நம்மை ஒற்றுமைப்படுத்துவதும் புத்தகங்களே. கதைகள் வழியாகவும், பாடல்கள் வழியாகவும் நம் மனதை இலகுவாக்குவதும், வலிமைப்படுத்துவதும் புத்தகங்களே. புத்தகங்கள் நம் மனதை பக்குவப்படுத்துகிறது. பரந்த உலகை நமக்களித்து பரவசப்படுத்துகிறது.

வாசிப்பால் உயர்வோம்
சட்ட மாமேதை அம்பேத்கர், சமூகப் போராட்டத்தின் முன்னோடி பெரியார், உலகை வசீகரித்த லெனின், சார்பியலின் தந்தை ஐன்ஸ்டீன், சமீபத்தில் நம்மைவிட்டுப் பிரிந்த பிரபஞ்ச நாயகன் ஸ்டீபன் ஹாக்கிங் ஆகியோர் புத்தகங்களால் உயர்ந்தவர்கள். புத்தக வாசிப்பு அவர்களை உயர்ந்த இடத்தில் வைத்துள்ளது. அவர்கள் எழுதிய புத்தகங்கள் நம்மையும் உயர்ந்த இடத்திற்கு அழைத்துச் செல்கிறது. மார்க்ஸ் என்ற மாமேதை தன் வாழ்நாள் முழுக்க நூல்களை நேசித்தவர். நூலகங்களில் தங்கி உணவு தண்ணீர் இல்லாமல் கூட புத்தகங்களை படித்து முடித்துவிடுவாராம். டாக்டர் அம்பேத்கர் அவர்கள் நூலகங்களுக்கு அருகிலேயே தங்கிப் படிக்கும் பழக்கமுள்ளவராம். பெரியார் நமக்கு விட்டுச்சென்ற பொக்கிஷம்தான் சமூகநீதி. அவர் பேசிய பேச்சுக்கள், எழுதிய எழுத்துகள் புத்தகங்களாக மலர்ந்ததன் விளைவு மனிதர்கள் மனிதர்களாக மதிக்கப்பட்டார்கள். உலகத் தொழிலாளர்களின், உலக மக்களின் பொருளாதார விடுதலைக்காக ”மூலதனத்தை”  உலகிற்கு தந்தவர் மார்க்ஸ். பகத்சிங்கை தூக்கிலிட காவலர்கள் அழைக்க சென்ற போது, லெனின் எழுதிய ‘அரசும் புரட்சியும்’ என்ற நூலை படித்துக் கொண்டிருந்தாராம். ” கொஞ்சம் நேர அவகாசம்  கொடுத்தால் இதை படித்து முடித்துவிடுவேன் ” என்று சொன்னாராம். புத்தகங்களோடு உறவாடியவர்கள் உயர்ந்த மனிதர்களாக உருவாகியுள்ளனர். வாசிப்பு தலைமைப் பண்பையும், பொறுமையும், தெளிவான நிலைப்பாட்டையும், உறுதியான செயல்பாட்டையும், பிரச்சனைகளுக்கான  தீர்வையும் நமக்குத் தருகிறது.

தத்துவங்கள் மீதான போர்
ஒரு உன்னதமான உலகில் நாம் வாழ்ந்துகொண்டிருக்கிறோம். இந்த இயற்கை நமக்கு அல்ல அல்ல கொடுத்துக்கொண்டே இருக்கிறது. மனிதன் தன் சிந்தனையால் உழைப்பால் இந்த உலகை பலநூறுமடங்கு உயர்த்தியிருக்கிறான். அதே நேரத்தில்  ஒரு சாரருக்கான உலகமாக மாற்றவும், இந்த இயற்கையை சுரண்டுவதும் நடைபெற்றுக்கொண்டே இருக்கிறது. நம்மைப்போன்ற மக்கள் இயக்கங்கள் அதற்கெதிரான பிரச்சாரங்களை முன்னெடுத்துச் சென்று கொண்டுதானிருக்கிறோம். ஆனால் இன்றைய சூழல் உலக அளவிலும், இந்தியாவிலும் பிற்போக்குத் தனங்களுக்கு தற்காலிக வெற்றி கிடைத்து வருகிறது. சினிமாவில் வில்லன்கள் ஹீரோவாக ஆவதைப்போல. சினிமாவில்  நடப்பது நிஜமாகிவிடக்கூடாது. இன்று திரிபுரா ,தமிழகத்தில் லெனின், பெரியார், அம்பேத்கர் சிலை உடைப்புகள் நடைபெற்றுள்ளது. இது சிலை மீதான தாக்குதல் அல்ல. தத்துவங்களின் மீதான போர். சமூக விடுதலைப் போராளிகளான லெனின், அம்பேத்கர், பெரியார் போன்றவர்கள் விதைத்த விதை நமக்குள் விருட்சமாய் எழுந்துள்ளது. அவர்கள் எழுதிய பேசிய பேச்சுகள் புத்தகங்களாய் வந்துள்ளது. அதை வரும் தலைமுறைக்கு கொண்டு சேர்க்க வேண்டிய பொறுப்பு நமக்குள்ளது. சாதி, மத, இன வெறியர்களுக்கு எதிராக நாம் புத்தகங்களை ஏந்துவோம். புத்தகங்களைவிட சிறந்த ஆயுதம் ஏது..?

உலகப்புத்தக  தின வரலாறு   
1995ம் ஆண்டு ஆகஸ்ட் 25 முதல் நவம்பர் 16 வரை பாரீஸ் நகரில் நடைபெற்ற யுனெஸ்கோவின் 28வது மாநாட்டில் ஒரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அத்தீர்மானத்தில் அறிவைப் பரப்புவதற்கும், உலகெங்கிலும் உள்ள பல்வேறு கலாச்சாரங்கள் பற்றிய விழிப்புணர்வினை பெறுவதற்கும், புரிதல், சகிப்புத்தன்மை போன்றவற்றின் மூலம் மனிதர்களின் ஒழுக்கத்தினை மேம்படுத்தவும், புத்தகம் சிறந்த கருவியாக விளங்குவதால் புத்தக தினமாக கொண்டாடப்படும் என அறிவிக்கப்பட்டது. அதன் தொடர்ச்சியாக ஒவ்வொரு ஆண்டும்  ஏப்ரல் 23ம் நாள் உலகப்புத்தகதினம் கொண்டாடப்பட்டு வருகிறது.
உலக புத்தக மற்றும் பதிப்புரிமை நாள், அல்லது புத்தகநாள் என்பது வாசித்தல், பதிப்பித்தல் மற்றும் அறிவுசார் சொத்துக்களைப் பாதுகாத்தல் போன்றவற்றை வளர்க்கும் நோக்கத்துடனும் இந்நாள் கொண்டாடப்படுகிறது. உலகப்புத்தகத் தினத்திற்கு பல்வேறு முக்கியத்துவம் உள்ளது. குறிப்பாக  1616ம் ஆண்டு இதே நாளில் மிகுவேல் டி செர்வாண்டிஸ், வில்லியம் ஷேக்ஸ்பியர், இன்கா டி லா வேகா ஆகியோர் காலமானார்கள். இதே நாளில் மொரிஸ் ட்ருவோன், ஹோல்டோர் லக்ஸ்னெஸ், விளாடிமிர், ஜோசப் பிளா ஆகிய எழுத்தாளர்களும் மறைந்த நாளாகும்.
இந்த நாளைக் கொண்டாடும் எண்ணம் முதன்முதலாக ஸ்பெயின் நாட்டிலுள்ள கட்டலோனியாவில் உருவானது. இந்நாட்டில் உள்ள மக்கள் ஏப்ரல் 23 ஐ சென் ஜோர்ஜின் நாளாகக் கொண்டாடினர். இந்நாளில் ஆண்களும் பெண்களும் புத்தகங்களையும், ரோஜா மலர்களையும் பரிசாகக் கொடுத்து பரிமாற்றிக்கொண்டனர். இந்தப் பழக்கமே பின்னாளில் புத்தகப் பரிமாற்றமாக மாறிவிட்டது.

ஏழையா…பணக்காரரா…?
இன்று நம்மில் பெரும்பாலும் புத்தகம் படிக்க நேரமில்லை என்றும், புத்தகம் வாங்கினால் செலவாகிறது என்றும் சொல்கிறார்கள். உண்மையில்  புத்தகத்திற்கான சிறு செலவினமும், நாம் ஒதுக்கும் நேரமுமே மிகச்சிறந்த முதலீடு என்பதை பின்னாளில் உணர்வீர்கள். எத்தனை மாடிக்கட்டிடமாக இருந்தாலும் புத்தகம் இல்லாத வீடு ஏழ்மையான வீடுதான். குடிசை வீடாக இருந்தாலும் புத்தகங்கள் நிறைந்த வீடுதான்  மிகப்பெரிய சொத்துகள் உள்ள வீடு என்பேன். நாம் விதைக்கும் விதைகள் நாளை மரங்களாகவும், தோப்பாகவும் மாறுகிறது. அதுபோல நாம் வாசிக்கும் வாசிப்புதான் சராசரி மனிதர்களிடம் இருந்து வித்தியாசப்படுத்திக் காட்டுகிறது. நாம் யாராக இருக்கப் போகிறோம் என்பதை நீங்கள்தான் முடிவு செய்ய வேண்டும்.

Leave a Reply

You must be logged in to post a comment.