புதுதில்லி, ஏப்

புதுதில்லியில் அமைந்துள்ள ரோஹிண்யா முஸ்லீம்கள் அகதிகள் முகாம் தீ வைத்துக் கொளுத்தப்பட்டுள்ளது. இதனைச் செய்ததாக ஒப்புக்கொண்டுள்ள பாஜக இளைஞரணித் தலைவரை உடனடியாகக் கைது செய்யுமாறு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தில்லி மாநிலக் குழு கோரியுள்ளது.

இது தொடர்பாக தில்லி, மாநில செயலாளர் கே,எம். திவாரி ஓர் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கோரியிருப்பதாவது:
புதுதில்லி,தென்கிழக்குப் பகுதியில், காலிந்தி குஞ்ச் என்னுமிடத்தில் ரோஹிண்யா முஸ்லீம்களுக்காக அமைக்கப்பட்டிருந்த அகதிகள் முகாம் தீ வைத்துக் கொளுத்தப்பட்டது. இதில் அங்கு அமர்த்தப்பட்டிருந்த குடும்பங்கள் வீடற்றவர்களாகிவிட்டன. அவர்கள் வைத்திருந்த உடைமைகள், அடையாள அட்டைகள், ஐ.நா.ஸ்தாபனம் அளித்திருந்த விசாக்கள் எரிந்து சாம்பலாகிவிட்டன. இதனைத்திட்டமிட்டு தாங்கள்தான் நடத்தியதாக பாஜக இளைஞரணித் தலைவர் மணிஷ் சந்தெலா என்பவர் மிகவும் பீற்றிக்கொண்டு, தன்னுடைய முகநூல் பக்கத்தில் வெளியிட்டிருந்தார். இவரது இழி செயலுக்கு எதிராக தில்லி, காவல் துறையினரிடம் புகார் அளிக்கப்பட்டிருந்தபோதிலும், அவரைக் கைது செய்திட தில்லிக் காவல்துறையினர் இதுநாள் வரை முன்வரவில்லை.

ஆளும் பாஜகவின் உறுப்பினர்கள் எவ்விதக் கூச்சநாச்சமுமின்றி மேற்கொண்டுள்ள முஸ்லீம்களுக்கு எதிரான இந்தக் கேடுகெட்ட மதவெறி நடவடிக்கையை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தில்லி மாநிலக்குழு கடுமையாகக் கண்டனம் செய்கிறது. ஆர்எஸ்எஸ்/பாஜக இந்துத்துவா வெறியர்கள் தங்கள் இந்துத்துவா நிகழ்ச்சிநிரலை மேற்கொண்டிட எவ்வளவு இழவான கிரிமினல் நடவடிக்கைகளில் ஈடுபட்டாலும் அவர்கள் மீது காவல்துறை எவ்விதமான நடவடிக்கையும் எடுக்காது, அவர்களைத் தங்கள் இஷ்டம் போல் செயல்பட அனுமதித்திருப்பது மிகவும் மோசமான நிலைக்குச் சென்றிருக்கிறது.  தில்லிக் காவல்துறை இதில் உடனடியாகத் தலையிட்டு, காலிந்தி குஞ்ச் பகுதியில் அமைக்கப்பட்டிருந்த ரோஹிண்யா முஸ்லீம்கள் அகதிகள் முகாமைத் தீவைத்துக் கொளுத்திட்ட கயவர்களை உடனடியாகக் கைது செய்திட வேண்டும் என்று கோருகிறோம். மேலும், அகதிகள் முகாமில் தங்க வைக்கப்பட்டிருந்த அனைவருக்கும் மாற்று ஏற்பாடுகளையும் பாதுகாப்பையும் உடனடியாக வழங்கிட வேண்டும். ரோஹிண்யா முஸ்லீம்கள் மிகவும் மனிதாபிமானமற்ற முறையில் நெருக்கடிக்கு உள்ளாகி இருக்கிறார்கள். பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் அனைவருக்கும் உரிய இழப்பீடு வழங்க வேண்டியது மத்திய அரசின் கடமையாகும்.
இவ்வாறு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தில்லி மாநிலக்குழு கோரியுள்ளது.
(ந.நி.)

Leave a Reply

You must be logged in to post a comment.