புத்தகங்களை பொக்கிஷங்கள் என்று சொன்னால் அது மிகையாகாது. ஏனென்றால் பொக்கிஷங்கள் என்று கூறப்படும் பல அரிய தகவல்களை நாம் அறியபயன்பட்டது புத்தகங்கள்தான். அதனால்தான் “பழங்காலத்து மகா புருஷர்களை நேரில் சந்தித்து, அவர்களுடன் உரையாட வேண்டுமா? நூலகத்துக்குப் போ” என்று கூறினார் இருபதாம் நூற்றாண்டின் மாபெரும் புரட்சியாளர் மாசேதுங்.

உலகின் பல அறிஞர்கள் தலையில் தூக்கி வைத்துக்கொண்டாடிய புத்தகப் பொக்கிஷங்களைக் கொண்டாடுவதற்கு உருவாக்கப்பட்ட தினம்தான் உலக புத்தக மற்றும் பதிப்புரிமை தினம். உலகின் தலைசிறந்த எழுத்தாளர்களான ஸ்பெயினின் மிகெல் தே செர்வாந்தேஸ் மற்றும் இங்கிலாந்தின் வில்லியம்ஸ் ஷேக்ஸ்பியர் ஆகிய இருவரும் 1616 ஆம் ஆண்டு ஏப்ரல் 23 ஆம் தேதி காலமானார்கள். இந்த நாளை உலகப் புத்தக தினமாகக் கொண்டாட வேண்டும் என்று சர்வதேச பதிப்பாளர்கள் சங்கம் கோரிக்கை வைத்தது.  இதனைத் தொடர்ந்து 1995 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் பாரீஸ் நகரில் நடைபெற்ற யுனெஸ்கோவின் 28ஆவது மாநாட்டில் புத்தக தின தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அந்தத் தீர்மானத்தில் அறிவைப் பரப்ப, உலகின் பல்வேறு கலாச்சாரங்களை அறிய புத்தகம் ஒரு சிறந்த கருவியாக இருப்பதால் ஏப்ரல் 23 உலக புத்தக தினமாகக் கொண்டாடப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

ஸ்பெயின் நாட்டிலுள்ள கட்டலொனியாவில் 1995 ஆம் ஆண்டு நடைபெற்ற முதல் புத்தக தின விழாவில் ஆண்களும் பெண்களும் புத்தகங்களையும் ரோஜா மலர்களையும் ஒருவருக்கொருவர் பரிமாறிக் கொண்டனர். யுனெஸ்கோவானது சர்வதேச பதிப்பாளர்கள் சங்கம், சர்வதேச புத்தக விற்பனையாளர்கள் கூட்டமைப்பு மற்றும் நூலக சங்கங்களின் கூட்டமைப்பு ஆகியவற்றுடன் இணைந்து ஒவ்வொரு ஆண்டும் புத்தக தினத்தை வெகு விமரிசையாகக் கொண்டாடி வருகிறது.  இந்த தினத்தின் மாபெரும் வெற்றியைத் தொடர்ந்து ஒவ்வொரு நாட்டிலும் பல்வேறு வசதிகளைக் கொண்ட அனைத்துப் புத்தங்களும் கிடைக்கும் வகையில் ஒருபுத்தக தலைநகரை உருவாக்கும் திட்டத்தை 2001 ஆம் ஆண்டு யுனெஸ்கோ தொடங்கியது. மேலும் ஒவ்வொரு ஆண்டும் ஒரு நகரத்தை புத்தகத் தலைநகரமாகத் தேர்வு செய்யும்.

இதுவரை 19 நகரங்கள் இந்த திட்டத்தின் கீழ் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன. 2018 ஆம் ஆண்டு புத்தகத் தலைநகராக கிரீஸ் நாட்டில் உள்ள ஏதென்ஸ் நகரமும், 2019 ஆம் ஆண்டில் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் நாடுகளின் ஷார்ஜா நகரமும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தின் கீழ் 2003 ஆம் ஆண்டு தில்லி நகரம் தேர்ந்தெடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. புத்தகதினக் கொண்டாட்டங்களில் முக்கியப் பங்குவகிப்பது யுனெஸ்கோவின் படைப்பாக்க நகரங்களாகும். இந்த நகரங்களில் இலக்கியப் பிரிவில் தேர்ந்தெடுக்கப்பட்ட 28 நகரங்களில் உலகப் புத்தக தினம் பல்வேறு வடிவங்களில் கொண்டாடப்படுகிறது. எழுத்தாளர்கள், வெளியீட்டாளர்கள், ஆசிரியர்கள் பல்வேறு அரசு சாரா நிறுவனங்களுடன் சேர்ந்து பல்லாயிரக்கணக்கான மக்களைத் திரட்டி இந்தப் புத்தக தினத்தைக் கொண்டாடுவதுதான் இந்த படைப்பாக்க நகரங்களின் நோக்கமாகும்.

சர்வதேச பதிப்பாளர்கள் சங்கம், உலக அறிவுசார் சொத்துரிமை நிறுவனம் ஆகிய அமைப்புகள் இணைந்து முதன் முதலாக புத்தக வெளியீட்டுத் துறையில் ஓர் ஆய்வைக் கடந்த ஆண்டு நடத்தின. இந்த ஆய்வில் 35 நாடுகளைச் சேர்ந்த வெளியீட்டாளர்கள் கலந்து கொண்டனர். இந்த ஆய்வின் மூலம் 2016 ஆம் ஆண்டு உலகப் பதிப்பு மற்றும் வெளியீட்டுத் துறையில் 49.1 பில்லியன் அமெரிக்கா டாலர் வருமானம் ஈட்டியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் அமெரிக்கா முதல் இடத்திலும், இங்கிலாந்து இரண்டாவது இடத்திலும், ஸ்பெயின் மூன்றாவது இடத்திலும் உள்ளன. இது போன்று இந்திய வெளியீட்டாளர்கள் சங்கம், இந்திய வெளியீட்டாளர்கள் கூட்டமைப்புடன் நீல்சன் இந்தியா நிறுவனம், இந்திய புத்தகத் சந்தை தொடர்பாகஓர் ஆய்வை நடத்தியது. அதில் 2016 இந்திய வெளியீட்டு சந்தை மதிப்பு 7. 7 பில்லியன் அமெரிக்க டாலராக இருந்தது என்றும், இது 2020 ஆம் ஆண்டு 19.3 பில்லியனாக அதிகரிக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேற்கண்ட இரண்டு ஆய்வுகளை ஒப்பிட்டுப் பார்த்தாலே இந்தியாவில் புத்தகம் வாங்கி வாசிக்கும் பழக்கம் எந்த நிலையில் இருக்கிறது என்று தெரியும். “புரட்சிப் பாதையில் கைத்துப்பாக்கிகளைவிட பெரிய ஆயுதங்கள் புத்தகங்களே”என்றார் ரஷ்யப் புரட்சி நாயகன் லெனின். ஆம் ஒரு சமூகத்தை மாற்றவும், அந்த மாற்றம் எப்படி நிகழ்ந்தது என்பதையும் அதை அடுத்த சந்ததியினருக்குக் கொண்டு செல்வதிலும் முக்கியப் பங்கு வகிப்பது புத்தகங்கள்தான்.  வாசிப்புப் பழக்கத்தை சிறு வயது முதலே ஊக்குவிக்க வேண்டும். இதற்குப் பெரிதாக எதுவும் செய்ய வேண்டாம். இந்தக் கோடை விடுமுறையில் உங்கள் குழந்தைகளை அருகில் இருக்கும் நூலகங்களுக்கு அழைத்துச் செல்லுங்கள். பல்வேறு வகையான புத்தகங்களைப் புரட்ட விடுங்கள். புத்தகங்களை புரட்டப் புரட்டத்தான் புதிய சிந்தனைகள் பிறக்கும். அந்த சிந்தனைகள் பல புதிய மாற்றங்களுக்கு வித்திடும்.

Leave A Reply