மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 22ஆவது அகில இந்திய மாநாட்டின் ஐந்து நாள் நிகழ்வுகளுக்குத் தலைமைக் குழுவாக செயல்பட்ட அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் மாணிக் சர்க்கார் ஞாயிறன்று பிற்பகல் முறைப்படி மாநாட்டை முடித்து வைத்து உரையாற்றினார்.

அப்போது அவர் கூறுகையில், வர்க்கப் போராட்டத்தையும், வெகுஜன இயக்கங்களையும் மிகப்பெருமளவு நடத்துவோம். நம் முன் மிகப்பெரும் போராட்டம் காத்திருக்கிறது. 2019ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில், பாசிச ஆர்எஸ்எஸ்ஸின் மூலம் இயக்கப்படும் பாரதிய ஜனதா கட்சியை படுதோல்வி அடையச் செய்ய வேண்டும். இதற்காக நாம் மிகப்பெரும் முயற்சியை மேற்கொண்டு அதிகபட்ச ஆதரவைத் திரட்ட வேண்டும். தொழிலாளி வர்க்கம், விவசாயத் தொழிலாளர்கள், விவசாயிகள், தலித்துகள், பழங்குடி மக்கள், அனைத்து வகையான சிறுபான்மை மக்கள் என அனைத்துத் தரப்பினரையும் நாம் அணிதிரட்ட வேண்டும். நமக்கு நம் கட்சி காங்கிரஸ் கொடுத்திருக்கும் கடமைகளை ஒன்றுபட்டு நிறைவேற்றுவோம்.

இந்த ஐந்து நாட்கள் மட்டுமல்ல, கடந்த சில மாதங்களாகவே இந்த அகில இந்திய மாநாட்டை வெற்றிகரமாக நடத்திக் கொடுப்பதற்கு தெலுங்கானா தோழர்கள் அர்ப்பணிப்போடு பணியாற்றியுள்ளனர். அவர்களுக்கும் இந்த மாநாட்டின் சார்பாக நன்றி தெரிவித்து முறைப்படி இந்த அகில இந்திய மாநாட்டை முடித்து வைக்கிறேன். இவ்வாறு மாணிக் சர்க்கார் கூறினார்.

Leave A Reply

%d bloggers like this: