நாகர்கோவில்,
இரண்டாவது நாளாக ஞாயிறன்று கன்னியாகுமரியில் கடல் சீற்றத்துடன் காணப்பட்டது. கடல் அலையில் படகுகள் இழுத்துச் செல்லப்பட்டன.

மார்த்தாண்டம் அருகே கொட்டில் பாடு, வள்ளவிளை, குளச்சல், கொல்லங் கோடு உள்ளிட்ட பகுதிகளில் கடல் சீற் றத்துடன் காணப்பட்டது. குளச்சல், கொட்டில்பாடு மற்றும் வள்ளவிளை பகுதிகளில் கடல் அலைகளின் வேகம் அதிகரித்து காணப்பட்டது. கடல் சீற்றம் காரணமாக, கடல்நீர் வீடுகளுக்குள் புகுந்தது. இதனைத் தொடர்ந்து வள்ளவிளை கரையோரம் உள்ள மீனவர்களை முகாம்களுக்கு மாற்றும் பணி நடைபெற்றது. கடல்நீர் வீடுகளுக்குள் புகுந்ததால் பாதிக்கப் பட்ட மக்களுக்கு, மாற்று இடம் தயார் நிலையில் உள்ளதாக வருவாய் அலுவலர் தெரிவித்தார்.

கடல் சீற்றத்தால் குளச்சல், மிடாலம்,அழிக்கால், மண்டைக்காடு புதூர், கொட்டில்பாடு, வாணியம்பாடி, குறும் பனை, ராமன்துறை, கொல்லங்கோடு, வள்ளவிளை, தேங்காய்ப்பட்டிணம், கடியப்பட்டணம் உட்பட கடற்கரை கிராமங்கள் நிலைகுலைந்தன. இந்த பகுதிகளில் கடல்தண்ணீர் வீட்டிற்குள்புகுந்ததோடு மீனவர்களின் படகுகளையும் சேதமாக்கியது.  இதனால் பொதுமக்கள் கரை பகுதிகளில் உள்ள உறவினர்கள் வீடுகளில் தஞ்சமடைந்தனர். மேலும் மிடாலம், மண்டைக்காடு புதூர், வாணியம்பாடி உட்பட பல கடற்கரை கிராம மக்களை வருவாய்த்துறையினர் மீட்டு பாதுகாப்பான பகுதிகளில் தங்க வைத்தனர். அழிக்காலில் வீடுகளுக்குள் கடல் நீர் புகுந்ததில் பாதிக்கப்பட்ட 36 பேர் புனித மரியன்னை மண்டபத்தில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். பிள்ளைத்தோப் பில் 30 பேர் மீட்கப்பட்டு கரைபகுதியில் உள்ள புனித வளனார் மண்டபத்தில் தங்கவைக்கப்பட்டனர். கொல்லங்கோட்டில் கடல் சீற்றத்தால் பாதிக்கப்பட்ட 34 பேர் மீட்கப்பட்டு அங்குள்ள மண்டபத்தில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

கன்னியாகுமரியில் சனிக்கிழமை அதிகாலை முதல் கடல் சீற்றத்துடன் காணப்பட்டது. கடல் அலைகள் 10 முதல் 15 அடி உயரத்துக்கு ஆக்ரோஷமாக எழுந்தன. இதையடுத்து விவேகானந்தர் நினைவு மண்டபம் மற்றும் திரு வள்ளுவர் சிலைக்கு படகுப் போக்குவரத்து நாள் முழுவதும் ரத்து செய்யப்படுவதாக பூம்புகார் நிர்வாகம் அறிவித்தது. காலை 8 மணி முதல் மாலை 4 மணி வரை படகுப்போக்குவரத்து ரத்துசெய்யப்பட்டது. இதனால், சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர். கோடை விடுமுறை என்பதால், முக்கடல் சங்கமம், காந்தி மண்டப சாலை, சன்னதித் தெரு உள்ளிட்ட பகுதிகளில் கூட்டம் அதிகமாக இருந்தது. கடல்சீற்றம் காரணமாக முக்கடல் சங்கமம், வட்டக்கோட்டை, சொத்தவிளை உள்ளிட்ட பகுதிகளில் சுற்றுலா பயணிகள் கடலில் குளிக்க தடை விதிக்கப்பட்டிருந்தது.

ராஜாக்கமங்கலத்தை அடுத்துள்ளஅழிக்கால் கடற்கரை கிராமம் கடல்மட்டத்தில் இருந்து தாழ்வான பகுதியில் இருந்ததால் சனிக்கிழமை இரவில்இருந்து அங்கு வீடுகளுக்குள் தண்ணீர்புகுந்தது. மேலும் சாலைகளிலும் கடல் நீர் தேங்கி நின்றது. இதனால் அங்குள்ள 40க்கும் மேற்பட்ட வீடுகளில் இருந்து வெளியே வரமுடியாமல் பொதுமக்கள் சிரமம் அடைந்தனர். அப்பகுதியில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. இதைப்போல் பிள்ளைத்தோப்பு, வள்ளவிளை, மிடாலம், மண்டைக்காடு புதூர்,தேங்காய்ப்பட்டிணம் போன்ற பகுதிகளிலும் வீடுகளுக்குள் கடல் நீர் புகுந் தன. கடல் சீற்றத்தால் அழிக்கால் பகுதியில் 60க்கும் மேற்பட்ட வீடுகளுக்குள் கடல் நீர் புகுந்து அறைகளில் தேங்கிக்கிடக்கிறது.  ஞாயிற்றுக்கிழமை பகலிலும் அலையின் வேகம் அதிகமாக இருந்ததால் தண்ணீர் வடியவில்லை. கடல் சீற்றத்தால்மிடாலத்தில் ஒரு நாட்டு படகு கடலுக்குள் இழுத்துச் செல்லப்பட்டது. குளச்சல் மீன்பிடி துறைமுகத்தில் நிறுத்தப்பட்டிருந்த விசைப்படகு ஒன்று அலையின் விசையில் படகு தளத்தில் வேகமாக விழுந்ததில் சேதமடைந்தது. அங்கு நாட்டு படகு ஒன்றும் கடலில் அடித்துச் செல்லப்பட்டு பின்னர் கரை ஒதுங்கியது. அழிக்காலில் நாட்டுப்படகு ஒன்று சேதமடைந்தது. ராமன்துறை, அழிக்கால், தேங்காய்பட்டிணம், இனயம், குறும்பனை, வள்ளவிளை ஆகிய இடங்களில் கடல் அலை சாலைகளை அரித்து சென்றதாலும், கடல் நீர்சாலைகளில் தேங்கி நின்றதாலும் போக்குவரத்து துண்டிக்கப்பட்டது.

மேலும் கடலோரங்களில் குறும்பனையில் 4 வீடுகளும், வள்ளவிளையில் 3 வீடுகளும், கொட்டில்பாடு வெட்டுடையில் ஒரு வீடும் என மொத்தம் 8 வீடுகள் சேதமடைந்தன. குளச்சல் துறைமுக பகுதியில் ஞாயிறு இருசக்கரவாகனத்தில் வந்த இரு இளைஞர்கள் கரைபகுதியில் அடித்த அலையில் சிக்கி விழுந்து காயம் அடைந்தனர். அப்பகுதியில் மேலும் இருவர் அலையில் சிக்கிகாயம் அடைந்தனர். ஞாயிற்றுக்கிழமையும் கடல் சீற்றம் காணப்பட்டதால் சுனாமி,ஒக்கி புயல் போன்ற பீதி குமரி கடலோரங்களில் நிலவியது.

இராமநாதபுரம்:
இராமநாதபுரம் மாவட்டம் திருப்பாலைக்குடியில் சுமார் ஒரு கிலோமீட்டர் கடல் உள்வாங்கியது. இராமேஸ்வரம் அக்னி தீர்த்த கரையில் காவல்துறையினரின் எச்சரிக்கையை மீறி பலர் கடலுக்குள் இறங்கி நீராடினர். பாம்பன், மண்டபம், தனுஸ்கோடி, இராமேஸ்வரம் உட்பட மாவட்டம் முழுவதும் சுமார் 8 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நாட்டுப்படகுகள் மீன்பிடிக்க செல்லவில்லை.

Leave A Reply