மருத்துவக் கல்விக்கான நீட் தேர்வு தமிழகம் உள்ளிட்ட மாநில மாணவர்களின் மருத்துவர் கனவை சிதைத்து வருகிறது. திட்டமிட்டே பல்வேறு குழப்பங்களும், குளறுபடிகளும் செய்யப்பட்டு வருகின்றன. தமிழகத்திற்கு நீட் தேர்விலிருந்து விலக்கு அளிக்கப்படும் என்ற மத்திய ஆட்சியாளர்களின் உறுதிமொழி கல்லறையில் புதைக்கப்பட்டுவிட்டது. விலக்கு பெற்ற தீருவோம் என்ற மாநில ஆட்சியாளர்கள் மத்திய அரசிடம் மண்டியிட்டுக் கிடக்கிறார்கள்.

மாநில பாடத்திட்டத்தின் கீழ் படிக்கும் மாணவர்களுக்கு சிபிஎஸ்இ பாடத்திட்டத்தின் கீழ் நடைபெறும் நீட் தேர்வு இரட்டைச் சுமையாக விளங்குகிறது. பிளஸ்-2 தேர்வு முடித்தவுடன் நீட் தேர்வுக்காக தயாராக வேண்டிய கட்டாயம் உள்ளது. இதற்கென உருவாக்கப்பட்டுள்ள பயிற்சி நிறுவனங்கள் மற்றும் கல்வி நிலையங்கள் லட்சக்கணக்கில் வசூலிக்கின்றன. கிராமப்புற மற்றும் ஏழை, எளிய மாணவர்களுக்கு இந்த வாய்ப்பு கிடைப்பது அரிதே. சிபிஎஸ்இ என்பது வானத்திலிருந்து குதித்த ஒன்றல்ல. சிபிஎஸ்இ தேர்வின்போது வினாத்தாள்கள் வெளியான விவகாரம் சந்தி சிரித்தது. இதைத் தடுக்க வகையில்லாதவர்கள் மீண்டும் தேர்வு எழுத வைத்து மாணவர்களைத்தான் தண்டித்தனர்.

இந்த லட்சணத்தில் நீட் தேர்வுக்கு விண்ணப்பித்த தமிழக மாணவர்கள் பலருக்கு வேறு மாநிலங்களில் தேர்வு மையம் ஒதுக்கப்பட்டுள்ள கொடுமையும் நடந்துள்ளது. ஏன் இப்படி அலைக்கழிக்கிறார்கள் என்பது புரியாத புதிராக உள்ளது. தமிழக மாணவர்கள் யாரும் தப்பி தவறிகூட நீட் தேர்வில் வெற்றி பெறக்கூடாது என்று கருதுகிறார்களோ என்று கூட எண்ணத் தோன்றுகிறது. தேர்வு என்பதே மாணவர்களை பதற்றப்படுத்தக்கூடிய ஒன்று. அதிலும் படிக்காத பாடத்தில் வைக்கப்படும் நீட் தேர்வு பதற்றத்தை அதிகமாக்கும்.அதிலும் தொலை தூர மாநிலங்களில் தேர்வு மையங்கள் என்றால் கேட்கவே வேண்டியதில்லை. மொழி தெரியாத இடத்தில் பெற்றோர்களோடு சென்று தங்கி தேர்வு எழுத வேண்டும். இதற்கு ஆகும் செலவு தனி. சாதாரண கிராமப்புற, எளிய மாணவர்களுக்கு இது சாத்தியமாகாது. கடந்த ஆண்டில் தேர்வு மையங்களில் சோதனை என்ற பெயரில் ஆடை, அணிகலன்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.இதனால் குறிப்பாக தேர்வு எழுதிய பெண்கள் மன உளைச்சலுக்கு ஆளானார்கள்.

தகுதி, திறமை என்ற பெயரில் பெரும்பகுதி மாணவர்களை மிரட்டுகிற வேலையைத்தான் சிபிஎஸ்இ செய்து வருகிறது. நீட் தேர்வே தேவையில்லை என்பதற்கான நியாயங்கள் அப்படியேதான் இருக்கின்றன. குறைந்தபட்சம் தேர்வு மையங்களையாவது விண்ணப்பித்துள்ள மாணவர்களின் அருகில் உள்ள இடங்களுக்கு மாற்ற வேண்டும். தமிழக மாணவர்களுக்கு என்ன நடந்தாலும் கண்டு கொள்ளாத ஒரு மாநில அரசுதான் தமிழகத்தில் உள்ளது. கல்வி முறையை பிற்போக்குத்தனமாக மாற்றுவது மறுபுறத்தில் அச்சுறுத்தும் தேர்வு முறை என்பது மாணவர்களுக்கு இழைக்கப்படும் பெரும் அநீதியாகும்.

Leave a Reply

You must be logged in to post a comment.