முகமது அமீன் நகர்(ஹைதராபாத்), ;
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஒன்றுபட்ட தீர்மானகரமான கட்சியாக இந்த மாநாட்டில் இருந்து வெளி வருகிறது. ஆர்.எஸ்.எஸ்., பாஜக ஆட்சியை வீழ்த்துவதே எங்கள் பிரதான கடமை என்று அகில இந்தியப் பொதுச் செயலாளர் சீத்தாராம் யெச்சூரி கூறினார்.

மாநாட்டில் கூடியிருந்த பிரதிநிதிகளின் உற்சாக வாழ்த்து முழக்கங்களுக்கு இடையே சீத்தாராம் யெச்சூரி உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளராக தேர்வு செய்யப்பட்டிருக்கும் நான், பொறுப்புமிக்க கடமைகளை நிறைவேற்ற என் முழு ஆற்றலையும் பயன்படுத்தி செயல்படுவேன் என்று என் கட்சிக்கும், நாட்டு மக்களுக்கும் உறுதியளிக்கிறேன். இந்த முக்கியமான மாநாட்டில் விரிவான விவாதங்கள் நடத்தி முக்கிய முடிவுகள் எடுத்திருக்கிறோம். இதில் இருந்து ஒட்டுமொத்தமாக ஒரே ஒருசெய்தியைத் தான் சொல்ல வேண்டு மென்றால், எங்கள் வர்க்க எதிரிகளுக்குச் சொல்லிக் கொள்கிறோம், நாங்கள் இங்கிருந்து ஒன்றுபட்ட, தீர்மானகரமான கட்சியாக வெளி வந்திருக்கிறோம்.

நவீன தாராளமயக் கொள்கைகளை மூர்க்கத்தனமாக அமலாக்கும் பாஜக – ஆர்எஸ்எஸ் ஆட்சியின் வகுப்புவாத சக்திகள் நாட்டின் மதச்சார்பற்ற, ஜனநாயகக் கட்டமைப்பைத் தகர்க்க அனுமதிக்க மாட்டோம் என்று நாட்டுக்கும், இந்த உலகத்துக்கும் தெரிவித்துக் கொள்கிறோம். நாடாளுமன்ற ஜனநாயகத்தையும், அரசமைப்புச் சட்ட அதிகாரம் பெற்றஅமைப்புகளையும் இந்த ஆட்சியாளர்கள் சீர்குலைப்பதை மக்கள் போராட்டங்களின் அழுத்தத்தின் மூலம் தடுத்து நிறுத்துவோம். நாட்டு நலன்,மக்கள் நலன் இரண்டையும் பாதுகாத்து புதிய இந்தியாவைப் படைப் போம்.பாரதிய ஜனதா அரசை வீழ்த்துவதுதான் எங்கள் பிரதான கடமை. நம்முன் மிகப்பெரும் போராட்டங்கள் காத்திருக்கின்றன. நாம் அதற்குத் தயாராக இருக்க வேண்டும். இங்கு நிறைவேற்றப்பட்டவை வெறும் தீர்மானங்கள் அல்ல. இந்த தீர்மானங்களின் அடிப்படையில் வெகு மக்கள் ஆதரவோடு மக்கள் நலன் காக்க புரட்சிகரப் போராட்டங்களை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மேற்கொள்ளும்.

மார்க்சிஸ்ட் கட்சிக்குள் ஒற்றுமையில்லை, கட்சி பலவீனமடையும் என்ற செய்தியை எதிர்பார்த்து எங்கள் வர்க்கஎதிரிகள் காத்திருந்தனர். ஆனால் அவர்கள் எதிர்பார்ப்புகளைப் பொய் யாக்கி, கட்சி ஒற்றுமையுடன், தீர்மானகரமான கட்சியாக வந்திருக்கிறது. இந்தநாட்டு மக்களை விடுவிப்போம். நாங்கள் அனைவரும் ஒன்றுபட்டு இந்தபோராட்டத்தை முன்னெடுத்துச் செல்வோம்.சுரண்டல், ஒடுக்குமுறை இல்லாத இந்தியாவை உருவாக்க ஆர்எஸ்எஸ் பாஜகவைத் தோற்கடிப்போம். இந்த மாநாடு இந்த நாட்டு மக்களுக்குச் சொல்லும் செய்தி இதுதான். இந்த ஆட்சியாளர்களின் எதேச்சதிகாரம், மதவெறி, ஜனநாயக நிறுவனங்கள் சீர்குலைப்பு, அமெரிக்காவின் இளையபங்காளியாக இந்தியாவை சரணாகதி அடையச் செய்வது ஆகிய நான்குஅம்சங்களை எதிர்த்து போராடி முறியடிப்போம். நாட்டுக்கு நல்ல திசைவழியை உருவாக்க, நல்லதொரு மேம்பட்ட இந்தியாவின் எதிர்காலத்திற்காக இந்திய மக்கள் எங்களோடு இணைந்து வாருங்கள் என்று அழைக்கிறேன்.

தனித்தனியாக இருக்கும் ஐந்துவிரல்கள் ஒன்றாக சேர்ந்து முஷ்டியை உயர்த்தினால் செவ்வணக்கம்! என்பதாகும். போராட்டக் களத்தில்அனைவரும் ஒன்றுபட்டு போராடுவோம். மக்கள் போராட்டத்தை வலுப் படுத்துவோம் என்ற செய்தியுடன் இங்கிருந்து செல்வோம்.  இவ்வாறு சீத்தாராம் யெச்சூரி கூறினார்.

Leave a Reply

You must be logged in to post a comment.