===எஸ்.ஏ.மாணிக்கம்====                                                                                                                                                    ஒன்றுபட்ட ஆந்திர மாநிலத்தின் கம்யூனிஸ்ட் இயக்க ஸ்தாபகரும், வீரியமிக்க தெலுங்கானா விவசாயிகள் போராட்டத்தின் தளபதியுமான பி.சுந்தரய்யாவின் பெயரிலான பி.சுந்தரய்யா விஞ்ஞான் பவன் ஹைதராபாத் நகரின் பிரதான பகுதியின் பகலிங்கபள்ளியில் பிரம்மாண்டமான கட்டிடத்தில் அமைந்துள்ளது. எல்.பி.கங்காதரராவ் நினைவு வாசிப்பு நூலகம், ஏழை மக்களுக்கான மருத்துவ ஆய்வகக்கூடம், கலைக்கூடம், கண்காட்சிக்கான அரங்கம், கருத்தரங்க அரங்கம், ஐடி மாணவர்களுக்கான மீடியா கூடம் உள்ளிட்ட மக்கள் பயன்பாட்டிற்கான பல்வேறு வசதிகளைக்கொண்ட தனித்தனி அரங்குகள் அதில் அமைந்துள்ளன.

இவ்வளாகத்தின் ஒரு பகுதியில் பி.சுந்தரய்யா தனது சொந்த வாழ்க்கையில் பயன்படுத்திய பொருட்களை பாதுகாத்து வைத்துள்ள காட்சிக்கூடமும் அமைந்துள்ளது. அவரின் எளிமையான வாழ்க்கையை உணர்த்திடும் வகையில், சுமார் 60 ஆண்டுகளுக்கு முற்பட்ட கிராமபோன், ரேடியோ, தட்டச்சு, எழுது பொருட்கள், எளிய பைஜமா உடைகள், குக்கர், மண்பாண்ட சமையல் பொருட்கள், அவர் அறையில் இருந்து துவக்க கால தலைவர்களின் புகைப்படங்கள், அவரது துணைவியார் லீலா சுந்தரய்யா உடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் என அவரது வரலாற்றை மீண்டும் நினைவுபடுத்தும் வகையில் வைக்கப்பட்டுள்ளது.அதில் மிகவும் குறிப்பிட வேண்டிய ஒரு பொருள் அங்கு காட்சிக்கு வைக்கப்பட்டுள்ள சைக்கிள் ஆகும். இன்றைய நாட்களில் உள்ளது போன்ற போக்குவரத்து வசதிகள் 1940களில் இல்லை. ரயில் மற்றும் பஸ் போக்குவரத்து மிகவும் அரிதானதாகவே இருந்தது. தென் மாநிலங்களில் கம்யூனிஸ்ட் இயக்கத்தினை கட்டும் பொறுப்பினை ஏற்றிருந்த பி.சுந்தரய்யா தமிழகம், கேரளம், கர்நாடக மாநிலப்பகுதிகளில் அடிக்கடி பயணிக்க வேண்டியிருந்தது. கூட்டத்தின் அவசியம் கருதி அவருடைய சொந்த ஊரான நெல்லூரிலிருந்து சென்னை வரையிலான சுமார் 180 கி.மீ. தூரம் சுமார் 7 மணி நேரத்தில் சைக்கிளிலேயே சென்றுள்ளார்.

அன்றைய சென்னை மாகாணத்தில் உருவான கம்யூனிஸ்ட் கட்சி முதல் கிளையை கட்டுவதற்கான பெருமுயற்சியின் ஒருபகுதியாக 1936- 37ம் ஆண்டுகளில் பி.சுந்தரய்யாவின் சைக்கிள் பயணமும் வரலாற்றில் இடம்பெற்றுள்ளது. அதுபோலவே ஜவகர்லால் நேரு பிரதமராக இருந்த நாடாளுமன்றத்தில் பி.சுந்தரய்யா நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினராகவும் இருந்துள்ளார். அந்த சமயங்களில் தனது நாடாளுமன்ற அலுவலகத்திலிருந்து நாடாளுமன்ற கட்டிடத்திற்கு சைக்கிளேலேயே சென்று வந்துள்ளார் சுந்தரய்யா. பெரும் பணக்காரர்களும், ஜமீன்தார்களும் உல்லாச கார்களில் நாடாளுமன்றத்திற்கு வந்து இறங்கும்போது பி.சுந்தரய்யா சைக்கிளில் வருவதைப் பார்த்து அனைவரும் வியந்துள்ளனர். கம்யூனிஸ்ட் இயக்கத்தின் எளிய மனிதராக, ஆற்றல் மிக்க தலைவராக, போராளியாக வாழ்ந்தவர் பி.சுந்தரய்யா. அவரது வாழ்நாட்களின் ஒருபகுதியாக இருந்த சைக்கிள் இந்த அருங்காட்சியகத்தில் பாதுகாத்து வைக்கப்பட்டுள்ளதும் பொருத்தமானதே.

Leave a Reply

You must be logged in to post a comment.