ஹைதராபாத்: 
ஏறத்தாழ நான்கு ஆண்டு காலம் தனது கட்சியின் தனிப்பெரும்பான்மை பலத்தில் ஆட்சியில் இருக்கும் நரேந்திர மோடி அரசு பெண்கள் இட ஒதுக்கீடு மசோதாவை நிறைவேற்றாமல் இரட்டை வேடம் போடுவதாக மார்க்சிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் பிருந்தா காரத் கூறினார்.

சனிக்கிழமை கட்சியின் 22ஆவது அகில இந்திய மாநாட்டில் மொத்தம் மூன்று தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இது பற்றி பிருந்தா காரத் கூறியதாவது: பெண்கள் இடஒதுக்கீட்டு சட்டத்தை நிறைவேற்றுவது குறித்து தீர்மானத்தை அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் சூர்யகாந்த மிஸ்ரா முன்மொழிய, மது கார்க் வழிமொழிந்தார்.

கதுவா, உன்னா பாலியல் வன்கொடுமைகளுக்கு எதிரான தீர்மானத்தை மத்தியக்குழு உறுப்பினர் முகமது யூசுப் தாரிகாமி முன்மொழிய, மாலினி பட்டாச்சார்யா வழிமொழிந்தார். மாற்றுத் திறனாளிகள் உரிமைக்கான அகில இந்திய சட்டத்தை நடைமுறைப்படுத்துவது குறித்து முரளிதரன் முன்மொழிய பி.ஜான்சிராணி வழிமொழிந்தார்.

மோடி ஆட்சிக்கு வந்து நான்காண்டு காலம் ஆகப் போகிறது. அவரது கட்சி தனிப்பெரும்பான்மை பலத்துடன் நாடாளுமன்றத்தில் இருக்கிறது. ஆனால் இந்த சட்டத்தை நிறைவேற்றுவது குறித்து மசோதாவை அவர் நாடாளுமன்றத்தில் ஒருமுறை கூட தாக்கல் செய்யவில்லை. பெண்கள் உரிமை குறித்து சத்தமாகப் பேசிக் கொண்டு, நடைமுறையில் பெண்கள் இட ஒதுக்கீடு சட்டத்தை நிறைவேற்றாமல் இரட்டை வேசம் போடுவதை இந்த விசயம் அம்பலப்படுத்துகிறது என்றார்.

அதேபோல் காத்துவா, உன்னா ஆகிய இடங்களில் குழந்தைகள், சிறுமிகள் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட கொடூர சம்பவங்களில் சட்டப்படி உறுதியான நடவடிக்கை எடுப்பதற்கு மாறாக இதுபோன்ற கொடூர பாலியல் வன்கொடுமை கொலைக் குற்றங்களுக்கு அரசியல், மதவாத சாயம் பூசி திசை திருப்புவதற்கு பாஜகவின் உயர்மட்டத் தலைவர்களே முன்னின்று முயன்றனர். இந்த விசயத்திலும் பிரதமர் மிகத்தாமதமாகவே வாய் திறந்தார்.
இந்த விசயத்தில் பாலியல் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை தரும்படி சட்டத் திருத்தம் செய்ய வேண்டும் என அவர்கள் பேசுவது பிரச்சனையில் சரியான நடவடிக்கை எடுப்பதற்கு பதிலாக, அதில் கறை படிந்த தங்கள் கட்சியினர் மீதுள்ள கவனத்தை திசை திருப்புவதற்கே நாடகமாடுகின்றனர்.

மாற்றுத் திறனாளிகளுக்கான உரிமைச் சட்டம் நிறைவேற்றப்பட்ட பிறகும், அந்த சட்டத்தை நிறைவேற்ற அரசு உரிய நடவடிக்கை எடுக்கவில்லை, போதுமான நிதி ஒதுக்கப்படவில்லை. எனவே இந்த சட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது என்றும் பிருந்தா காரத் கூறினார்.

Leave A Reply

%d bloggers like this: