ராய்பூர் :

மத்தியில் பாஜக ஆட்சிக்கு வந்த கடந்த நான்கு வருடங்காளாக பசுவதை என்ற பெயரில் பாஜக ஆளும் மாநிலங்களில் திட்டமிட்டு நடத்தப்படும் வன்முறை சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன.

அதன் தொடர்ச்சியாக தற்போது ஜார்க்கண்ட் மாநிலத்திலும் பசுவின் பெயரில் வன்முறை தலைவிரித்தாடுகிறது. கொடேர்மா மாவட்டத்திலுள்ள நவாதியி கிராமத்தில்  60 முஸ்லீம் குடும்பங்களும், 50,000 இந்து குடும்பங்களும் வசித்து வருகின்றன. முஸ்லீம் பிரிவைச் சார்ந்த ஜும்மன் மியான் என்பவர் தனது மகனின் திருமண வரவேற்பு விழாவை அவரது வீட்டில் நடத்தினார். இந்நிலையில் திருமண விழாவில் மாட்டு இறைச்சி விருந்து நடப்பதாக சங்பரிவார் அமைப்பினர் தகவலை பரப்பியிருக்கின்றனர். இதையடுத்து சங்பரிவார் அமைப்பைச் சார்ந்த ஆயிரத்துக்கும் அதிகமானோர் திருமண வீட்டை சூழ்ந்து கொண்டு சூறையாடினர். அங்கு இருந்த பொருள்கள், பீரோ போன்றவற்றை உடைத்தனர் மற்றும் ஜீம்மன் மியானையும் தாக்கினர். பின்பு, அப்பகுதியில் உள்ள முஸ்லீம் சிறுபான்மையினரின் வீடுகளை அடித்து நொறுக்கினர்.

இதில், 17 இருசக்கர வாகனங்கள், 2 கார்கள் மற்றும் 2 வேன்களையும் சேதப்படுத்தியதோடு, ஒரு முஸ்லீம் தொழுகை நடத்தும் இடத்தையும், மத நூல்களையும் எரித்து வன்முறையில் ஈடுபட்டுள்ளனர். மேலும், திருமண வீட்டில் இருந்த 2.3 லட்சம் ரூபாய் பணத்தையும், 60 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள நகையையும் எடுத்துச் சென்றுள்ளனர்.

இது இப்பகுதி சிறுபான்மை மக்களிடையே அச்சுறுத்தலை ஏற்படுத்தவே இந்த சம்பவத்தை திட்டமிட்டு நடத்தியுள்ளனர் என்று சம்பவத்தை நேரில் பார்த்த மக்கள் சிலர் கூறினர். இச்சம்பவத்தில் தொடர்புடய 7 பேரை கைது செய்துள்ளதாக கொடேர்மா மாவட்ட கண்காணிப்பாளர் சிவானி திவாரி கூறினார்.

Leave A Reply

%d bloggers like this: