முகமது அமீன் நகர் (ஹைதராபாத்):                                                                                                                                         மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 22 ஆவது அகில இந்திய மாநாட்டு பணிகளில் ஈடுபட்டுள்ள தொண்டர்களின் செயல்பாடு மனதினை நெகிழச்செய்கிறது. மாநாட்டு நிகழ்வுகளுக்கும், தலைவர்களுக்கும், பிரதிநிதிகளுக்கும் எவ்வித இடையூறு இல்லாதவாறு மிகுந்த அன்புடனும் கட்டுப்பாடுடனும் தங்களது பணிகளை மேற்கொள்கின்றனர். பிரதான மாநாட்டு அரங்கிற்குள் நுழைய அனுமதிக்கப்பட்டவர்கள் தவிர வேறு யாரையும் அவர்கள் தலைவர்களேயானாலும் அனுமதிப்பதில்லை. காலை முதல் நள்ளிரவு வரையிலும் அவர்கள் மிகவும் சுறுசுறுப்புடன் அவரவர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள வேலைகளில் இயங்குகிறார்கள்.7 வயது சிறுவன் நவ்தேஷ் முதல் 70 வயது கோட்டீஸ்வரராவ் வரை அனைவரும் உற்சாகத்துடன் இப்பணிகளில் ஈடுபட்டு வருகிறார்கள்.

மாநாட்டின் பிரதான அரங்கான ஆர்டிசி மண்டபத்தில் சமையல் பணிகள், அரங்க கண்காணிப்பு, உணவு பரிமாறுதல், உபசரிப்புப் பணிகளில் 300 தோழர்கள் ஈடுபட்டுள்ளார்கள். அதன் மறுபுறத்தில் உள்ள விஎஸ்டி வளாகத்தில் 80 பெண்கள் உள்ளிட்ட 140 தொண்டர்களும், பிரதிநிதிகள் தங்குமிடத்திலிருந்து அவர்களை அழைத்துச் சென்றுவரும் போக்குவரத்து பணிகளில் 190 தோழர்களும் ஈடுபட்டு வருகிறார்கள். இது தவிர என்டிஆர் ஸ்டேடியத்தில் நடைபெற்று வரும் கலாச்சார மற்றும் கண்காட்சி அரங்கில் சுமார் 400 தொண்டர்கள் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

மாநாட்டு அரங்குகளின் துப்புரவுப் பணி முதல் தொழிற்நுட்பப் பணிகள் வரையிலான அனைத்து வேலைகளிலும் கட்சியின் ஊழியர்களே முழுமையாக செயல்படுகின்றனர். வாகனங்களை போக்குவரத்து அரங்க ஊழியர்கள் 40 பேர் மாநில போக்குவரத்து ஊழியர் சங்க பொதுச்செயலாளர் வி.எல்,ராவ் தலைமையில் இயக்குகிறார்கள். மின்வாரியப் பொறியாளர்கள் உள்ளிட்ட மின்வாரிய ஊழியர்கள் இரவு பகலாக மின் தடங்கலின்றி பராமரித்து வருகிறார்கள்.கட்சியின் மூத்த தலைவர்கள், முழு நேர ஊழியர்கள், மாதர், வாலிபர், மாணவர் சங்க ஊழியர்கள், ஓய்வு பெற்ற அரசு ஊழியர்கள், மருத்துவர்கள் உள்ளிட்டோர் தொண்டர் பணிகளில் ஈடுபட்டு வருகிறார்கள். தொண்டர் குழுவிற்கு சிஐடியு தெலுங்கானா மாநிலச் செயலாளர் பி.மது தலைமையற்று வழிநடத்துகிறார்.

மிகவும் கணிசமான மாத ஊதியத்தை பெறும் மத்திய பொதுத்துறை நிறுவனங்கள் மற்றும் ஐடி நிறுவனங்களிலும் பணியாற்றும் 40 தோழர்கள் பிரதிநிதிகளுக்கு உணவு பரிமாறும் பணிகளில் தயக்கமின்றி ஈடுபட்டு வருகிறார்கள்.  மூத்த மருத்துவர்கள் ரோஜா, சுஜாதா, ரமா ஆகியோர் தலைமையிலான மருத்துவக் குழு முழு நேரமும் அரங்கில் தங்கி பணியாற்றுகிறது.

குவியும் உணவுப் பொருட்கள்

பிரதிநிதிகள் மாநாடு நடைபெறும் மண்டபத்தின் சமையல் கூடத்தில், சுமார் 1100 பேருக்கான உணவும், அருகாமையில் உள்ள விஎஸ்டி வளாகத்தில் சுமார் 1500 பேருக்கான உணவும் தினசரி மூன்று வேளைகளுக்கும் தயாரிக்கப்படுகிறது.பிரதிநிதிகள், பார்வையாளர்கள், பத்திரிகையாளர்கள், தொண்டர்கள், அரசு நிர்வாகத்திலிருந்து மாநாட்டிற்கு முகாமிட்டுள்ள அதிகாரிகள், பாதுகாப்புப் பணியில் உள்ள காவல்துறையினர், தீயணைப்புப் படையினர் உள்ளிட்ட சுமார் 2600 பேருக்கான உணவும் வழங்கப்படுகிறது,

மாநாட்டிற்கு தேவையான உணவுப் பொருட்கள் அனைத்தும் கட்சியமைப்புகள், மாவட்ட, வட்டாரக் குழுக்களே வழங்கியுள்ளன. ஆந்திர மாநிலத்திலிருந்து உயர் ரக மீன்கள் , அரிசி வழங்கப்பட்டன. விவசாயிகள் விளை பொருட்கள் அனைத்தையும் மாநாட்டிற்கு அள்ளி வழங்கியுள்ளனர். டீ கப் முதல் உணவு எண்ணெய், அரிசி, பருப்பு, இறைச்சி வகைகள் வரையிலான அனைத்துப் பொருட்களும் பங்களிப்பு வகையிலேயே பெறப்பட்டுள்ளதாகவும் மிகவும் அற்ப அளவே வெளியிலிருந்து விலைகொடுத்து வாங்கப்பட்டதாகவும் பொறுப்பாளர் மது தெரிவித்தார். சமையல் கலைஞர்கள் அவர்களின் முக்கிய உதவியாளர்கள் தவிர அனைத்து சமையல் உதவிகளையும் தொண்டர்களே செய்து வருகின்றனர்.மாநாட்டிற்கான பணிகளை தங்களுக்கு அளிக்கப்பட்ட மிகுந்த உயர் பொறுப்பாக கருதி கண்ணும் கருத்துமாக கடமையாற்றி வருகிறார்கள். கல்லூரி பேராசிரியர் முதல் ஆரம்பப் பள்ளி மாணவன் வரையிலான அனைத்து மட்ட ஊழியர்களும் செந்தொண்டர்களாகவே காட்சியளிக்கின்றனர்.

வெறிச்சோடும் மருத்துவ முகாம்

பிரதிநிதிகள் பார்வையாளர்களின் அவசர மருத்துவ உதவிகளுக்காக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள மருத்துவ முகாமில் போதுமான மருந்து மாத்திரைகள், பரிசோதனை கருவி வசதிகள் உள்ளன. இருப்பினும் உணவு, குடிநீர் பிரச்சனைகள் காரணமாக இதுவரை எந்தவொரு பிரதிநிதியும் மருத்துவ உதவிக்காக வரவில்லை எனவும் சாதாரண தலைவலி, அஜீரணம் என்றே சொல்லி மருந்து கேட்டுப் பெறுகிறார்கள். சில தோழர்கள் இரத்தம், பிரஷர் பரிசோதனை செய்து கொள்கிறார்கள் என மருத்துவர் சுஜாதா தெரிவித்தார்.

தொண்டர்களின் ஈடுபாட்டை கண்டு நாடு முழுவதும் வந்து மாநாட்டில் பங்கேற்றுள்ள பிரதிநிதிகள் தங்களது மனப்பூர்வமான பாராட்டுக்களை தெரிவிக்கின்றனர். கம்யூனிஸ்ட் ஊழியர்களுக்கே உரித்தான கட்டுப்பாடும், பொறுப்புணர்வும் ஹைதராபாத் கட்சி மாநாட்டிலும் மேலும் உறுதிப்படுத்தியுள்ளதை கட்சித் தலைவர்கள் மிக பெருமிதத்துடன் தெரிவித்தனர்.

 எஸ,ஏ,மாணிக்கம், 

Leave a Reply

You must be logged in to post a comment.