இடது முன்னணியால் பேணி பாதுகாக்கப்பட்ட மேற்கு வங்கம் தற்போது திரிணாமுல் காங்கிரஸின் கோட்டையாக மாறிவிட்டது என்றும், அங்கு இடதுசாரிகள் குறிப்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் செல்வாக்கு இழந்துவிட்டனர், பாரதிய ஜனதா கட்சி அங்கு வேகமாக வளர்ந்து இடதுசாரிகளைப் பின்னுக்குத் தள்ளிவிட்டனர் என்றும் முதலாளித்துவ ஊடகங்கள் தொடர்ச்சியாக பரப்பி வருகின்றனர்.

ஆனால் மேற்கு வங்கத்தில், இடதுசாரிகள் நிலை என்னவாக இருக்கிறது என்பது குறித்து இளம்தோழர்கள் ஒளிவு மறைவில்லாமல் வெளிப்படையாக எதார்த்த நிலையைத் தீக்கதிருக்காகப் பகிர்ந்து கொண்டனர்.

மேற்கு வங்கத்தைச் சேர்ந்த இளம் தோழர்கள் ஸ்ரீஜன் பட்டாச்சார்யா (வயது 25), பிரதிகியூர் ரஹ்மான் (வயது 27), சூரஜித் சர்க்கார் (வயது 26) ஆகியோர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 22ஆவது அகில இந்திய மாநாட்டு பிரதிநிதிகளாகப் பங்கேற்றிருக்கின்றனர். இதில் பிரதிகியூர் ரஹ்மான் இந்திய மாணவர் சங்கத்தின் மேற்கு வங்க மாநிலத் தலைவர், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் மாவட்டக்குழு உறுப்பினராக இருக்கிறார். இவர் இந்த மாநாடு தொடங்குவதற்கு இரண்டு நாட்களுக்கு முன்பாக காவல் துறையின் தடியடித் தாக்குதலை எதிர்கொண்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவிட்டு இங்கு வந்திருக்கிறார்.

அதேபோல்  ஸ்ரீஜன் பட்டாச்சார்யா மேற்கு வங்க மாணவர் சங்கத்தின் மாநிலச் செயலாளர். மார்க்சிஸ்ட் கட்சியின் இடைக்குழு உறுப்பினராக இருக்கிறார். இவரும் இம்மாநாட்டுக்கு முன்பாக காவல் துறையின் வழக்கைச் சந்தித்து சிறை சென்றுவிட்டு திரும்பி வந்திருக்கிறார். மற்றொருவர் மாணவர் சங்க மாநில செயற்குழு உறுப்பினர் சூர்ஜித் சர்க்கார் கட்சியின் மாவட்டக்குழு உறுப்பினராக செயல்பட்டு வருகிறார்.

கம்யூனிஸ்ட் கட்சியில் இளைஞர்களே இல்லை, முதியவர்கள் மட்டுமே இருக்கிறார்கள், இளைஞர்கள் யாரும் கம்யூனிஸ்ட் கட்சிக்கு வருவதில்லை என்ற கூற்று உண்மையல்ல என்பதற்கு சான்றாக, இவர்கள் முதல் முறையாக அகில இந்திய மாநாட்டுப் பிரதிநிதிகளாகப் பங்கேற்றிருக்கின்றனர்.

தற்போது வங்கத்தின் நிலை குறித்து கேட்டபோது, முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு மம்தா ஆட்சி மோசமான வன்முறை வெறியாட்டத்தைக் கட்டவிழ்த்து விட்டுள்ளது. மம்தாவின் அணுகுமுறை காரணமாக பாஜக, மதவெறி சக்திகள் மறுபக்கம் ஆதாயம் அடைந்து வருகின்றன. இந்த மிகச்சிக்கலான சூழலில் இடதுசாரிகள் கடும் அடக்குமுறையைச் சந்தித்தாலும் இப்போது அச்சப்படும் நிலையில் இல்லை. தாக்குதல்களை எதிர்கொண்டு துணிவுடன் எதிர்த்து நிற்கின்றோம்.

சமீபத்தில் கட்சியின் கிளை மாநாடுகள் முதல் இடைக்குழு, மாவட்ட மாநாடுகள், மாநில மாநாடு வரை உற்சாகத்தோடு நடைபெற்றிருக்கிறது. இதில் இளைஞர்கள் ஏராளமானோர் கட்சி அமைப்புகளில் புதிதாகப் பொறுப்புக்கு வந்துள்ளனர். குறிப்பாக வங்கம் முழுவதும் சராசரியாக 35 வயதுடைய சுமார் 300 தோழர்கள் கட்சியின் மாவட்டக் குழுக்களுக்குப் புதிதாகத் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். முதலாளித்துவ ஊடகங்கள் அவதூறு பரப்புவதைப் போல் இல்லாமல், அனுபவம் வாய்ந்த மூத்த தலைவர்களும், ஆர்வத்தோடு துடிப்பாகச் செயல்படும் இளம் தோழர்களும் சரி விகிதத்தில் கலந்த கலவையாக கட்சி அமைப்புகளில் தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளனர்.

குறிப்பாக இடது முன்னணி ஆட்சியை வீழ்த்துவதற்கு கிழக்கு மிட்னாபூர் மாவட்டத்தில் உள்ள நந்திகிராமில் மிகப்பெரும் பிரச்சனை ஏற்படுத்தப்பட்டது. இப்போது அந்த நந்திகிராம் மார்க்சிஸ்ட் கட்சி இடைக் கமிட்டிக்கு 26 வயதுடைய இளைஞர், மகாதேவ் புய்யா இடைக்குழுச் செயலாளராகத் தேர்வு செய்யப்பட்டிருக்கிறார்.

கட்சியில் இளைஞர்கள் மட்டுமின்றி, பெண்களின் பங்கேற்பும் ஊக்கமளிக்கக்கூடிய அளவுக்கு உள்ளது. கல்கத்தா பிளீனத்தில் தீர்மானிக்கப்பட்ட அளவுக்கு இளைஞர்கள், பெண்கள் கட்சி அமைப்புகளில் பொறுப்புக்கு கொண்டு வரப்பட்டுள்ளனர். வங்கத்தில் மம்தா மட்டுமே ஒரே பெண் தலைவர் கிடையாது. ஏராளமான பெண் தலைவர்கள் எங்களிடம் இருக்கின்றனர்.

மேற்கு வங்கத்தில் இருந்து பல ஆயிரம் பேர் வேலை தேடி தமிழ்நாட்டிற்கும் குறிப்பாக திருப்பூர் போன்ற நகரங்களுக்கு வருகின்றனரே? என்று கேட்டபோது, மம்தா ஆட்சியில் வேலையின்மை கடுமையாக அதிகரித்துள்ளது. இதனால் இளைஞர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர். மம்தா ஆட்சிக்கு வந்த இந்த ஏழெட்டு ஆண்டு காலத்தில் ஆரம்பத்தில் மம்தா ஆட்சி மீது இளைஞர்களுக்கு இருந்த ஈர்ப்பு இப்போது இல்லை. வங்கத்தில் வேலையில்லாததால்தான் அவர்கள் வேலை தேடி தமிழகத்தை நோக்கி வருகின்றனர், என்றனர்.

கட்சியை சீரமைத்து, புத்துணர்வோடு செயல்பட்டு வங்க மக்களின் முழுமையான நம்பிக்கையை மீளப் பெறுவதற்கு துணிச்சலோடு செயல்பட்டு வருகிறோம். தற்போது மம்தா ஆட்சியின் அராஜக, அடக்குமுறை ஆட்சிக்கு எதிராக அதிருப்தி பெருகி வரும் நிலையில் ஒரு பகுதி மக்கள் பாஜகவை நோக்கிப் போகிறார்கள். எனினும் கடந்த சுமார் நான்கு ஆண்டு கால மத்திய மோடி ஆட்சியின் செயல்பாட்டால் பெரும்பான்மையான மக்களிடம் பாஜகவின் மீதான கவர்ச்சி விலகி வருகிறது. இந்த சூழ்நிலையில் திரிணாமுல், பாஜக ஆகிய இரண்டுக்கும் எதிராக மார்க்சிஸ்ட் கட்சியினர் நம்பிக்கையோடு பணியாற்றி வருகிறோம். மக்களின் முழு நம்பிக்கையை பெற்று மீண்டும் அதிகாரத்துக்கு வருவதற்கு சில காலம் ஆகலாம். ஆனாலும் நாங்கள் வெற்றி பெறுவோம் என்று அந்த இளைஞர்கள் கண்களில் நம்பிக்கை ஒளியோடு உறுதி தெரிவித்தனர்.

செய்திகள்: வே.தூயவன்

படங்கள்:

Leave a Reply

You must be logged in to post a comment.