முகமது அமின் நகர் ஐதாராபாத் ஏப். 20 -=

திரிபுராவில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஊழியர்கள் மீது பாஜக ஆர்எஸ்எஸ் குண்டர்களால் தொடுக்கப்படும் தாக்குதல்களை மார்க்சிஸ்ட் கட்சியின் 22வது அகில இந்திய மாநாடு தனது வன்மையான கண்டத்தை தெரிவித்துள்ளது, இதுகுறித்து நிறைவேற்றப்பட்ட தீர்மானம் வருமாறு:

திரிபுரா மாநிலம் முழுவதும் ஆர்எஸ்எஸ், பாஜக மற்றும் ஐபிஎப்டி கூட்டணியின் குண்டர்கள் மார்க்சிஸ்ட் கட்சி மற்றும் இடதுசாரி ஊழியர்கள் மீது பயங்கரத் தாக்குதல்களை கட்டவிழ்த்து விட்டுள்ளதற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 22ஆவது அகில இந்திய மாநாடு தனது வன்மையான கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறது. முன்கூட்டியே மையப்படுத்தி திட்டமிடப்பட்ட பாசிச குணம் கொண்டவை என்பதை இந்த தாக்குதலின் தன்மை அம்பலப்படுத்தியுள்ளது.

எங்கள் கட்சி அமைப்பை செயலற்றதாக்கவும், எங்கள் தோழர்கள் முழுமையாக உழைக்கும் மக்களைத் தொடர்பு கொள்வதை தடுக்கும் விதத்திலும் இந்த தாக்குதல்கள் திட்டமிட்ட முறையில் ஏவப்பட்டுள்ளன.

இடதுசாரிகளின் நீண்ட கால வர்க்க மற்றும் வெகுஜனப் போராட்டங்களின் மூலமாகவும், 25 ஆண்டு கால இடது முன்னணி அரசின் ஆக்கப்பூர்வ பங்களிப்பின் காரணமாகவும் ஏற்படுத்தப்பட்ட அமைதியான, ஜனநாயகப்பூர்வ, மதசார்பற்ற சூழலை வலதுசாரி சக்திகள் சீர்குலைத்திருக்கின்றன

திரிபுரா மாநில தேர்தல் முடிவுகள் வெளியான 2018 மார்ச் 3ம் தேதி முதல் ஏப்ரல் 10 வரையிலான காலத்தில் கீழ்கண்ட தாக்குதல் சம்பவங்கள் நடந்துள்ளன. கட்சி அலுவலகங்கள் மீது 438 தாக்குதல்கள் தொடுக்கப்பட்டுள்ளது. (இதில் 93 அலுவலகங்கள் தீக்கிரையாக்கப்பட்டுள்ளன. 230 அலுவலகங்கள் சூரையாடப்பட்டுள்ளன. 63 அலுவலகங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. 52 அலுவலங்கள் மிரட்டி பூட்டப்பட்டுள்ளன.) இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட கட்சித் தலைவர்கள், ஊழியர்கள், ஆதரவாளர்கள் நேரடியாகத் தாக்கப்பட்டுள்ளனர். 164 தொழிற்சங்க மற்றும் வெகுஜன அமைப்புக்களின் அலுவலகங்கள் தாக்கப்பட்டுள்ளன. (இதில் 3 அலுவலகங்கள் தீக்கிரையாக்கப்பட்டும், 4 அலுவலகங்கள் சூரையாடப்பட்டு கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. 154 அலுவலகங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. 3 அலுவலகங்கள் மிரட்டிப் பூட்டப்பட்டுள்ளன.) இடதுசாரி ஊழியர்கள் மற்றும் ஆதரவாளர்களின் வீடுகள் மற்றும் கடைகள் மீது 2084  தாக்குதல் நடத்தப்பபட்டுள்ளன.  (இதில் 902 வீடுகள் எரிக்கப்பட்டும், 822 வீடுகள் தாக்கப்பட்டு சூரையாடப்பட்டுள்ளன, 145 கடைகள் தகர்க்கப்பட்டுள்ளன. 186 கடைகள் சூரையாடப்பட்டு கொள்ளையிடப்பட்டுள்ளது. 29 மீன் வளர்ப்பு பண்ணைகளில் விஷத்தை கலந்துவிட்டுள்ளனர். 41 ரப்பர் மரங்கள் வெட்டி அழிக்கப்பட்டுள்ளன. 44 இருசக்கர மற்றும் மோட்டார் வாகனங்கள் அழிக்கப்பட்டுள்ளன.

பல்வேறு தன்மைகளில் பயங்கரவாத தாக்குதல்கள் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளன. தேர்ந்தெடுக்கபட்ட அமைப்புகளில் உள்ள மார்க்சிஸ்ட் கட்சி உறுப்பினர்கள் கட்சியில் இருந்து ராஜினாமா செய்ய வேண்டும் அல்லது அவர்கள் வகிக்கும் பதவியை கைவிட வேண்டும் என நிர்பந்தம் செய்யப்படுகின்றனர். கட்சியின் ஊழியர்கள், ஆதரவாளர்கள் மீது பொய்யான கிரிமினல் வழக்குகள் பதிவு செய்யப்படுகின்றன.  நமது கட்சியின் நாளேடான “தேசர் கதா” மாநில அரசு அலுவலகங்களில் தடை செய்யப்பட்டுள்ளது. பாஜக குண்டர்கள் பத்திரிக்கை வினியோகத்தையும், விற்பனையையும் தடுக்கின்றனர். அரசு விளம்பரம் தருவதை நிறுத்திவிட்டது. நமது கட்சி ஊழியர்கள் வேலைகளில் சேர்வதில் இருந்து தடுக்கப்படுகின்றனர். அல்லது அவர்கள் வேலைகளில் இருந்து வெளியேற்றப்படுகிறார்கள். பெண்கள் மற்றும் இஸ்லாமியர்கள் மீது நேரடி தாக்குதல் தொடுத்த பல சம்பவங்கள் நடந்துள்ளன. ஆளும் கட்சி ஆதரவாளர்களால் பொது மக்கள் பணப்பறிப்புக்கும் உள்ளாக்கப்படுகிறார்கள். இடது முன்னணி ஆதரவாளர்களுக்குச் சொந்தமான நூற்றுக்கணக்கான வாகனங்களை சாலையில் இயக்க முடிவதில்லை. மார்க்ஸ், லெனின், சே குவேரா, பகத்சிங் சிலைகள் சேதப்படுத்தப்படுத்தப்பட்டுள்ளன அல்லது முற்றிலும் சிதைக்கப்பட்டுள்ளன.

இவை எல்லாவற்றுக்கும் மேலாக கொடூரமானது, கட்சியின் இளம் தலைவர்களான தோழர்கள் ராகேஷ் தர் (வயது 26) அஜென்தரா ரியாங் (28) ஆகியோர் மிகக் கொடூரமாகக் கொலை செய்யப்பட்டுவிட்டனர். நுற்றுக்கணக்கான இடதுசாரி ஊழியர்கள், ஆதரவாளர்கள் அவர்கள் உள்ளூரில் இருந்தும், வீடுகளை விட்டும் கட்டாயமாக வெளியேற்றப்பட்டுள்ளனர்.

திரிபுராவில் மார்க்சிஸ்ட் கட்சி மற்றும் இடதுசாரி சக்திகள் மீதான நிகழ்த்தப்பட்டுள்ள இந்த காட்டுமிராண்டித்தனமான தாக்குதல்களுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 22ஆவது அகில இந்திய மாநாடு கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளது.  அந்த மாநில ஊழியர்களுக்கு தனது ஒருமைப்பாட்டையும், மனப்பூர்வமான ஆதரவினை தெரிவித்துக் கொள்வதோடு, தாக்குதலை எதிர்கொள்ளும் மார்க்சிஸ்ட் கட்சி மற்றும் இடதுசாரிகளின் துணிச்சலான வீரர்களுக்கு தனது செவ்வணக்கத்தை தெரிவித்துக் கொள்கிறது. திரிபுராவின் நிகழ்ந்து வரும் இக்கொடுமைகளுக்கு எதிராக நாடு முழுவதும் உள்ள கட்சி ஊழிர்களும் ஜனநாயகத்தை நேசிக்கும் அனைத்து மக்களும் கண்டனம் எழுப்பியும், எதிர்ப்பு இயக்கங்களை மேற்கொண்டும் திரிபுராவின் மார்க்சிஸ்ட் கட்சி மற்றும் இடதுசாரி ஊழியர்களின் தீரமிக்க போராட்டத்திற்கு ஒருமைப்பாட்டை தெரிவிக்குமாறு அகில இந்திய மாநாடு அறைகூவல் விடுக்கிறது.

இந்த தீர்மானத்தை கட்சியின் மத்தியக்குழு உறுப்பினர் அசோக் தாவ்லே முன்மொழிந்தார். கேரள பிரதிநிதி எம்.பி.ராஜேஷ் வழிமொழிந்தார். ஒருமனதாக இந்த தீர்மானம் நிறைவேறியது.

Leave A Reply

%d bloggers like this: